Sunday, October 15, 2023
HomeArthamulla Aanmeegamஶ்ரீசக்ரம் படும் பாடு

ஶ்ரீசக்ரம் படும் பாடு

சகல ஜீவராசிகளிலும் துளியும் பேதமின்றி நிறைந்து இருக்கும் ஶ்ரீ பராசக்தி எனும் பரபிரம்மமே (இறை ) க்ஷாட்ஷாத் ஶ்ரீ சக்ரம்..

மற்ற யந்திரங்களை போல தெய்வ பூஜை தனியே , யந்த்ர பூஜை தனியாக இல்லாமல் , ஶ்ரீ சக்ரமே மேருவாக , ஶ்ரீ சக்ரமே அந்த மகா திரிபுரசுந்தரி என்பது சத்தியத்திலும் சத்தியம் .

பல தலங்களில் கருவறையில் அம்பிகையின்றி ஶ்ரீசக்ரத்திற்கே அபிஷேகம் , வஸ்திரம் , அலங்காரம் பூஜைகள் நடக்கின்றன .. இந்த சக்தி மிகுந்த ஶ்ரீ சக்ரத்தை தரிசிக்க மட்டுமே மானிடருக்கு அருகதை உண்டு . அம்பிகையின் அந்த ஶ்ரீ சக்கரத்தில் 64 கோடி யோகினிகள் கோடி லட்சுமி கோடி வாணியர் சேவை செய்கின்றனர் .. அந்த ஶ்ரீ சக்ரத்தை வரைவதற்கு கூட விரதங்கள் நியமங்கள் உண்டு ..

பல தேவி சக்தி பீடங்களில் ஶ்ரீ சக்ர பிரதிஷ்டை செய்த ஆதிசங்கரர் , பலகோடி மந்திர உச்சாடனம் செய்து கடுமையான பூஜைகள் செய்தே சக்ர ஸ்பாதனம் செய்தார் .. அப்பேற்பட்ட புண்ணியகரமான தேவியின் ஶ்ரீ சக்ரத்தை உருவபடமாக வைத்து வழிபடுவதற்கு கூட அம்பிகையை பரபிரம்மமாக கருதி ஶ்ரீ சகஸ்ரநாமம் பூஜை செய்யவேண்டும் .

அப்படியிருக்க அந்த ஶ்ரீ சக்கரத்தின் வடிவத்தை பிம்பமாக செப்பு , வெள்ளி , தங்க தகடுகள் மீது தத்ரூபமாய் வரைந்து ஆராதனை செய்வதற்கு நிச்சயமாக ஶ்ரீ வித்யை உபாசனை பெற்று அதில் குறைந்த பட்சமாக ஶ்ரீ பாலா மந்திரம் தீட்சையாவது கண்டிப்பாக அடைந்து இருக்கவேண்டும் . கண பொழுதில் கோடிகோடி அதிர்வுகள் வெளியிடும் ஶ்ரீசக்ரத்தை மேரு வடிவில் சாதாரண வீடுகளில் வழிபடுவதற்கு வழிவகைகள் உண்டா என்பதை சிந்தித்து பார்கவேண்டுமே….
ஶ்ரீ வித்யா உபாசனை மார்க்கம் இல்லாதோர் ஒரு காட்சி பொருளாக கிடைத்திடும் ஸ்படிகம் , பஞ்சலோக , தங்கத்தால் ஆன ஶ்ரீ சக்ர மேருவை நிச்சயமாக வைத்திருத்தல் நல்லதென்று.. அத்தனை கோடானு கோடி யோகினிகளுக்கு நைவேத்தியம் படைத்தல் , அர்ச்சனை , அபிசேகம் , புஷ்பங்கள் சமர்பித்தல் மந்திரம் செபித்து பலிபூஜைகள் செய்வித்தல் என்பது சாத்தியம் இல்லாத ஒன்று .

பரதேவதையான ஶ்ரீ காமாக்ஷி தேவிக்கே உரித்தானது ஶ்ரீ சக்ர தங்க பதக்க மாலை . ஆனால் இன்று ஶ்ரீ சக்ர செயின்கள் பல மகான்கள் கழுத்தில் தொங்குவதைக் காணும் போது அதிர்ச்சி கலந்த பயம் வருகின்றது ..

