தெய்வத்தின் குரல் – அத்வைதம் அத்வைத ஸாதனை

318

ஆத்மஞானியான பின் அநாத்மா என்றே ஒன்று கிடையாது என்றாகிவிடும். அது பிற்பாடு நடப்பது. அத்வைதானந்தத்தில் அப்படியே மதம் பிடித்த மாதிரி ஊறிப் போய், கர்வம் என்றுகூட விஷயம் தெரியாதவர்கள் நினைக்கும்படி அவ்வளவு ராஜரீகமாக ஒரு ஞானி தன்னுடைய நிலையைச் சொல்லிக் கொள்வதாக “ப்ரௌடாநுபூதி” என்று ஆசார்யாள் எழுதியிருக்கிறார். (சிரித்து) தலைப்புக்கு ஏற்றாற்போல, அநுபூதி பற்றி proud-ஆகச் சொல்லிக் கொள்கிறாற்போலவே இருக்கும்! அதிலே ஸாக்ஷாத் ஆசார்யாளே, “ஆத்ம-அநாத்ம விவேசனங்கிறதே பேத்தல். அநாத்மா-ன்னு ஒண்ணு உண்டா என்ன? அப்படி உண்டு-ன்னா இருக்கிற அந்த வஸ்துவை எப்படிப் பொய்னு தள்ளறதாம்?” என்று ஒரே அடியாக அடித்திருக்கிறார்15. ஆனாலும் அது அநுபூதி கண்டவருடைய வார்த்தை! காண வேண்டியவருக்கோ, ‘ஆத்மா-ன்னு ஒண்ணு இருக்கா என்ன? அநாத்மாதானே, ஸர்வ வ்யாபகமா இருக்கிறதாத் தெரியறது?’ என்பதல்லவா கேள்வியாயிருக்கிறது! ஞான நிலையை அடையாத அப்படிப்பட்டவர்களெல்லாரும் அதை அடைய ப்ரயத்னம் செய்யும்போது முதலில் எது நித்யமான வஸ்து, எது அநித்ய அநாத்ம வஸ்து, எது எது அநித்யமாய் இருந்தாலும் நித்யத்தில் கொண்டு சேர்க்க உதவுவது, எது எது அநித்யச் சகதியிலேயே இன்னும் ஆழகாகப் புதைப்பது என்று நல்ல விழிப்போடு பாகுபடுத்தி சீர்தூக்கிப் பார்த்துக் கொண்டேதானிருக்க வேண்டும்.

*ப்ராணாயாமம் ப்ரத்யாஹாரம்*

*நித்யாநித்ய விவேக விசாரம்*

என்று ‘பஜகோவிந்த’ த்தை முடிக்கிற இடத்தில் (கடைசி ச்லோகம் பலச்ருதி மாதிரி; அதற்கு முந்தைய ச்லோகத்தில்) இந்த ஆத்ம அநாத்மப் பாகுபாட்டை ரொம்பவும் கருத்தாகப் பண்ணவேண்டுமென்று உபதேசித் திருக்கிறார்.

