“திருமண்” எனப்படுவது தமிழ்ச்சொல், “நாமம்” என்பது சமஸ்கிருதச் சொல்.
விஷ்ணு பகவானுக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாமங்கள் (பெயர்கள்) உண்டு.
அதில் முக்கியமான பன்னிரு பெயர்களாவன: கேசவன், நாராயணன், மாதவன், கோவிந்தன், விஷ்ணு, மதுசூதனன், திரிவிக்ரமன், வாமனன், ஸ்ரீதரன்,ருஷீகேசன் ,பத்மநாபன்,தாமோதரன்.
விஷ்ணுவை முக்கிய தெய்வமாகக் கொண்ட வைணவத்தில், மரபு வழுவாதவர்கள் தங்கள் உடலின் 12 பாகங்களில் 12 குறிகள் இட்டுக் கொள்கின்றனர்.
ஒவ்வொரு குறியும் இப்பன்னிருவரில் ஒருவரின் ‘நாமத்தைக்’ (பெயரை)குறிக்கும். இந்த வழக்கம் பல நூற்றாண்டுகளாக மரபில் ஒன்றிவிட்டதால், இன்று அக்குறிகளுக்கே ‘நாமங்கள்’ என்ற பெயர் நிலைத்துவிட்டது.
ஸ்ரீமந்நாராயணன் கோயில்களில் எழுந்தருளியுள்ள திவ்யமான இடத்திலிருந்து மண் எடுத்து அதனை அவனது நாமத்தினை (பெயரினை) உச்சரித்தபடி இட்டுக்கொள்வதால் “திருமண் ” என்று அழைக்கப்படுகிறது.
திருமண் என்பதில் உள்ள இரு வெண்மை நிறக்கோடுகள் திருமாலின் திருவடிகளைக் குறிப்பது. நடுவில் காணப்படும் சிவப்பு அல்லது மஞ்சள் நிறக்கோடுகள் தாயாராகிய ஸ்ரீலக்ஷ்மியைக் குறிக்கிறது.
“சுக்லாம் பரதரம்” என்னும் ஸ்லோகம் “விஷ்ணுவின் நிறம் வெண்மை” என்கிறது. இதனால் வெண்மை நிறக்கோடுகள்,விஷ்ணுவின் திருவடியை குறிக்கிறது என அறியமுடிகிறது.
ஸ்ரீஸூக்ததில் தாயாரின் நிறம் சிவப்பு மற்றும் மஞ்சளில் சொல்லப்பட்டுள்ளது இதனால் தாயாரினைக் குறிக்கும் நடுவில் உள்ள கோடு சிவப்பு அல்லது மஞ்சளில் உள்ளது. இப்படி ஸ்ரீமந்நாராயணனுக்கு மட்டும் அடிமையானவன்,என்பதை வெளிக்காட்டுவது வைஷ்ணவர்களின் திருமண்.
வைணவ சமயத்தில் வைணவம், ஸ்ரீவைணவம் என உட்பிரிவுகள் உண்டு.
வைணவ சமயம் திருமாலை (விஷ்ணுவை) முழுமுதற் கடவுளாக வழிபடும் சமயமாகும்.
ஸ்ரீ என்ற அன்னை தத்துவத்தை (தாயார்) மையப்படுத்தி வரும் சமயப் பிரிவுக்கே ஸ்ரீவைஷ்ணவம் என்ற பெயர்.
ஸ்ரீவைணவத்தில் வடகலை, தென்கலை என்று இருபிரிவுகள் உள்ளன.
கலை, என்பதற்கு மொழி என்னும் பொருள் உண்டு. அதன்படி பொருள்கொண்டால் வடமொழி (சமஸ்கிருதம்) என்பது வடகலை என்றும் தென்மொழி (தமிழ்) தென்கலை என்றும் கொள்ளலாம்.
மதச்சின்னமான “திருமண்” எனப்படும் “நாமம்’ வடிவத்தில் மாறுபாடு உடையது.
தென்கலைத்திருமண் “ப” வடிவத்திலும், வடகலைத் திருமண் வளைந்தும் காணப்படும்.
தென்கலைத் திருமண் “ Y “என்னும் ஆங்கில எழுத்து மாதிரியும் வடகலை திருமண் “ U “என்னும் ஆங்கில எழுத்து மாதிரியும் இருக்கும்.
ஒரு ராஜாவுக்கு என்ன அலங்காரம் உண்டோ அதே அளவு அதே அலங்காரம் ராஜா அமர்ந்து செல்லும் பட்டத்து யானைக்கும் உண்டு.
கோயில் பெருமாளுக்கு என்ன அலங்காரமோ அதே அளவு அலங்காரம் பெருமாள் கோயில் யானைக்கும் உண்டு. கோவிலில் உள்ள பெருமாள் தென்கலை திருமண்ணுடன் இருக்கும்போது அந்தக்கோயில் யானையும் தென்கலை திருமண்ணுடன் இருப்பதுதான் முறை.
