வாழ்க்கையில் சாட்சியாக எப்படி நடப்பது.

311

பரமாத்மாவின் வாக்கு சாட்சியாளராக மாறுவாய் என்பதாகும் . முதலில் சாட்சி என்றால் என்ன?சாட்சி என்பது ஒருவர் செய்த குற்றத்தை நேரில் பார்த்து பிறருக்கு சொல்வதா,அல்லது யாரோ ஒருவர் எப்படியோ போகின்றார் என்று கண்டும் காணாமல் செல்வதா? சாட்சி என்றால் என்ன? எப்படி சாட்சியாக இருக்க வேண்டும் என்று பரமாத்மா கூறுகின்றார்.இந்த உலகில் பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையே வாழும் வாழ்க்கையில் அனைவரிடமும் அன்புடன் இருந்துகொண்டே பற்றற்ற நிலையில் இருப்பதற்குப் பெயர்தான் சாட்சி நிலை. பற்றற்ற நிலை என்பது மனித கர்மங்களால் பாதிக்கப்படாத நிலை என்று பொருள்படும். உலகில் மனித கர்மங்களால் பாதிக்கப்படாத நிலை என்பது ஒவ்வொரு செயலையும் செய்வதற்கு முன்பு யோசித்து செய்வது என்று பொருள்படும். செயலின் விளைவுகளை அறிந்த பின் அதன் பிறகு கர்மம் செய்வதற்கு பெயர் தான் சாட்சி நிலை. ஒரு செயலால் எந்த ஒரு பாதிப்பும் தனக்கோ, பிறருக்கோ ஏற்படாத வண்ணம் இருப்பதற்குப் பெயர்தான் சாட்சி. சாட்சி நிலை என்பது காட்சி நிலையாகும். காட்சி என்பது அகக் கண்களை இறைவனிடம் ஈடுபடுத்தி புறக்கண்களால் உலகை பார்ப்பதாகும்.இதனால் கர்மத்தின் விதியினுடைய ஆழமானது மனதிற்கு தெளிவாகும் .எதை செய்யவேண்டும், எதை செய்யக்கூடாது என்பதே சாட்சி நிலையின் நிர்ணயம் ஆகும். ஒரு காரியத்தைச் செய்து செய்தபின் வருத்தப்படுவது, பிறகு அதே காரியத்தை பல நாட்களாக நினைவில் மேலும் எண்ணத்தில் வைத்து எண்ணத்தை வீணாக்குவதுடன் நேரத்தை வீணாக்குவது, தனது நேரத்தை தகுதியற்ற காரியத்தில் பயன்படுத்துவது, மனம்,வார்த்தை,செயலை நன்மை பயக்காத காரியத்தில் ஈடுபடுத்துவது, மேலும் மேலும் தவறுகளை செய்வது, தன் தவறுகளை சுயபரிசோதனை செய்து மாற்றி கொள்ளாதது,எந்த ஒருலட்சியமற்ற வாழ்க்கை வாழ்வது, எல்லாவற்றிலும் அலட்சிய போக்கை கடைபிடிப்பது,எதற்கெடுத்தாலும் காரணம் சொல்வது, இவையனைத்தும் சாட்சியாக இருப்பவரிடத்தில் இருக்காது.சாட்சியாக இருப்பவர் தன்னையும் முன்னேற்றி பிறரும் முன்னேற்றம் அடைவதற்கு காரணமாக இருப்பார். சாட்சி நிலை என்பது எதைக் கண்டும் ஒதுங்கி செல்வது அல்ல. எல்லோரிடமும் அன்புடன் பழகி இருந்தாலும் மனதில் பற்றற்று விலகி இறைவனுடன் வீற்றிருப்பது என பொருள்படும்.சாட்சியின் நிலை என்பது உலக நன்மை செய்யக்கூடிய நிலை. சாட்சி நிலையில் மனம் மிகவும் இலேசாக இருக்கும்.தமக்காகட்டும் அல்லது பிறருக்காகட்டும் எல்லாமே இறைவன் கொடுத்தது என்று வாழும் நிலையே சாட்சி நிலை. சாட்சி நிலையில் இருப்பவர் எதைக் கண்டும் மனதால் கூட அழ மாட்டார். சாட்சி நிலையாளரிடம் எப்பொழுதும் அவரது மனம் மகிழ்ந்திருக்கும் முகம் மலர்ந்திருக்கும். சாட்சியாளர் யார் மனதையும் புண்படுத்த மாட்டார். ஏனென்றால் இந்த உலக நாடக மேடையில் ஒவ்வொருவரின் கர்மத்தின் அனுசாரமாக அவர்களது பாகம் நடந்து கொண்டிருப்பது என்பது அவருக்கு எப்பொழுதும் நினைவில் இருக்கும்.சாட்சி நிலை என்பது ஆபத்தில் இருப்பவரை கண்டு ஓடி ஒளிந்து கொள்வதல்ல.அவரைத் தேடிச் சென்று உதவி செய்வதாகும்.அதிலும் இடம், பொருள்,ஏவல் என்பதை அறிந்து கர்மத்தின் விளைவுகளை அறிந்து புண்ணிய கர்மத்தை செய்வதாகும். எனவே சாட்சியாக இருப்பவர் தன் மூலமாக கடவுளின் தெய்வீக காட்சியை காண்பிப்பவர் ஆவார்.உலகில் கடவுள் ஏன் ஒவ்வொன்றையும் சாட்சியாக பார்க்கின்றார் என்பது இப்பொழுது புரிந்திருக்கும். ஒவ்வொருவருக்கும் அவரவர் கர்மவினை என்பது கூடவே வருகின்றது. இதில் நன்மை தீமையின் பலனை எடுத்துரைப்பதே பரமாத்மா ஆத்மாவிற்கு எடுத்துரைக்கும் கீதையாகும். எனவே சாட்சி ஸ்திதி என்பது மனசாட்சிக்கு கட்டுப்பட்டு நடப்பது. தனது புலன்களை அரசாட்சி செய்வது.

யாவற்றையும் தெய்வீக கண்களின் மூலமாக காட்சியாக பார்ப்பது இதுவே சாட்சி நிலை. தனக்கு குடும்பம் உறவுகள் குழந்தைகள் அனைவரும் இருந்தாலும் யாரோ முன் பின் தெரியாத ஒருவருக்காக இறைவனின் துணை கொண்டு அவரைக் காப்பாற்ற நினைப்பவர் யாவருமே இவ்வுலகில் சாட்சியாளர்கள். இவர்களைத் தேடி இறைவனே வந்து விடுகின்றார். இந்த சாட்சியாளர்கள் மூலமாக இறைவன் தனது கருணையின் சொரூபத்தை காட்சியாக வெளிப்படுத்துகின்றார். நாம் ஒவ்வொருவரும் இந்த நேரத்தில் சாட்சியாக இருப்போம். தன் மூலம் இறைவனை வெளிப்படுத்தக்கூடிய காட்சியாக இருப்போம். மனசாட்சியின் படி தனித்திருந்து மனிதம் காப்போம்.பாரதத்தின் புனிதம் காப்போம்.நல்லது.வாழ்த்துக்கள். அருகிலுள்ள பிரம்மகுமாரிகள் நிலையத்தில் இறைவனுடன் இணையும் ராஜயோகத்தை இலவசமாக கற்று மனதிற்கும் உலகிற்கும் அமைதியின் தீபத்தை ஏற்றி வேற்றுமையில் ஒற்றுமை காண்போம்.நல்லது. வாழ்த்துக்கள்.