நாம் அவ்வளவு புத்திசாலித்தனத்தோடு பண்ணுவோமோ மாட்டோமோ என்று ஆசார்யாளே எதெல்லாம் அநாத்மா என்று பெரிசாக லிஸ்ட் கொடுத்திருக்கிறார், ‘ *நாத்மஸ்ரீ விகர்ஹணம்* ‘ என்கிற ப்ரகரணத்தில். அதன் ஒவ்வொரு ச்லோகத்திலும் முதல் மூன்று வரிகளில் ஒவ்வொன்றும் ” *தத: கிம்*?” என்று முடியும். “அதனாலாவதென்ன? அதனால் என்ன ப்ரயோஜனம்?” என்று அர்த்தம். ஒவ்வொரு வரியிலும் நாம் பெரிசாக நினைப்பதான ராஜகௌரவம், ஸம்பத், ஆடை அலங்காரம், தேஹ ஸெளந்தர்யம், புஷ்டி போன்ற ஒன்றைச் சொல்லி ” தத : கிம்?” போட்டிருப்பார். இப்படி ப்ரதிச்லோகத்திலும் முதல் மூன்று வரிகள். நாலாவது வரியில் “ஒருத்தனால் தன்னுடைய ஆத்மா ஸாக்ஷாத்கரிக்கப்படாமலிருந்து விட்டால்” – ” *யேந ஸ்வாத்மா நைவ ஸாக்ஷாத்க்ருதோ (அ) பூத்*” என்பது திரும்பித் திரும்ப வரும். “ஒருத்தனால் ஆத்மா ஸாக்ஷாத்கரிக்கப்படாதபோது ராஜகௌரவத்தால் என்ன ப்ரயோஜனம்? ஸம்பத்தால், அணி பணிகளால், அழகால், புஷ்டியால் என்ன ப்ரயோஜனம்?” என்று சேர்த்து அர்த்தம் பண்ணிக் கொள்ளுமாறு ச்லோக அமைப்பு. தான் நிஜத்தில் யார் என்றே தெரியவில்லையாம்; அப்படித் தெரியாதவனுக்கு ராஜகௌரவம், ஸம்பத்து, அது, இது என்று சேர்த்து கொள்வதில் என்ன அர்த்தம் என்று தாத்பர்யம். “அந்த ஆஸாமி யார் என்றே தெரியாது. ஆனாலும் அவனுக்கு கௌரவம் பண்ணப்போகிறோம். பணமுடிப்புக் கொடுக்கப் போகிறோம்” என்றால் எத்தனை பைத்தியக்காரத்தனமாய் இருக்கும்? அப்படித்தான் இதுவும் என்று காட்டுகிறார். ஆத்மாவான தன் உண்மை நிலையே தெரியாதவனுக்கு எதனால் என்ன ப்ரயோஜனம்? ஆத்மாவை ஒருவன் தெரிந்து கொண்டு விட்டாலும் இதெல்லாம் துச்சம்தான். இதெல்லாவற்றையும் துச்சமாகத் தள்ளினால்தான் ஒருவன் ஆத்மாவைத் தெரிந்து கொள்ளவே முடியும். ஆக, எந்த நிலையிலும் கௌரவம், ஸம்பத், அலங்காரம், ஸெளந்தர்யம், புஷ்டி, இன்னம் என்னென்னதையெல்லாம் பெரிசாக நினைக்கிறோமோ அதெல்லாம் வேண்டாடது தான். இதெல்லாம் அநாத்மா என்று ஒதுக்குவதுதான் *அநாத்மஸ்ரீ விகர்ஹணம்*”. ஸ்ரீ என்றால் எல்லோருக்கும் தெரிந்த அர்த்தம் – லக்ஷ்மி, மங்கள வஸ்து, செல்வம். இன்னொரு அர்த்தம் விஷம்! விஷத்தைக் கண்டத்தில் வைத்துக் கொண்டிருப்பதாலேயே பரமசிவனை ஸ்ரீகண்டன் என்பது. இப்போது செல்வமாகத் தெரிகிற இன்பங்களை அநாத்மா என்ற விஷமாகத் தெரிந்துகொண்டு கண்டனம் பண்ணுவதே அநாத்மஸ்ரீ விகர்ஹணம். இது ஆத்மாநாத்ம விவேகம் என்னும் நித்யாநித்ய வஸ்து விவேகத்தின் இன்னொரு பேர்தான்.

*வைராக்யம்*
( இன்றைய புதிய அத்தியாயம்)

நித்ய – அநித்யங்களைச் சீர்தூக்கிப் பார்த்து, கொள்ள வேண்டியதைக் கொண்டு, தள்ளவேண்டியதைத் தள்ளணும். கொள்ளுவதைவிடத் தள்ளுவது ரொம்ப முக்யம். வாழ்க்கையிலேயே பொதுவாக இன்ன செய்யணும் இன்ன செய்யக்கூடாது என்றிருப்பதில் செய்யவேண்டியதைச் செய்யாவிட்டால்கூடப் பரவாயில்லை; செய்யக் கூடாததை செய்துவிட்டால் மஹாகஷ்டம் என்று பார்க்கிறோம். ஒரு ஜலதோஷம் வருகிறது. ‘கடுகுப் பொடி சாதம் சாப்பிடு, ஜஸ்கிரீம் சாப்பிடாதே’ என்று சொன்னால் கடுகுப்பொடி சாதம் சாப்பிடாவிட்டால்கூடப் பரவாயில்லை; ஐஸ்கிரீம் சாப்பிட்டாலோ கபம் ஒரேடியாகக் கட்டிக் கொண்டு ஜ்வரமே வந்துவிடுகிறது. இப்படி ஆகாததைச் சாப்பிட்டால் உடனே விபரீத பலன் உண்டாவதுபோல ஆகிறதை சாப்பிட்டால் உடனே அது நல்லது பண்ணுமா என்றால், பண்ணுவதில்லை. ஐஸ்கிரீம் சாப்பிட்டவுடன் கபம் கட்டிக் கொள்கிற அந்த வேகத்தில் கடுகுப்பொடி சாப்பிட்டவுடன் ஜலதோஷம் விடுவதில்லை. காவேரியில் கரையோரத்தில் ஸ்நானம் செய்தால் ஸெளக்யமாயிருக்கும். அந்த ஜலம் உடம்புக்கும் நல்லது, உள்ளத்திற்கும் நல்லது பண்ணும். ஆனால் நீச்சல் தெரியாதவர் ஆழத்துக்குப் போகப்படாது. போனால் சுழல் இழுத்துக் கொண்டு போய்விடும். காவேரி ஸ்நானம் பண்ணாவிட்டாலும் பரவாயில்லை. அப்படியே ஸ்நானம் பண்ணினாலும் அப்போதைக்கு சுத்தமாக, மனஸும் தெளிவாக இருந்தாலும் விசேஷமாக தேஹாரோக்யமோ, புண்ய விசேஷமோ தெரிந்து விடுவதில்லை. ஆனால் ஆழத்துக்குப் போனாலோ நிச்சயமாகச் சுழல் இழுத்து ப்ராணாபத்தில் கொண்டுவிட்டு விடுகிறது. மஹாமாயை விளையாட்டில் இப்படிக் கெடுதல் செய்கிற சக்திகளுக்கே ஜாஸ்தி ‘பவர்’ இருக்கிறது.

