சங்கடங்களை தீர்க்கும் சங்கடஹர சதுர்த்தி வழிபாடு!
பொதுவாகவே மாசி மாதம் என்றாலே விஷேசம். மங்களம் நிறைந்த மாதம். இதனை மாங்கல்ய மாதம் என்று கூட சொல்வார்கள். அந்த மாதத்தில் வரும் சங்கடஹர சதுர்த்தி கூடுதல் விஷேசம். விநாயகப் பெருமானுக்கு இருக்கும் விரதங்களில் ஒன்று சங்கடஹர சதுர்த்தி. ஒவ்வொரு மாதமும் வரும் சதுர்த்தி திதியில் சங்கடஹர சதுர்த்தி விரதம் கடைபிடிக்கப்படுகிறது. பகல் முழுவதும் சாப்பிடாமல் விரதமிருந்து மாலை நேரத்தில் விநாயகப் பெருமானை தரிசனம் செய்ய வேண்டும்.
எல்லா வளங்களையும் தருபவர் விநாயகப் பெருமான். வணங்குவதற்கு எளிமையானவர். எந்தவொரு செயலையும் செய்வதற்கு முன்னதாக விநாயகப் பெருமானை வழிபட்டு அந்த செயலை செய்தால் வெற்றி உண்டு என்று சொல்வார்கள். எனினும், சதுர்த்தி திதி நாளில் வரும் சங்கடஹர சதுர்த்தி விரதம் கணபதிக்கு என்று உருவான விரதம். அதாவது, சங்கஷ்டம் என்றால், கஷ்டங்கள் சேர்தல். வாழ்வில் சேரும் எல்லா விதமான சங்கடங்களையும் நீக்கும் விரதம் தான் இந்த சங்கடஹர சதுர்த்தி விரதம். இந்த விரதம் தான் இன்று கடைபிடிக்கப்படுகிறது.
சதுர்த்தி என்றால் என்ன?
பௌர்ணமிக்கு அடுத்து வரும் 4ஆம் நாள் சங்கடஹர சதுர்த்தி. சங்கட என்றால் துன்பம். ஹர என்றால் அழித்தல் என்று பொருள்படும். துன்பங்களை அழிக்கும் விரதமே சங்கடஹர சதுர்த்தி. மாதந்தோறும் வரும் சங்கடஹர சதுர்த்தி நாள் அன்று விரதம் இருந்து விநாயகப் பெருமானை வழிபட குடும்பத்தில் சுபிட்சம், தடைகளின்றி எல்லா காரியங்களும் வெற்றியடையும்.
சதுர்த்தி தேதி, ஆரம்பிக்கும் நேரம், முடியும் நேரம்:
மார்ச் 10, வெள்ளி (இன்று)
ஆரம்பம் – மார்ச் 10, 2023 வெள்ளிக்கிழமை இரவு 09:23 மணி முதல்
முடியும் நேரம் – மார்ச் 11, 2023 சனிக்கிழமை இரவு 09.02 மணி வரை.
விரதம் இருக்கும் முறை:
சங்கடஹர சதுர்த்தி அன்று, அதிகாலையில் எழுந்து குளித்து முடித்து அருகிலுள்ள விநாயகர் கோயிலுக்கு செல்ல வேண்டும். விநாயகப் பெருமானை அருகம்புல் கொண்டு வழிபட்டு கோயில் பிரகாரத்தை 11 முறை வலம் வர வேண்டும். விநாயகரை வழிபட்ட பிறகு கோமாதாவையும் வழிபட வேண்டும். பச்சரியை ஊற வைத்து, அதனுடன் சிறிதளவு வெல்லம் சேர்த்து ஒரு வாழைப்பழம் கொண்டு பிசைந்து கோமாதாவிற்கு கொடுக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம் சங்கடஹர சதுர்த்தி நாளில் கூடுதல் நன்மை உண்டாகும் என்பது ஐதீகம்.
வீட்டிலேயே மோதகம், சித்ரான்னங்கள், பால், தேன், கொய்யா, வாழை, நாவல், கொழுக்கட்டை, சுண்டல் என்று செய்து விநாயகப் பெருமானுக்கு நைவேத்தியம் செய்து படைத்து வழிபாடு செய்ய வேண்டும். நினைத்த காரியம் நிறைவேற வன்னி மரத்தடி விநாயகரை வழிபட வேண்டும்.
