Thursday, October 19, 2023
HomeArthamulla Aanmeegamபலி பீடம் வழிபாடு செய்யும் முறை!

பலி பீடம் வழிபாடு செய்யும் முறை!

கோவில் பலி பீடம் வழிபாடு செய்யும் முறை!

பெரும்பாலான ஆலயங்கள் அனைத்திலும் கொடி மரத்துக்கு அடுத்தபடியாக பலிபீடம் அமைத்து இருப்பார்கள். கொடி மரத்தை வழிபட்டு முடித்ததும் பலி பீடத்தை மனதார வழிபட வேண்டும். பலி பீடங்கள் பொதுவாக தாமரை மலர் போன்று அமைக்கப்பட்டிருக்கும். சில ஆலய பீடங்களில் சிற்பங்கள் இருக்கும். சில ஆலயங்களில் வெறும் பீடம் மட்டும் இருக்கும். திருப்பதி போன்ற ஆலயங்களின் பலி பீடத்துக்கும் தங்கக் கவசம் போர்த்தி இருக்கிறார்கள். இதன் மூலம் கருவறைக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் பலி பீடத்துக்கும் கொடுக்கப்படுவதை அறியலாம்.
பலி பீடம் என்றதும் அனைவர் மனதிலும் கோழி, ஆடு போன்றவற்றை பலி கொடுக்கும் இடம் என்ற எண்ணம் ஏற்படலாம்.

ஏனெனில், வேத காலத்தில் நம் முன்னோர்கள் வேள்வித்தூணாகவும், விலங்குகளை பலியிடும் மேடையாகவும் இருந்தவைதான் நாளடைவில் கொஞ்சம், கொஞ்சமாக உருமாறி இன்று கொடி மரமாகவும், பலி பீடமாகவும் வடிவெடுத்துள்ளன என்று சொல்கிறார்கள். எனவேதான் பலி கொடுக்கும் இடம் பலி பீடம் என்ற எண்ணம் பலரது மனதிலும் பதிந்துள்ளது. இதை உறுதிப்படுத்துவது போல கிராமங்களில் இன்றும் கோயில்களில் திருவிழாக்களின்போது பலி பீட மேடையில் ஆடு, கோழிகளை பலி கொடுப்பதைப் பார்க்கலாம். இது தவறு.

ஆகம விதிகளின்படி அமைக்கப்பட்டுள்ள சிவாலயங்களிலும், வைணவத் தலங்களிலும் உள்ள பலி பீடங்கள், நம் வாழ்வை மேம்படுத்தும் ஒன்றாகக் கருதப்பட்டு போற்றப்படுகின்றன. அந்த ஆலயங்களில் பலி பீடங்களில் உயிர்கள் பலி கொடுக்கப்படுவது இல்லை. அதற்கு பதில் நம்மிடம் உள்ள மோசமான குணங்களை அங்கு பலியிடுகிறார்கள். எவ்வளவுதான் பக்குவப்பட்ட பெரிய மனிதர்களாக இருந்தாலும் அவர்களின் ஆழ்மனதிலும் கெட்ட குணங்கள் இருக்கும். இப்படி கெட்ட குணத்துடன் கருவறை பகுதிக்கு நாம் சென்றால் கடவுள் நமக்கு எப்படி அருள்புரிவார்? மனம் எந்த ஆசாபாசமும் இல்லாமல், தெள்ளத்தெளிவாக, சுத்தமாக, வெற்றிடமாக இருந்தால்தான் நம் பக்கம் இறைவன் வருவார்.

எந்த எதிர்பார்ப்பும் இல்லாத மனநிலை உடையவர்களால்தான் கடவுள் பக்கம் செல்ல முடியும். எனவே, நம் மனதில் உள்ள தீய குணங்களை எல்லாம் வெளியேற்ற வேண்டும். அதாவது கெட்ட நினைவுகளை பலி கொடுக்க வேண்டும். இது ஆலய வழிபாட்டில் மிகவும் முக்கியமானது. ஏனெனில், நாம் நம் மனதில் உள்ள தீய அழுக்குகளை விரட்டும்போது நாம் நல்ல மனிதனாக மாறி விடுவாம். இத்தகைய அற்புத மாற்றத்தை ஒவ்வொரு பக்தனிடமும் ஏற்படுத்தும் அருமையான இடம்தான் பலிபீடம். உயிர்ப்பலி இல்லாத இந்த ஆன்மிகப் பலி பீடம் மிக உன்னதமானது.

பலி பீடத்தை வணங்குதல்:

பலி பீடத்தை அமைப்பதற்கு என்று விதிகள் உள்ளன. பலி பீடத்தின் உயரம், மூலஸ்தானத்தில் எழுந்தருளியுள்ள மூலவரின் பீடத்து உயரத்துக்கு சமமாக இருக்க வேண்டும். பலி பீடத்தில் பாதுகா, ஜகதி, குமுதம், குமுத பத்திகம், கலா கம்பம், நிதிரவம், சுபோதம், அசுரபத்தி, பத்மம் என்று பல வகைகள் உள்ளன. பலி பீடத்தை பொதுவாக பத்ரலிங்கம் என்று அழைப்பர்.