காமாட்சி அம்பாள் திருமாங்கல்யத்திற்கு நிகராக தன் நெஞ்சில் சுமக்கும் நவரத்தின,வைர ஶ்ரீ சக்ரம் சாதாரண மானுடர்கள் கழுத்திலா .. சிவ சிவ ..

இவை ஒருபக்கமிருக்க திரைப்படங்களில் பெரும்பாலான பேய் கதைகள் முடிவில் செருப்புகாலோடு , தலைவிரியோடு சகிக்கவும் முடியாத கோலத்தில் பேய் பிடித்த நடிகர்களை மாபெரும் ஶ்ரீ சக்ர கோலத்தில் ஶ்ரீ காமாட்சிதேவி அமரும் கோண மத்தியில் ( பிந்து ஸ்தானத்தில் ) அமரவைத்து வசனங்கள் பேசுகின்றனர் ..

மற்றொரு பக்கமோ வீடுகளில் அழகாக இருக்கட்டும் என்று வெள்ளிக்கிழமைகள் பௌர்ணமி தினங்களில் ஶ்ரீ சக்ரத்தையே சாதாரணமாக கோலமாக வரைகின்ற தாய்மார்கள் ..

சிறிதும் மனசாட்சி இல்லாமல் ஶ்ரீ சக்ர யந்திரத்தை கையில் கொடுத்து காசு வாங்கி கொண்டு பூஜை செய்துகொள் என ஜோசியம் கூறி வீட்டிற்கு அனுப்பி வைக்கும் ஜோசிய ஆசாமிகள் ..

எது எப்படி போனால் என்ன வியாபாரம் ஆனால் சரி என்று நகைக்கடைகளில் டாலர் செயின்கள் டிசைன்களின் மத்தியில் ஶ்ரீ சக்ர பதக்கத்தையும் மிக சாதாரணமாக விற்று லாபம் பார்க்கும் வியாபாரிகள்..

ஶ்ரீ அம்பிகையை கணப்பொழுதும் கூட நினைந்து உருகி வணங்கி ஸ்மரித்து அவளே கதியென உருகும் முனிவர்கள் , பாஸ்கர ராயர் , அபிராமி பட்டர் போன்ற பக்தகுல சிகாமணிகள் மத்தியில் நாமெல்லாம் தூசிலும் தூசாவோம் .. அவர்கள் தேவியை ரூப பேதமின்றி துதித்து நற்கதி அடைந்தனர் .. அவள் நெருப்பு போன்றவள் ..பக்தரிடம் திருவிளக்கொளி, பொல்லாதவனிடம் காட்டுத்தீ .. தீ தெரிந்து தொட்டாலும் தெரியாது தொட்டாலும் சுட்டுவிடும் .. அம்பிகையை விக்ரகமாக , சித்திரமாக, அருவமாக தியானம் என்று வழிபட ஆயிரம் வழிகள் உண்டு .. ஶ்ரீ சக்ர பூஜை சாதாரண பட்ட மக்களுக்கு இல்லை.. நெருப்போடு விளையாட்டு வேண்டாம் .. விளையாட்டு என்றாவது ஒருநாள் விபரீதம் ஆகிவிடும் ..

தேவியின் ஶ்ரீ சக்ரம் நல்லது தான் என சாதாரணமாக நினைக்கும் பக்தர்களுக்காக …..

“வ்யாபினி விவிதாகாரா ” என்கிறது லலிதா சகஸ்ரநாமம் . அமைதியும் , சாந்தியும் நிலைக்கும் புன்னகை பூத்த திருமுகத்தோடு அம்பிகை எங்கும் வ்யாபித்து இருக்கிறாள் கல் மண் விருட்சம் பறவை உலக உயிர்கள் கிரகங்கள் நட்சத்திர மண்டலங்கள் கோடி கோடி துகள்கள் என சகலமும் ஆன தேவியை இவ்வாறு வழிபடவேண்டிய கட்டாயமில்லை .

( தங்கள் தவறுகள் உணர்ந்து வீட்டில் வைத்திருக்கும் மக்கள் தாராளமாக கொண்டு சென்று சிவன் கோயிலில் உள்ள அம்பிகை சந்நிதியிலோ அல்லது சமுத்திரத்திலோ விட்டுவிடுதல் நல்லது.. ஶ்ரீ மாதா கருணையின் கங்கை சாந்தரூபிணியிடம் பிராயச்சித்தம் வேண்டி சரணாகதி அடையலாம் .)

ஶ்ரீ மாத்ரே நம ..

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

20 − 17 =

Most Popular