கோயில் பெருமாள் வடகலை திருமண்ணுடன் இருந்தால் கோயில் யானையும் வடகலை திருமண்ணுடன் இருக்கும்.
ஸ்ரீ ராமானுஜர் இரண்டு கலாசாலைகளை நிறுவினார். ஒன்று காஞ்சியில், மற்றொன்று ஸ்ரீரங்கத்தில்.
காஞ்சி ஸ்ரீரங்கத்திற்கு வடக்கே இருப்பதால் அதை வடகலாசாலை என்றும் ஸ்ரீரங்கக் கலாசாலை தென் கலாசாலை என்றும் அடையாளம் காணப்பட்டது.
வட கலாசாலையைச் சேர்ந்தவர்களின் நாமம் பாதமின்றியும் தென் கலாசாலையோருக்கு நாமத்தில் மூக்கில் மேல் பகுதியில் ஒரு பாதமும் அடையாளமாகியது. கலாசாலை சுருங்கி காலப்போக்கில் வடகலை தென்கலை ஆகியது .
தமிழ்ப் பிரபந்தங்களை வேதங்களாகவே மதிக்கவேண்டும் என்பது இராமானுஜரின் போதனை. அதனால் வேதங்கள், உபநிடதங்கள் இவைகளுக்கு பதிலாகவே பிரபந்தங்களை வைத்துக் கொள்ளலாம் என்று ஒரு கருத்து தலை தூக்கியது.
இப்படி ஏற்பட்டது தான் வடகலையும் தென்கலையும். தமிழ்ப் பிரபந்தங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தது தென்கலை.
வடகலையாருக்கு முக்கிய நகரமாக காஞ்சீபுரமும், தென்கலையாருக்கு ஸ்ரீரங்கமுமாக இருந்தது அவர்கள் அப்படி அழைக்கப்பட்டதற்குக் காரணம் காஞ்சீபுரத்தில் வடமொழிப் புலவர்களின் நடமாட்டம் அதிகம்.
தத்துவ ரீதியாக இருபிரிவுகளுக்கும் கருத்து வேறுபாடுகள் உண்டு!
ஆண்டவனின் அருள் யாருக்குக் கிடைக்கும்?
சுயமுயற்சியுடன் ஆண்டவனை வழிபடுபவனுக்கா, அல்லது ஆண்டவன் விட்ட வழி விடட்டும் என்று சுயமுயற்சியையும் கைவிட்டவனுக்கா?
இரண்டாமவனுக்குத் தான் என்பது தென்கலை வைணவர்கள் கொள்கை.
இக்கொள்கையை பூனை விதி என்பர். ஏனென்றால் பூனைக்குட்டியை தாய்ப்பூனை கவ்வி எடுத்துச்செல்கிறது. பூனைக்குட்டி சுயமாக முயற்சி ஏதும் செய்வதில்லை.
குரங்கு விதி என்பது தாய் குரங்குத் தன் குட்டி யை தூக்கிச் செல்லும்போது குரங்குக் குட்டியும் தானே தாய்க் குரங்கைக் கவ்விக் கொள்கிறது.
வடகலை வைணவக் கொள்கை இதுதான்.
சுயமுயற்சியால் தான் ஆண்டவனின் அருளைப்பெற முடியும் என்பர். சுயமுயற்சி என்பது இவ்விடத்தில் பக்தியும் பிரபத்தியும்.
இறைவனை அடைய பக்தியே சிறந்த மார்க்கம் என்று வடகலையாரும் பிரபத்தியே உற்றவழி என்று தென்கலையாரும் கூறுகின்றனர்.
பக்தி என்பது கீதையில் கூறப்பட்டுள்ள பக்தி யோகத்தையும்,பிரபத்தி என்பது சரணாகதியையும் குறிக்கும்.
ஆகமம் என்பது வழிபாட்டு முறைகளை, வேதத்தை மூலமாக வைத்து, உருக்கொடுப்பது!
ஆலய வழிபாடு, விக்ரகங்கள், விழாக்கள், வேள்வி, பூசை முறைகள் ஒவ்வொன்றையும் வேதக் கோட்பாடுகளோடு தொடர்புப் படுத்தி, நிறுவிச் சொல்வன ஆகமங்கள்!
வைணவத்தில் ஆகமம் இரண்டு
1. பாஞ்சராத்ரம்
வேதங்களைப் பிரம்மாவிடம் இருந்து மதுகைடபர்கள் பறித்த போது, இறைவனே மகரிஷிகளுக்கு ஐந்து இரவுகள் வழிபாடு பற்றி எடுத்துச் சொல்லி விளக்கினான். அதனால் பாஞ்ச ராத்ரம் என்று பெயர்
2. வைகானசம்
இது விகனச மகரிஷி என்பவர் வேதப் பிரமாணமாக அவர் சீடர்களுக்கு உபதேசம் செய்தது.
