உன்னத பக்தி !

585

ஆந்திராவில் உள்ள ஸ்ரீ மட்ட பல்லி மஹா நரசிம்ஹ சேத்திரத்தில் நடந்த நிகழ்வு முக்கூர் ஸ்ரீலட்சுமி நரசிம்மாச்சார்யார் எழுதிய புத்தகத்தில் வாசித்ததை பதிவிடுகிறேன்.

காடுகள் சூழ்ந்து, அழகான இயற்கை எழில் கொண்டு ஸ்ரீ கிருஷ்ண நதிக்கரையில் அமையப் பெற்ற இத் திருத்தலத்திற்கு அருகில் காட்டு வாழ் ஜாதி மக்கள் வசித்து வந்தனர்.

லம்பாடி இனத்தைச் சேர்ந்த அவர்கள், தற்போதும் வசித்துக்
கொண்டிருக்கின்றனர்.

முன்பு ஒரு சமயம், அந்த லம்பாடி இனத்தைச் சேர்ந்த வயதான கிழவர் ஒருவர், மிகவும் ஏழை, தனக்கு காட்டில் கிடைத்த தேன், தினை மாவு, கொஞ்சம் அரிசி, பருப்பு, பழங்கள் இவைகளை சிறிய மூங்கில் கூடையில் எடுத்துக் கொண்டு, அக் காட்டு வழியே இரவு 11 மணிக்கு மேல் ஸ்ரீ மட்ட பல்லி மஹாே ஷேத்திரத்தை வந்தடைந்தான்.

ஊரே அடங்கி நிசப்தமாய் இருக்கின்றது.

வெளியிலுள்ள மண்டபத்தில் வந்து அமர்ந்து கொண்டான்.

என் செய்வான்? பாவம், அந்தோ, அவனது பஞ்சடைந்த கண்கள் குளமாயின.

கதறுகிறான்” ஐயோ, ஸ்வாமி, உன்னைக் கண்களார சேவிக்க வேண்டும், இவைகளை உனக்கு ஸமர்ப்பிக்க வேண்டும் என்று வந்தேனே, என் மூப்பு காரணமாய் நேரத்தில் உன் தலத்திற்கு வந்து சேர முடியவில்லையே’, பரம ஏழை நான் என்ன பண்ணுவேன், நின் அருளே புரிந்திருக்கிறேன்., உன் அருளுக்கே பாத்திரமாகிறேன். என்று பலவாறு புலம்பிக் கொண்டிருந்தார்.

அவ்வமையம், தோளில் கோயில் சாவிக் கொத்தைப் போட்டுக் கொண்டு, அக்கோயிலின் பிரதான அர்ச்சக ஸ்வாமிகள் அவரிடம் வந்து, “ராவய்யா, இந்த சேபு ஏமி சேசாவு, ரா தொந்தரகா, நீகுதர்சனம் சேயிஸ்தானு” என்று கூறி அவரை கோயிலுக்குள் மிகவும் ஜாக்கிரதையாக அழைத்துச் சென்றார்.

“வாப்பா, வா.. இவ்வளவு நேரம் என்ன செய்தாய்?.’ சீக்கிரம் வா… உனக்கு தர்சனம் செய்து வைக்கிறேன்.” என்று ஆந்திர பாசையில் அவர் கூறியது உங்களுக்குப் புரிந்திருக்கும் .

அந்த வயோதிகனை மிகவும் ஜாக்ரதையாய் உள்ளே அழைத்துச் சென்று, அவர் கொண்டு வந்த கூடையையும் கையில் வாங்கிக் கொண்டு குகை வாயிலைத் திறந்து எம் பெருமானுக்கு முன்னிலையில், அவரையும் நிறுத்தி, அவர் கொண்டு வந்த பிரசாதங்களை எல்லாம் எம்பெருமான் மீதும் தாயார் ஸ்ரீ ராஜ்ய லக்ஷ்மியின் மீதும் சேர்த்தார்.

அர்ச்சனை நன்றாக செய்து, ஹாரத்தியையும் நன்கு காண்பித்து அந்த முதியவரை மிகவும் நெருக்கமாய் வந்து நின்று சேவிக்கச் சொல்லி, அவருக்குப் பிரசாதமும் கொடுத்து இப்படி அவரிடம் பேரன்புக் கொண்டு மிகவும் நன்றாக சேவை பண்ணி வைத்தார்.

பிறகு அவரை மெதுவாக கை பிடித்து அழைத்துக் கொண்டு வந்து வெளி மண்டபத்திலேயே இரவு படுத்துறங்கி காலை எழுந்து ஊர் போய் சேருவாயாக என்று கூறிவிட்டு கோயில் கதவை நன்றாக தாளிட்டுக் கொண்டு அர்ச்சகர் தம் திருமாளிகையை நோக்கி விரைந்தார்…

அந்த முதியவரும் பிரசாதங்களை நன்கு சாப்பிட்டு விட்டு அம்மண்டபத்திலேயே படுத்துறங்கி விட்டார்.

சிற்றஞ் சிறு காலையில் அதே அர்ச்சகர் கோயிலைத் திறப்பதற்கு மறுபடியும் வருகிறார்.

