அணிகலன்களின் தத்துவங்கள் பகுதி -1!
நாம் அணியும் அணிகலன்களில் ஆண்டவனை அறியும், அடையும் வழிகளை நமது ஆன்றோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள். அணிகளும், அணிகலன்களும் ஆடைகளும் புருசனாம் ஸ்ரீ பகவானை நினைக்க வைக்கும் நினைவு முத்திரைகள் ஆகும். அணிகலன்கள் கூறும் அர்த்தமுள்ள தத்துவங்களை ஒவ்வொன்றாக ஆய்ந்து அறிவோமானால் அது பல தத்துவங்களை நமக்கு புலப்படுத்தும்.
திருமண்:
ஸ்ரீ வைணவர்கள் அணியும் திருமண்ணை சரீரத்தின் 12 உறுப்புகளில் அணியும் போது ஸ்ரீமன் நாராயணனின் 12 திருநாமங்களைக் கூறியவாறு அணிவதனால் திருமண் அணிந்த நிலையை திருநாமம் என்றே அன்புடன் மனித குலம் அழைக்கிறது. திரு என்றால் ஸ்ரீமகா விஷ்ணுவையும் மண் என்றால் பூமியில் சேரப் போகும் சரீரத்தையும் குறிக்கும், நாம் ஜீவன் அந்தர்யாமியான ஸ்ரீ பகவானின் ஒர் அம்சம். தினமும் ஸ்ரீ பகவானின் திருநாமங்களைக் கூறியவாறு திருமண் அணிந்து கொள்ளவேண்டும். இல்லையேல் அரிதான மானிடப்பிறவி வீணாகும் என்பதை திருமண் தத்துவம் கூறுகிறது.
மலர்கள்:
மலர்களை முதலில் இறைவனுக்கு சமர்ப்பணம் செய்துதான் பிறகு நாம் அணியவேண்டும், மலர்களைப் போல மானிடனும் பலப் பருவங்களை கடந்து இளமைப் பருவம் அடைகிறான், முடி நரைப்பது என்ற செயல் மானிடர்களக்கு மட்டுமே உண்டு, நரை வந்து விட்டால் துன்பமும் வரத்தொடங்கிவிடும். ஆகவே மலர் வாடும் முன் சமர்ப்பணம் செய்து விடுவது போலவே, இளமை முடிந்து முதுமைத் துவக்கத்தின் முத்திரையாம் நரை, நரை வரும் முன்பே மாந்தர்களே உள்ளம் என்ற மலரைப் பகவானுக்கு சமர்ப்பணம் செய்யுங்கள் என மலர்த் தத்துவம் கூறுகிறது.
திலகம்:
நமது பாரத தேசத்து பெண்களின் அணிகலன்களுக்கு எல்லாம் அழகுகூட்டுவது குங்குமம் ஆகும், அதனால்தான் குழந்தைப் பருவத்தில் நெற்றியில் அஞ்சனத் திலகமும், பின் பருவம் மடைந்தபின் சாந்துப் பொட்டும், திருமணம் ஆனதும் மஞ்சள் குங்குமத் திலகமும் அணியப்படுகிறது. திலகம் இட்டுக் கொள்வதால் நெற்றியில் வசிப்பதாக வேதங்கள் சொன்ன அலட்சுமியினால் ஏற்படக்கூடிய தீமைகள் விலகி நீண்ட ஆயுளும் சகல பாக்யங்களும் பெருகும். சுமங்கலி பெண்கள் நெற்றியில் குங்குமத்திலகமிட்டுப் பின்னர் தலையில் வகிடு தொடங்கும் பகுதியில் திலகம் அணிகின்றனர் அதுவே உச்சித் திலகம்.பிரமதேவனின் எழுத்தை அழிக்கும் திறன் கற்புத்தீயின் வடிவமான குங்குமத் திலகத்திற்கு உண்டு. சுமங்கலிப் பெண்கள் நிச்சயம் குங்குமத் திலகம் அணிய வேண்டும்.
