Sunday, October 15, 2023
HomeArthamulla Aanmeegamஸ்ரீ ராம நவமி ஸ்பெஷல் !

ஸ்ரீ ராம நவமி ஸ்பெஷல் !

ஜெய் ஸ்ரீ ராம்.!

ராமதாசர் சிறந்த ராம பக்தர். அனுதினமும் தனது சீடர்களுக்கு ராமாயண காவியம் பற்றி உரை நிகழ்த்துவார்.அவரது ஒவ்வாரு உரையும் ராமனுடன் வாழ்ந்தது போலவே இருக்கும் அவரது சீடர்களுக்கு. அதனால் மிகவும் ஆர்வமாக கேட்டு ரசிப்பர்.எங்கெல்லாம் ராமாயணம் உரைக்க படுகிறதோ அங்கெல்லாம் ஹனுமன் கேட்டு ரசிப்பான் என்பதற்கு சான்றாக, அருவுருவமாய், ராமதாசர் ராமாயண உரையையும் கேட்டு ரசிப்பான் ஹனுமன் .

இப்படி இருக்க ஒருநாள் ராமதாசர் —-இலங்கை அசோகவனத்தில் கோபமாக வந்திறங்கிய ஹனுமன் அழகிய வெண்மலர்களை
கண்டான் என்று அன்றைய உரையை முடித்தார்.உரை முடிந்ததும் சீடர்கள் கலைந்து சென்றனர்.

அதுவரை அருவுருவமாக அவரது ராமாயண உரையை கேட்ட ஹனுமன், அன்று ராமதாசர் முன் காட்சி கொடுத்து ஜெய் ஸ்ரீராம் என்று வாழ்த்தி நின்றான்.ராமதாசர் வியப்படைந்து ஆஞ்சநேயா வருக, வருக. என்னே என்பாக்கியம். அமருங்கள் ஸ்வாமி,என்று தான் அமர்ந்திருந்த ஆசனத்தில் அமர வைத்தார்.

ராமதாசரே, நீங்கள் உரைத்த ராமாயண உரையை நானும் அருவுருவமாக கேட்டு ரசிப்பேன் அனுதினமும் .இதுவரை மிகவும் நன்றாக இருந்தது உங்களது உரை. ஆனால் இன்று தாங்கள் நிகழ்த்திய உரையில் ஒரு சிறு தவறு இருக்கவே அதை எடுத்து சொல்லவே யாம் வந்தோம் என்றார்.

ராமதாசர், ஆஞ்சநேயரை பணிந்து, என் உயிரினும் மேலாக நான் ராமநாமத்தை மதிப்பவன். ராம சரித்திரத்தில் எந்த ஒரு சிறு தவறு கூட நிகழாத வண்ணம் ராம காவியத்தை உரைத்து வருகிறேன். அப்படி இருக்க நீங்கள் என் உரையில் என்ன தவறை கண்டீர்கள் என்று புரியவில்லை என்று கேட்டார்.

இலங்கையில் அசோகவனத்தில் வந்திறங்கிய ஹனுமன் அழகிய வெண்மலர்களை கண்டான் என்று உரையை எழுதியிருந்தீர்கள். ஆனால் நான் அசோகவனத்தில் பார்த்தது அனைத்தும் சிவந்த மலர்களை தான். அதனால் தாங்கள் உரையை மாற்றி சிவந்த மலர்கள் என்று எழுதவும் என்று கூறி பணிந்தார்.

ராமதாசர் சற்று கோபமாக ஆஞ்சநேயா, என் மனக்கண்ணில் தோன்றிய ராமாயண கதைப்படி, நீ கண்டது அனைத்தும் வெண்மலர்கள் தான். அதனால் உரையை மாற்ற முடியாது என்றார் பிடிவாதமாக.

இப்பொழுது ஆஞ்சநேயருக்கு கோபம் வந்தது. ஆனால் ராமதாசர் ராம பக்தர் ஆயிற்றே. அதனால் கோபத்தை அடக்கி கொண்டு, நேரில் பார்த்த நானே அதை சிவந்த மலர்கள் என்று கூறும் போது, வெறும் கற்பனை வடிவத்தில் ராமாயண காவியத்தை வடித்த தாங்கள் அதை வெண்மலர்கள் என்று எப்படி கூறலாம் என்று கோபமாக கேட்டார்.

இப்படியே இவர்களது வாக்குவாதம் ஓடி கொண்டிருக்க ,இவர்களது வாக்குவாதத்தை திருவைகுண்டத்தில் இருந்த திருமால் தன் ஞானதிருஷ்டியால் அறிந்து சிரித்து கொண்டே, இவர்களது வாக்குவாதத்திற்கு முடிவு கட்ட எண்ணி இருவர் முன்னும் ராமராக தோன்றினார்.

ஆஞ்சநேயரும்,ராமதாசரும் ராமரின் பாதத்தில்விழுந்து
வணங்கி தங்களது வாக்குவாதத்திற்கு சரியான முடிவு கூறுமாறு கேட்டுக்கொண்டனர்.

ராமர் ஆஞ்சநேயரை பார்த்து ,ஆஞ்சநேயா! ராமதாசர் கூறியதுதான் சரி. நீ அசோகவனத்தில் பார்த்தது அனைத்தும் வெண்மலர்களே அன்றி எதுவும் சிவந்த மலர்கள் அல்ல என்று தீர்ப்பு கூறினார்.

ஆஞ்சநேயர் அதை கேட்டு ஆச்சரியம் அடைந்து பிரபு, தாங்கள் எனக்கு அதற்கு விளக்கம் கூற முடியுமா என்று கேட்டார்.

ராமர் கூறினார்…
ஆஞ்சநேயா, நீ அசோகவனத்தில் இறங்கியதும் கோபத்தில் கண்கள் சிவக்க அசோகவனத்தை பார்த்தாய். அதனால் உன் கண்களுக்கு எல்லாமே சிகப்பாகவே தெரிந்தது. ஆனால் ராமதாசரோ பக்தி மனதோடு ராமாயணத்தை நினைத்து எழுதுகிறார். அதனால் அவர் கண்களுக்கு எல்லாமே இயல்பாக தெரிந்தது.

எதை, நாம் எந்த கோணத்தில் பார்க்கிறோமோ, அதன்படியே நமக்கு தெரியும் என்று கூறி மறைந்தார். அதை கேட்டு ஆஞ்சநேயர், ராமதாசரிடம் மன்னிப்பு கேட்டு,அவரை ஆசிர்வதித்து ராம் ராம் என்று கூறி மறைந்தார். இதை படிக்கும் அணைத்து நண்பர்களுக்கும் ராமரின் அருள் என்றும் கிடைக்கட்டும்.

ஸ்ரீ ராம ஜெய ராம ஜெய ஜெய ராமா !

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five + five =

Most Popular