ஸ்ரீ இராமானுஜர் ஜெயந்தி ஸ்பெஷல்

237

அந்த காலத்தில் சூத்திரர்களும் பஞ்சமர்களும்தானே வர்ணாசிரம கொடுமையால் பாதிக்கப்பட்டவர்கள்.

இதையெல்லாம் ராமானுஜர் அறிந்தே இருந்தார்.

ஒரு நாள் காவேரி ஆற்றங்கரை மணலிலே நடுப்பகலிலே தனுர்தாசர் தன் மனைவியோடு நடந்துகொண்டிருந்தார்.

இந்த காட்சியை அந்த வழியாக வந்த ராமானுஜரும் பார்த்தார். வியப்புற்றார்.

ராமானுஜர் வியப்புறுவதற்குக் காரணம், அந்த தனுர்தாசர் தன்னுடன் வந்த மனைவி வெயிலிலே பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக அவளுக்கு குடைப் பிடித்துக் கொண்டு வந்தார். அவர்களை நிறுத்தினார் ராமானுஜர்.

‘’என்னப்பா… உனக்கு குடை பிடித்துக்கொள்ளாமல் உன் மனைவிக்கு மட்டுமே குடை பிடித்து வருகிறாயே?” என்று கேட்டார்.

இந்த கேள்வியை எதிர்கொண்ட தனுர்தாசர் ரொம்பவே வெட்கப்பட்டார்.

தன் கணவரே வெட்கப்படுவதைக் கண்டு குடைக்குள் இருந்த அவரது மனைவிக்கும் வெட்கம் தாங்க முடியவில்லை.

ராமானுஜர் சிரித்தார்.

‘’என்னப்பா… நான் கேள்வி கேட்கிறேன். நீ வெட்கப்பட்டுக் கொண்டிருக்கிறாயே… உன் மனைவி மீது அவ்வளவு ஈடுபாடா உனக்கு?” என்று திரும்பவும் கேட்டார்.

;’’சாமீ… நீங்க என்னை மதிச்சு பேசுறதே எனக்கு கிடைச்ச பெரும் பாக்கியம். என் மனைவியின் கண் ரொம்ப அழகாக இருக்கும். அவளை கண்ணழகி அப்படினுதான் கூப்பிடுவேன். நான் உறையூர் சோழ ராஜா அரண்மையில வேலை பார்க்குறேன். இன்னிக்கு உறவினர் வீட்டுக்குப் போகணும் அதான் வெயில்ல என் மனைவியோட கண் அழகு பாதிச்சுடக் கூடாதுனுதான் அவளுக்கு குடை பிடிச்சுட்டு வர்றேன்…’’ என்று பதில் சொல்லிவிட்டு மீண்டும் வெட்கப்பட்டுக் கொண்டார்

ராமானுஜர் இப்போது முன்பை விட வேகமாக சிரித்தார்.

‘’என்ன சாமி சிரிக்கிறீங்க?”

‘’ஒன்றுமில்லை. இவளது கண்ணழகுக்கே இத்தனை பிரயத்தனப்பட்டு சேவை செய்கிறாயே… இதை விட அழகான கண்களை நான் உனக்கு காட்டினால் என்ன செய்வாய்?””

ராமானுஜர் கேட்டதும் தனுர்தாசர் திக்குமுக்காடிப் போனார்.

‘’சாமீ… நீங்க காஷாயம் கட்டிக்கிட்டு இருக்கீங்க. பக்திமான்னு நினைச்சேன். சூத்திரனான என்னையும் பக்கத்துல கூட்டி வச்சு பேசுறீங்க. அதனால மத்தவங்க மாதிரி நீங்க தீண்டாமை பாக்குற ஆளு இல்லைனு தெரிஞ்சுக்கிட்டேன். ஆனால் என்ன சாமீ இப்படி சொல்றீங்க?

என் மனைவியை விட அழகான கண் ஏழேழு உலகத்துலயும் யாருக்கும் இல்ல சாமி.

நீங்க அப்படி ஒரு கண்ணழகு இருந்தா காட்டுங்க சாமீ…’’ என்றார்.

ராமானுஜர் அவரது மனைவியிடம் பேசினார்.

‘’தாயே… நீ ஒன்றும் கோபித்துக் கொள்ளாதே… உன் கணவனுக்கு நீதான் உலகம். உன் பெயர் என்ன?” என்றார்.

‘’பொன்னாச்சியார் சுவாமி ‘’ என்றார் அந்தப் பெண்.

‘’பொன்னாச்சியாரே… உமது கண்ணைவிட வேறு அழகான கண்களே இந்த உலகத்தில் இல்லை என்று ஏமாந்துகொண்டிருக்கிறான் உனது கணவன் தனுர்தாசன்.

