சனிபகவானுக்கு உகந்த விரதங்கள்..!

386

நவகிரகங்களில் நாம் அதிகமாக பயப்படுவது சனி பகவானுக்கு மட்டும்தான். சனிதோஷம் உள்ளவர்கள் இந்த விரதத்தினை பின்பற்றினால் தோஷத்தின் தாக்கம் குறையும்.

சனிக்கிழமைகளில் பூரண உபவாசம் இருந்து காக்கைக்கும், ஏழைகளுக்கும் அன்னதானம் வழங்க வேண்டும்.

சனிக்கிழமைகளில் ஒரு வேளை உணவுடன் விரதம் இருந்து சனிபகவான் ஸ்தோத்திரங்களை சொல்லி வழிபட வேண்டும்.

எள்ளை சுத்தம் செய்து, வறுத்து அதில் வெல்லம், ஏலக்காய் பொடி சேர்த்து இடித்து திலசூரணம் செய்து வெங்கடேசப் பெருமாளுக்கும், சனிபகவானுக்கும் படைத்து வணங்கலாம்.

சிறிது எள்ளை பொட்டலமாக கட்டி தினசரி இரவு படுக்கும்போது அதனை தலைக்கு அடியில் வைத்துக்கொண்டு படுத்து, காலையில் அதனை அன்னத்தில் கலந்து காகத்திற்கு 9 நாள் அல்லது 48 நாட்கள் அல்லது 108 நாட்களுக்கு அன்னமிடலாம்.

சனிக்கிழமைகளில் சனிபகவான் கோவிலில் ஒரு தேங்காயை இரண்டு பகுதிகளாக ஆக்கி, அதில் நல்லெண்ணெய் விட்டு எள் முடிச்சிட்டு தீபமாக ஏற்றலாம்.

சனிபகவானுக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து கருப்பு அல்லது நீல வஸ்திரம் சாத்தி, எள் சாதம், வடைமாலை செய்து வழிபாடு செய்து அனைத்தையும் அர்ச்சகர், அந்தணர், ஏழைகளுக்கு வழங்க வேண்டும்.

சனிபகவானுக்கு நவகிரக சாந்தி ஹோமங்கள் செய்து அபிஷேக, ஆராதனைகளும் செய்து தொடர்ந்து மண்டல பூஜை செய்யலாம்.

அவரவர்களது பிறந்த ஜென்ம நட்சத்திர தினத்தன்றோ அல்லது சனிபகவானுடைய பிறந்த நட்சத்திரமான ரோகிணி நட்சத்திரம் அன்றோ ஒவ்வொரு மாதமும் அல்லது ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் அர்ச்சனைகள் செய்வது மிக மிக நன்மைகளை தரும்.

தினசரி நவகிரகம் மற்றும் சனிபகவான் ஸ்தோத்திரங்களை பாராயணம் செய்யலாம்.

சங்கடந் தீர்க்கும் சனி பகவானே

மங்கலம் பொங்க மனம் வைத்தருள்வாய்

சச்சரவின்றி சனீஸ்வர தேவே

இச்செகம் வாழ இன்னருள் தா!

சனி தோஷம் நீக்கும் வழிபாடு :

சனியால் திருமண தோஷம் ஏற்பட்டிருந்தால், சனிக்கிழமையில் எமனையும், பிரஜாபதியையும் வழிபடுவது நல்லது. மாற்றுத் திறனாளிகளுக்கு உதவுவதும், ஹனுமன் சாலீஸா படிப்பதும் மிகவும் நல்லது. வன்னி சமித்தால் ஹோமம் செய்வதும், எள் தானம் செய்வதும் சிறப்பாகும்.

ஒருமுறை திருநள்ளாறு திருத்தலத்திற்கு சென்று, ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வரையும், சனி பகவானையும் முறைப்படி வழிபட்டு வாருங்கள். வயோதிகர்களுக்கும், ஆதரவற்றவர்களுக்கும் உதவுங்கள்.

தினமும் காகத்திற்கு சாதம் வையுங்கள். சனிக்கிழமைகளில் காகத்திற்கு உணவு வைத்த பின்னர் உணவு உண்ணுங்கள்.

சனிக்கிழமைகளில் சனிபகவானுக்கு எள்தீபம் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும்.