ஸ்ரீரங்கம் பங்குனிஉத்திர சேர்த்தி சேவை வைபவம்

428

பெரியபிராட்டியார் திருவடிகளே சரணம்.

பங்கயப் பூவிற் பிறந்த பாவைநல்லாள் வாழியே
பங்குனியில் உத்திரநாள் பாருதித்தாள் வாழியே

மங்கையர்கள் திலகமென வந்தசெல்வி வாழியே
மாலரங்கர் மணிமார்பை மன்னுமவள் வாழியே

செங்கமலச் செய்யரங்கம் செழிக்கவந்தாள் வாழியே
சீரங்க நாயகியார் திருவடிகள் வாழியே.

வைணவ தலங்களில் முதன்மையாகத்திகழும் ரங்கநாதர் திருத்தலமாம் ஸ்ரீரங்கத்தில் சேர்த்தி சேவை வைபவம் பங்குனி மாதம் நடைபெறும்
“ஆதி பிரம்மோற்சவம்’ விபீஷணனால் தொடங்கப்பட்டது

இதன் ஆறாம் நாள் உற்சவத்தின்போது உறையூரில் அருள்பாலிக்கும் சோழகுல வல்லியான கமலவல்லி நாச்சியார் சந்நிதிக்கு நம்பெருமாள் செல்லும்போது புத்தாடை, சந்தனம், திலகம், மாலை அணிந்து புதுமாப்பிள்ளை போல் காட்சி கொடுப்பார்.

பின்னர் தான் அணிந்த மலர் மாலையை கமலவல்லி நாச்சியாருக்கு அணிவித்து, நாச்சியாரின் மாலையை தான் வாங்கி அணிந்துக் கொள்வார்.பின்னர் இருவரும் திருமணக்கோலத்தில் சேவை சாதிப்பார்கள்.

ஸ்ரீரங்கத்தில் சேர்த்தி வைபவம் மிகவும்
சுவாரஸ்யமாக சிறப்பாக நடைபெறும்..!

ஸ்ரீரங்கநாதரான அழகிய மணவாளன், ஒரு பங்குனி மாதத்தில் உறையூர் அருகே வேட்டையாடச் சென்ற போது கமலவல்லியைச் சந்தித்தார்.

ஸ்ரீ கமலவல்லியே சோழ மன்னனின் மகளாகப் பிறந்திருந்தார்.

இருவரும் ஒருவரை ஒருவர் விரும்பினர். பின்னர் கமலவல்லியைத் திருமணம் செய்த ரங்கநாதர், இரண்டு நாட்கள் உறையூரில் தங்கிவிட்டு, ஸ்ரீரங்கம் திரும்பினார்.

அன்றைய தினம் பங்குனி உத்திரம்; ரங்கநாயகி தாயாரின் ஜென்ம நட்சத்திரத் திருநாள்!

ஸ்ரீரங்கநாதர்- கமலவல்லி தாயார் திருமணத்தகவல் ஸ்ரீரங்கநாயகி தாயாரை எட்டியது. எனவே ரங்கநாதர் மீது கடுங்கோபத்தில் இருந்தார் தாயார்.

ரங்கநாயகி தாயாரை சமாதானப் படுத்த ஏதாவது சொல்லிச் சமாளிக்கலாம் என்று எண்ணிய ஸ்ரீரங்கநாதர், “காவேரி ஆற்றைக் கடக்கும்போது, நீ அணிவித்த மோதிரம் தவறி விழுந்து விட்டது. அதைத் தேடிக் கண்டெடுக்க காலத்தாமதம் ஆகிவிட்டது’ எனக் கூறினார்.

எனினும் தாயாருக்கு கோபம் தணியவில்லை. இந்த ஊடலை அறிந்த நம்மாழ்வார்,அவர்களை சமாதானப்படுத்த முயன்றார்.

பின்னர் ரங்கநாதர் உண்மையை ஒப்புக் கொண்டதால், நம்மாழ்வார் சொற்படி ரங்கநாயகி நாச்சியார், பெருமாளை ஏற்றுக் கொண்டார்.

இதையொட்டி கொண்டாடப்படும் வைபவத்தை
“சேர்த்தி’ என்று போற்றுவர்.

ஆதி பிரம்மோற்சவத்தின் ஒன்பதாம் நாளான பங்குனி உத்திரத்தன்று “நம்பெருமாள்’ சித்திரை மாதம் உத்திர வீதிகளில் வலம் வந்து தாயார் சந்நியில் எழுந்தருள்வார். அப்போதுதான் சேர்த்தி வைபவம்
பங்குனி உத்திர மண்டபத்தில் நடைபெறும்.

பிறகு திருமஞ்சனம் முடிந்த பிறகு பெருமாளும் தாயாரும் தம்பதி சமேதராக சேவை சாதிப்பார்கள். இந்த உற்சவத்தை
“மட்டையடி உற்சவம்’என்றும் சொல்வார்கள்.

பத்தாம் நாள் ஸ்ரீ ரங்கநாச்சியாரை மூலஸ்தானத்தில் எழுந்தருளச் செய்த பின்னர், பெருமாள் “கோ’ ரதத்தில் (சிறிய தேரில்) எழுந்தருளி
திருவீதி உலா வந்து மூலஸ்தானத்தை அடைவார்.

ஸ்ரீரங்கநாயகி தாயார் படி தாண்டா பத்தினி என்பதால் கோ ரதத்தில் பெருமாளுடன் சேர்ந்து வருவதில்லை .

பதினோராம் நாளன்று பெருமாள், ஆடும் பல்லக்கில் புறப்பட்டு
திருவீதி உலா வரும் காட்சி, அனைவரும் சேவிக்க வேண்டிய ஒன்று.

ஆதி பிரம்மோற்சவ விழாவில் தாயாரையும் பெருமாளையும் ஒருசேர தரிசிக்கும் தம்பதிகளின் வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும் என்பது ஐதீகம்.

இந்த ஆண்டு அது நடைபெற இயலாது….

இதுவும் அவன் திருவுள்ளம் போல ..

எனவே கடந்த ஆண்டு நடந்தவைகளை மனதில் நிறுத்தி காத்திருப்போம்…

திருமகளும் மண்மகளும் சிறக்கவந்தோன் வாழியே..!
பங்குனியில் உத்திரநாள் பாருதித்தாள் வாழியே..!