எச்சில் செய்த கனிகளை ஆசையாக உட்கொண்ட ஸ்ரீராம – லட்சுமணர்

281

“அர்ச்சன பக்தி….”

அருவியானது கொட்டிக் கொண்டிருந்தது…. ஒரு ஓரமாய் யானைகள் நீரருந்திக் கொண்டிருந்தன…. அருவித் தடாகத்தில் அன்னங்கள் சில நீந்திக் கொண்டிருந்தன…. ஹோவென்ற சப்தம்…. அதை உயிரின் சப்தம் என்றும் கூறலாம்… இந்த ரம்யமான சூழலில் உள்ள ஆசிரமத்தில் ஸ்ரீராம – லட்சுமணர்கள்….

சபரி அவர்கள் முன் கண்களில் ஆனந்தக் கண்ணீரோடு… நின்றபடி இருந்தாள்…. இருவரின் திருவடிகளையும் பார்த்தாள்…. அவர்கள் வனமிசை திருவடிகளால் நடந்து வந்ததால் சின்னஞ் சிறுசிராய்ப்புகள் தெரிந்தன…. மண்டியிட்டு அந்தச் சிராய்ப்புகளைத் தொட்டு… அவளுக்கே வலிப்பது போல சிலிர்த்துக் கொண்டாள்….

“தாயே…. என்ன இது ‘….? தாங்களா எம் பாதம் தீண்டுவது…? ஸ்ரீராமர் தம் திருவடிகளை பின்னுக்கு இழுத்துக் கொண்டார்….

“ஸ்ரீராமா…. கால் நோக…. நடந்து வந்த தடயங்கள் …. என் மனம் நோக வைக்கின்றன…. எந்தத் திருவடிகளை நினைத்தாலே மோட்சம் கிட்டுமோ அந்தத் திருவடிகளை தீண்டக் கிடைத்த ஒரு வாய்ப்பை எமக்கு நீ அளிக்க மாட்டாயா….? சபரி கெஞ்சும் குரலில் கேட்டாள்….

“தாயே தங்களின் பேரன்பைக் கண்டு நெகிழ்கிறேன்…. தங்களுக்குள் எம் தாய்களான மூவரையும் ஒருசேரப் பார்க்கிறேன்…. உங்களுக்கு யாம் என்ன கைம்மாறு செய்யப் போகிறேன்…? என்று ஸ்ரீராமர் நெகிழ்ந்து கேட்டார்….

“கைம்மாறா …. அப்பா…. உம்மைக் கண்டதே அடியேனுக்குப் பேறு….அது சரி… என் செல்வங்களே…. நடந்தே வந்திருக்கும் உங்கள் திருமுகத்தில் அடியேன் களைப்பின் சாயலைப் பார்க்கிறேன்…. உங்களது களைப்பைப் போக்குவதே அடியேனின் முதல் பணி… இவ்வேளையில் இங்கே அடியேன் பறித்து வந்த கனிகள் உள்ளன…. அவற்றைத் தாங்கள் உட்கொள்ள வேண்டும்…. அடியேன் தர விரும்பும் கனிகளை உண்டு அடியேனை மகிழ்விப்பீர்களா….? என்று கேட்ட வண்ணம்…. சபரி எழுந்து சென்று ஒரு ஓலைக் கூடைக்குள் போட்டு வைத்திருந்த இலந்தைப் uழங்களை எடுத்து வந்தாள்…. அவற்றில் பல பழங்கள் சுண்டிச் சுருங்கிவிட்டிருந்தன…. அவற்றில் ஒன்றை தன் வாயில் போட்டு சுவைத்துப் பார்த்தசபரி…. சற்றே முகம் கோணிப் போய் அதை அப்படியே விழுங்கி விட்டு…. பூஞ்சை பூத்த விழிகளால்…. பார்த்துப் பார்த்து சில கனிகளை வெளியே எடுத்து… அதையும் தம் பற்களால் லேசாகக் கடித்து…. நாக்கால் வருடி இனிக்கிறதா…. என்று பார்த்து விட்டு பின்…”…. இந்தக் கனி இனிக்கிறது…. இது நன்றாக உள்ளது…. ஆஹா இது பிரமாதமாக உள்ளது….” என்று பார்த்தபடி தந்தாள்…

ஸ்ரீ லட்சுமணன் வியப்புடன் சபரியின் செயலைப் பார்த்தபடி இருக்க….. ஸ்ரீராமர் அக்கனிகளை ஆசையாக உட்கொண்டார்….

எச்சில் செய்த கனிகளை தருகிறோம் என்கிற எண்ணமே சபரிக்கு இல்லை …. அண்ணனுக்கே இல்லை… தம்பியிடம் மட்டும் இருக்குமா …?

கனியமுது செய்வித்த சபரி…. கண்களில் நீர் மல்கிட ஸ்ரீராம- லட்சுமணரைப் பார்த்தாள்…. அந்தக் கண்ணீரே அவள் உள்ளம் அப்போது இருக்கும் இருப்பை அவர்களுக்குப் புரிய வைத்து விட்டது….

“ஸ்ரீராமா…. அறுசுவை விருந்தளித்து… அதன் முடிவில் தாம்பூலம் தந்து…. பின் ஆசனத்தில் அமரச் செய்து உண்ட களைப்புத் தீர…கவரி வீசி… அவ்வேளையில் மனத்திற்கினிய சங்கீதம் இசைத்து…. மனதை பரம திருப்தியில் ஆழ்த்தும் வசதி வாய்ப்புக்களை இந்தக் கிழவி பெற்றேனில்லை…. ஏதோ இக் கானகம் இருக்கப் போய்…. இந்தக் கனிகளாவது கிட்டியது… அடியேனால் அதைத்தான் தர முடிந்தது ….. அடியேனின் விருந்தோம்பலில் பிழைகள் இருப்பின் பொருத்தருள வேண்டும்…. ” என்ற சபரியின் நலிந்த கரங்களைப் பற்றி …. தம் திருக்கண்களில் ஒற்றிக் கொண்டார் ஸ்ரீராமர்….

“தாயே…. யாம் இப்போது ராஜகுமாரனில்லை…. ஆரண்ய தபஸ்வி…. அதிலும் எம் சக பத்தினியைப் பறிகொடுத்து விட்டு…. தேடி அலையும் ஒரு கர்மேந்திரியன்…. உங்கள் அன்பும் அரவணைப்புமே…. ” பெரு விருந்து ” தங்கள் பாசத்திற்கும்…. பேரன்புக்கும்…. என்ன கைம்மாறு செய்யப் போகிறேன்…. என்று தெரியவில்லை என்றார்…. அப்படியே “தாயே…. இங்கே தங்களோடு தங்கி சில தினங்களையாவது கழிக்க விருப்பம்தான்…. ஆனால் எம் ப்ரியசகியின் எண்ணம் எம்முள்…. இடைவிடாது துடித்துக் கொண்டிருக்கிறது…. யாம்…. அவரைக் காணும் வரை எமக்கு வேறு எதுவும் பொருட்டில்லை…. ஆகவே யாம் விடை பெற்றுக் கொள்கிறேன்…. உத்தரவு தாருங்கள்” என்றார்… சபரியும் கண்ணீருடன் வழியனுப்பி வைத்தாள்….

நெடுநேரம்…. அவர்கள் கண்களிலிருந்து மறையும் வரை…. கண்ணீருடன்… பார்த்தபடி இருந்தாள் சபரி ….

“ஸ்ரீராமஜெயம்….. ஸ்ரீராமஜெயம்…. ஸ்ரீராமஜெயம்…..”