சிவாலயங்களில் பலி பீடத்தின் அருகில் இருக்கும் நந்தி எனும் ஆன்மாவில் உள்ள ஆணவ மலம், பலி பீடத்தில்தான் ஒதுங்கியிருக்கும். எனவே, பலி பீடம் அருகே சென்றவுடன் ஆணவம், மாயை, கன்மம் ஆகிய நமது மும்மலங்களையும் பலியிடுதல் வேண்டும். ‘நான்’ என்ற அகங்காரத்தை பலியிட வேண்டும். சிலர் எல்லாமே நம் ஒருவரால்தான் நடக்கிறது என்ற இறுமாப்புடன் இருப்பார்கள். அந்த இறுமாப்பை பலிபீடம் அருகில் நின்று பலியிட வேண்டும்.

பிறகு பலிபீடம் அருகில் தரையில் விழுந்து வணங்க வேண்டும். ஆலயத்தின் கருவறை வடக்கு, மேற்கு திசையை பார்த்தபடி இருந்தால், பலி பீடத்தின் இடது பக்கத்திலும், கருவறை கிழக்கு மற்றும் தெற்கு நோக்கி இருந்தால் பலி பீடத்தின் வலது பக்கத்திலும் நின்று வணங்க வேண்டும். மூலவருக்கு அபிஷேகம் நடக்கும் போதோ அல்லது சுவாமிக்கு நைவேத்தியம் படைக்கும்போதோ பலி பீடத்தை வழிபடுதல் கூடாது.
பலி பீடத்தை வழிபட்டு முடித்ததும், நம் மனதில் மேலான எண்ணங்கள்தான் உள்ளன என்ற நினைப்பை உருவாக்கிக்கொள்ள வேண்டும்.

அந்த நல்ல மன நிலையுடன் கருவறை அருகில் சென்று இறைவனை வழிபடும்போது, அவர் அருள் நம்மை ஆக்கிரமிக்கும், ஆசீர்வதிக்கும். பலி பீடத்தை பலி நாதர் என்றும் சிலர் சொல்வர். பலி பீடத்துக்கு மாயச் சக்கரம் என்றும் ஒரு பெயர் உண்டு. அதாவது நமது பிறப்பு, இறப்பு எனும் மாயச் சக்கரமாக பலி பீடத்தைக் கருதுகிறார்கள். இதை சுற்றி வந்து வழிபட்டால் ஸ்தூல, சூட்சும, காரண, சரீரங்களில் இருந்து என்னை விடுவித்து விடு என்று வேண்டுவதற்கு சமமாகும்.

பொதுவாக, கோயில்களில் எட்டு மூலைகளில், எட்டு பலி பீடங்கள் அமைத்திருப்பார்கள். அவை இந்திரன், அக்னி, எமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன் எனும் எட்டு திக் பாலகர்களை உணர்த்துகிறது. இந்த எட்டு பலி பீடங்களும் ஒவ்வொரு கோயிலின் ஆகம விதிகளுக்கு ஏற்ப பிராகாரங்களில் அமைக்கப்பட்டிருக்கும். இவற்றுக்கு தலைமை பலி பீடமாக நந்தி பகவானின் பின்புறம் உள்ள பலி பீடம் அமையும். பொதுவாக, தலைமை பலி பீடம், மூலவ மூர்த்தியின் பாதங்களை தாமரை வடிவில் தாங்கியதாக இருக்கும்.

சில கோயில்களில் பலி பீடத்தின் அடியில் பக்தர்கள் உப்பும், மிளகும் போட்டுச் செல்வார்கள். ‘உப்பாகிய உடம்பையும் மிளகாகிய ஆணவத்தையும் இறைவனிடம் அர்ப்பணித்து விட்டேன்’ என்பதையே இது காட்டுகிறது. சக்தி தலங்களில் தலைமை பலி பீடம் தவிர, பிராம்மி, மகேசுவரி, கவுமாரி, வைஷ்ணவி, வாராகி, இந்திராணி, சாமுண்டி எனும் சப்த மாதாக்களை உணர்த்தும் பலி பீடங்களும் அமைத்திருப்பார்கள்.

அந்த பலி பீடங்களையும் மறக்காமல் வழிபட வேண்டும். பலி பீடம் முன்பு நின்று ஆத்மார்த்தமாக வழிபட்டால், நம்மிடம் உள்ள தேவையற்ற காமம், ஆசை, கோபம், தீராத பற்று போய், நெறி பிறழாத தன்மை உண்டாகும். மனதில் பேராசை வரவே வராது. உயர்வு – தாழ்வு மனப்பான்மை விலகும். வஞ்சகக் குணம் நம்மைவிட்டு விலகும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 × four =

Most Popular