மண்டபத்தில் முதியவர் படுத்துறங்குவதைப் பார்த்து மிகுந்த கோபம் கொண்டு “இங்கா நித்ரபோது ன்னா வா? இதே மிகுடி அனுகுந் நாவா? லேகசத்ரமா?… முந்து லே இக்கடனுஞ் சி” என்று மிரட்டி எழுப்பினார்.

“எழுந்திரு, இன்னும் என்ன தூக்கம், இது என்ன சத்திரம், சாவடியா ? விசாரமில்லாமல் தூங்குகின்றாயே, உடனே எழுந்திரு என மிரட்டினார்.

அவரும் திடுக்கிட்டு எழுந்தார். எதிரில் அர்ச்சக ஸ்வாமி நிற்பதைக் கண்டு வணங்கினார்.

இரவில் வந்தவரின் கருணை எங்கே? அவரே இவரானாலும் இப்படிக் கடிந்து கொள்கிறாரே, என்று மிகவும் பயந்தவராய் தள்ளாடிக் கொண்டு கிருஷ்ணா நதியில் இறங்கி ஸ்நாநம் பண்ணிக்கொண்டிருந்தார்.

இதற்கிடையில் அர்ச்சகர் கதவை திறந்து ” கெளஸல்யா சுப்ரஜா ராம, பூர்வாஸந்த்யா ப்ரவர்த்ததே ” என்று சுப்ரபாதம் பாடிக் கொண்டு திரையை நீக்கினார்.

அப்போது திடுக்கிட்டுப் போனார்.

அரிசி, பருப்பு, தேன், தின்ன மாவு, எல்லாம் எம்பெருமான் மீதும், எம்பெருமாட்டியின் மீதும் சமர்பிக்கப்பட்டிருந்தன.

பூஜைகள் நடந்து எம் பெருமான் பரம திருப்த்தியாய் இருந்தார்.

இதோடு மேலும் ஒரு ஆச்சர்யத்தைக் கண்டார் அவர்…
எம்பெருமான் உள்ள இடத்தில் அந்தப் பரம ஏழையான, லம்பாடி முதியவர் தெரிகிறார்.

நடுங்கிப் போன அர்ச்சகர் அந்த முதியவரைத் தேடிக் கொண்டு வெளியில் ஓடி வருகிறார்.

ஸ்ரீ கிருஷ்ணா நதியில் அவர் குளித்துக் கொண்டிருப்பதைக் கண்டு பரமானந்தமடைந்தவராய் ஓடிச் சென்று அவரது திருவடியில் விழுந்துக் கதறி அழுகிறார்.

அப்பனே !! உன் பக்தி எங்கே ? என் பக்தி எங்கே ? நானும் எத்தனையோ ஆண்டுகளாக எம்பெருமானுக்குப் பூஜை செய்து கொண்டு வருகிறேன்.

ஒரு நாளாவது அவருடைய தரிசனம் அடியேனுக்குக் கிடைத்ததா?.. இல்லையே !!

உமக்கு சுலபமாய் கிடைத்து விட்டதே. அவரது இன்னரு ளுக்குப் பாத்திரமான நீரே சிறந்த பாகவதோத்மன் என்று தனது கண்ணீரால் அவரது பாதம் கழுவினார்.

அந்த முதியவரும் செய்வதறியாது திகைத்து நின்று விட்டார்.

பிறகு மிகவும் கூச்சப்பட்டார்.

எப்பேர்பட்ட மஹான் தன் காலில் விழுந்ததை நினைத்து மிகவும் வருத்தப்பட்டார்.

பின்னர் எம்பெருமானுடைய சேவையை மறுபடியும் அவருக்கு நன்றாக செய்து வைத்து , அவருக்கு நிறைய பிரசாதமும் கொடுத்து அனுக்ரஹித்தார் அர்ச்சகர் .

நன்றாகப் புரிந்தது இரவில் வந்த அர்ச்சகர் ஸாக்ஷாத் ஸ்ரீ மட்ட பல்லி நாதனே,

“ஏழை ஏதலன் கீழ் மகனென்னாது
இரங்கி இன்னருள் பொழிவான் ”
பக்தியொன்றைத்தான் பகவான் பார்ப்பார்.

அவர்கள் சமர்பிக்கும் பொருளையல்ல !!

ஒரு இலையோ, புஷ்ப மோ, பழமோ, ஜலமோ, இவற்றில் ஏதாவது ஒன்றை தூய பக்தியுடன் ஸமர்பித்தால் போதும் பகவான் பரிபூர்ண ஸந்தோஷத்தையடைந்து அவைகளை ஏற்று அருள் புரிகிறார்.

உயர்ந்த பொருள்களை ஸமர்பித்து விட்டு உள்ளார்ந்த பக்தி இல்லை என்றால் அதை பகவான் ஏற்பதில்லை.

இந்நிகழ்வு அதற்கோர் எடுத்துக்காட்டாகும்.

“ஸ்ரீ நரசிம்ஹர் திருவடிகளே சரணம்”

“எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்”