ஆனால் சர்வ நிச்சயமாக உன்னை விட சிறந்த கண்ணழகு உலகத்தில் இருக்கிறது. வேறு எங்கும் தூரமெல்லாம் அலைய வேண்டாம்.

இதோ இந்த காவிரிக் கரையிலேயே இருக்கிறது.’’ என்று சொல்ல…

தனுர்தாசனின் கண்கள் சற்றே சிவக்க ஆரம்பித்தன.

‘’சாமீ…. எங்க குடும்பத்துக்குள்ள குழப்பத்தை ஏற்படுத்தாதீங்க… என் மனைவி பொன்னாச்சியார் கண்ணைவிட வேறு சிறந்த கண்ணழகு இந்த உலகத்திலேயே இல்லை.

இதை எங்கே வேண்டுமானாலும் வந்து சொல்லுவேன்’’ என்றார் கோபமாக,

ராமானுஜர் மீண்டும் சிரித்தார். சாந்த முகத்தோடு தனுர்தாதரிடம் கேட்டார்.

‘’அது சரி… நீ ஸ்ரீரங்கம் ரங்கனாதர் கோயிலுக்குள் சென்று அவரை தரிசித்திருக்கிறாயா?”” என்று கேட்டார்.

‘’என்ன சாமி… பேச்சை மாத்துறீங்க?’’ என்று கேள்வி கேட்டார் தனுர் தாசர்.

பதில் சொல்லப்பா… நீ ரங்கநாதர் கோயிலுக்குள் போய் பெருமாளை சேவித்திருக்கிறாயா இல்லையா?” என்று ராமானுஜர் மீண்டும் கேட்டார்.

‘’சாமீ… நாங்கள்லாம் எப்படி கோயிலுக்குள்ள போக முடியும், நீங்கள்லாம் மட்டும்தான் போக முடியும்.

எங்களுக்காகத்தான் கோபுரம் கட்டி வச்சிருக்காங்க. அதைப் பாத்துக்கிட்டே கும்பிட்டுக்கிட்டு போயிட்டே இருப்போம். என்னைதான் உள்ள விட மாட்டாங்களே…’’ என்றார் தனுர்தாசர்,

’’வா… நான் உன்னை அரங்கன் கோயிலுக்குள் அழைத்துச் சென்று அவன் சன்னிதிக்கும் அழைத்துப் போகிறேன்.

அங்கு வைத்து உன் பிரச்னையை தீர்த்துக் கொள்வோம்’’ என்றார் ராமானுஜர்.

தனுர்தாசரால் நம்பமுடியவில்லை.

ஆம். தனுர்தாசர் என்ற அந்த நான்காம் வர்ணத்து மனிதரை கையைப் பிடித்து திருவரங்கம் கோயிலுக்குள் அழைத்துச் சென்றார்.

இந்தக் காட்சியைப் பார்த்தவர்கள், ராமானுஜர் என்ன செய்கிறார் என்று திகைத்தனர்.

ராமானுஜர் தனுர் தாசரை தன் கையால் பிடித்து அழைத்துச் சென்று அரங்கன் சன்னிதிக்குள் நுழைந்தார்.

சயன கோலத்தில் விளக்கு ஒளியில் பிரகாசமாக மின்னிக் கொண்டிருந்தார் பெரிய பெருமாள்.

தனுர்தாசா… பார்… அங்கிருக்கும் பெரிய பெருமாளின் கண்ணைப் பார்.

இந்த கண்ணழகை விட அழகா உன் பொன்னாச்சியாரின் கண்ணழகு?”

ராமானுஜரின் கேள்வி தனுர்தாசரை திகைக்க வைத்தது.

கோயில் வாசல் வழியாக கடந்து செல்லும் நான்காம் வர்ணத்தானை சன்னிதிக்குள் கூட்டிசென்று பெரிய பெருமாளின் கண்ணழகை காட்டினார் ராமானுஜர்.

அன்றுவரை தன் மனைவிதான் கண்கள்தான் அழகு என்று இருந்த தனுர்தாசர்,, ‘’சாமீ… என் கண்ணை திறந்தீங்க.

நாங்க எட்டி நின்று பாக்குற தெய்வத்துக்கிட்டயே என்னைக் கொண்டுவந்து நிறுத்தி… கண்ணழகையும் காட்டிட்டீங்க.. என் மனைவிய விட பெருமாளின் கண் தான் அழகு’’ என்றார் கண்ணீர் விட்டபடி.

உய்ய ஒரே வழி…
உடையவர் திருவடி….