ஆனபடியால் எது ஆத்மாபிவ்ருத்திக்கு உகந்தது, எது குந்தகம் பண்ணுவது என்று அலசிப் பார்த்து தெரிந்து கொண்ட பிறகு குந்தகம் பண்ணுகிறவைகளை ஒதுக்கித் தள்ளுவதற்கு முதல் முக்யத்வம் கொடுக்க வேண்டும்.

முன்னேயே சொன்னாற்போல, ‘பிறகு’ என்றால் ஒவ்வொரு படியாக முதல் படியை முடித்த பிறகு இரண்டாவதாக இந்த ஸாதனாங்கத்தைப் பின்பற்ற வேண்டுமென்று அர்த்தமில்லை. சேர்த்துச் சேர்த்து, கலந்து கலந்தே எல்லா அங்கங்களையும் அப்யஸிக்கும்படி இருக்கும். அதில் ஒவ்வொரு ஸமயத்தில் எந்த ஒன்று பிரதானமாயிருக்கிறதோ அதைப் படிவரிசையில் ‘பிறகு’ வருகிற படி மாதிரி சொல்வது.

ஒரு கரு குழந்தையாகிறதென்றால் முதலில் கால், அப்புறம் வயிறு, அப்புறம் (மார்)பு, தலை என்றா ஒவ்வொரு அங்கமாக வளர்கிறது? எல்லாந்தானே ஒருமிக்கச் சேர்ந்து சேர்ந்து வளர்கிறது? அப்படித்தான் side by side இந்த ஸாதனாங்கங்களும் – one after other இல்லை. அதில் ஒவ்வொரு நிலையில் ஒவ்வொன்றில் ஜாஸ்தி கான்ஸென்ட்ரேஷன்.

முதலில் நல்லது கெட்டதைச் சீர் பிரிக்கிறது. அப்படிச் சீர் பிரிக்கும்போதே கெட்டதைத் தள்ளுவதும் நல்லதைக் கொள்ளுவதும் கொஞ்சங் கொஞ்சம் அப்யாஸத்தில் வரும். அப்புறம் ஒரு மாதிரி இந்தச் சீர்ப்பிரிப்பு வேலை ஆடோமோடிக்காக ஆகிவிடும் – அத்தனை காலம் அதிலேயே பழகிவிட்டதால்! அப்போது தள்ளவேண்டியதைத் தள்ளுவதில் முக்யமாகக் கான்ஸென்ட்ரேஷனைத் திருப்ப வேண்டும்.

அதுதான் ஸாதன சதுஷ்டயத்தில் இரண்டாவது அங்கம். அதற்கு பேர் *வைராக்கியம்* என்பது.

*விரக்தி* என்றும் அதை சொல்வது:

ராகம், ரக்தி என்றால் ஆசை என்று அர்த்தம். ஆசையை விடுவது வைராக்யம், விரக்தி.

ஆத்ம ஞானத்திற்குப் பெரிய குந்தகம் புலனின்பங்கள் தான்; இந்த்ரியானந்தங்கள் என்பவை. ஒரு இன்பத்தைத் தேடிப் போகிறோமென்றால் அதற்குக் காரணம் அந்த இன்பத்தை அடையவேண்டுமென்ற ஆசைதானே? ஆசை இல்லாவிட்டால் அப்படித் தேடிப் போவோமா?