வடகலையார் வைகானச ஆகம முறையையும், தென்கலையார் அதைக்காட்டிலும் எளிமையான வழிபாட்டு முறையாகிய பஞ்சராத்ர ஆகம முறையையும் கைக்கொண்டனர்.
தென்கலையாரோ பஞ்சராத்ர வழிமுறையை மேலும் எளிமையாக்கினர். அதன் விளைவே உருவ வழிபாட்டுக்கு அவர்கள் தரும் முக்கியத்துவம் ஆகும். இதனை ’அர்ச்சாவதாரம் ’ என்று அவர்கள் அழைத்தனர்.
வடகலையார் ராமானுஜரின் தத்துவத்தை தரும சாஸ்திரங்களின் அடிப்படையில் விளக்கினர்.
தென்கலையார் சாதிக்கு ஒரு நீதி போதிக்கும் தரும சாஸ்திரங்களை எதிர்த்தனர். ‘கடையேனுக்கும் கடைத்தேற்றம் என்ற கொள்கையைத் தென்கலையார் கடைப்பிடித்தனர்.
ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஒன்று என்பது அத்வைதம்,
ஜீவாத்மா வேறு பரமாத்மா வேறு என்பது துவைதம்,
வேறெனினும்,பரமாத்மாவுக்குள் ஜீவாத்மா அடக்கம் என்பது விசிஷ்டாத்வைதம்.
வடகலை வைணவத்தின் ப்ரதான ஆசிரியராகக் கருதப்படுபவர் வேதாந்த தேசிகர். இவரது காலத்துக்கு முன்னரேயே வடகலை வைணவம் தோன்றி விட்டதெனினும் அது தெளிவாக உருப்பெற்றது வேதாந்த தேசிகரின் காலத்தில்தான்.
இவருடைய நூல்கள் பெரும்பாலும் வடமொழியிலேயே எழுதப்பட்டவை. இந்நூல்களில் பெரும்பகுதி விசிஷ்டாத்வைத தத்துவத்தை நிலைநிறுத்துவதைக் குறிக்கோளாகக் கொண்டவை.
மோட்சம் அடைய வேண்டுமெனில் தரும சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ள வருணாசிரம தரும அடிப்படையில் வாழவேண்டும்.
அதாவது சாஸ்திரங்களில் ஒவ்வொரு வருணத்தாருக்கும் விதிக்கப்பட்டுள்ள ஒழுக்க விதிகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.வேறு வகையில் சொல்வதானால் தத்தம் வினைப்பயனை ஒட்டியே விளைவுகள் இருக்கும். விடுதலை அல்லது மோட்சத்திற்கு தரும சாஸ்திரங்களே அடிப்படை என்பது தேசிகரின் கருத்து.
தென்கலை வைணவத்தின் தலைசிறந்த ஆசிரியராகக் கருதப்படுபவர் , வேதாந்த தேசிகரைக் காட்டிலும் காலத்தால் நூறாண்டுகள் பிந்திய மணவாள மாமுனிகள் ஆவார். இவரது காலம் கி.பி. 1370- 1443 ஆகும்.
இவருக்கு முன்னரே,திருக்குருகைப் பிரான் தொடங்கி,பெரியவாச்சான்பிள்ளை, பிள்ளை லோகாச்சாரியர், அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் போன்றோர் பல்வேறு நூல்கள் இயற்றித் தென்கலை வைணவத்தைப் பரப்பினர் என்றாலும் மணவாள மாமுனிகளே தென்கலையின் பிரதான ஆசிரியராகக் கருதப்படுகிறார்.
பரமாத்மாவுக்கும் ஜீவாத்மாவுக்கும் உள்ள உறவை ஒரு ஆண்டாள் அடிமை உறவுக்கு மணவாள மாமுனிகள் ஒப்பிடுகிறார், பரமாத்மாவை அடைய விழையும் ஜீவாத்மா செய்ய வேண்டியதெல்லாம் இறைவனிடம் தன்னை ஒப்புக்கொடுத்துவிட்டு அவனை முழுக்கச் சரணடைய வேண்டிய தேயாகும்.
சாஸ்திரங்களில் கூறப்பட்ட, வருணத்திற்கேற்ப விதிக்கப்பட்ட உவிதி முறைகளைக் கடைப்பிடித்தால் மட்டுமே மோட்சம் கிட்டும் என்பது பொருளற்ற கூற்று.
மதக்கோட்பாட்டு வல்லுனர்கள் வடகலைக்கும் தென்கலைக்கும் 18 வேறுபாடுகள் சொல்வர்.
ஒரு சராசரி வைணவனுக்கு இந்த வேறுபாடுகள் பொருளற்றவை.
ஒரே பரம்பொருளான ஸ்ரீமந்நாராயணனிடம் அளவு கடந்த பக்தியும், எல்லா ஜீவர்களிடமும் காட்ட வேண்டிய அன்புமே அடிப்படை வைணவ லட்சணமாகும்.
