ஹோலி பண்டிகையின் முக்கிய சடங்குகள் என்னென்ன?

86

ஹோலி பண்டிகையின் முக்கிய சடங்குகள் என்னென்ன?

இந்து சமயத்தில் கொண்டாடப்படும் இளவேனிற்கால பண்டிகை ஹோலி. கோலி அல்லது ஹோலி அல்லது அரங்கபஞ்சமி என்று அழைக்கப்படும். வட இந்தியாவில் அதிகளவில் கொண்டாடப்பட்டாலும் தற்போது இந்தியா முழுவதும் ஹோலி பண்டிகையானது பரவத் தொடங்கியுள்ளது. இந்திய மக்கள் பலரும் ஹோலி கொண்டாடுகின்றனர். இது வசந்த கால விழா என்றும் அழைக்கப்படுகிறது.

ஹோலிப் பண்டிகை குளிர் காலத்தின் இறுதியில் பங்குனி (பிப்ரவரி/மார்ச்) (பங்குனிப் பெளர்ணமி) மாதத்தின் கடைசி முழு நிலவு நாளில் கொண்டாடப்படுகின்றது. இது பொதுவாக பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தின் இறுதியில் வரும். அனால், இந்த ஆண்டு மார்ச் மாதத்தின் தொடக்கத்தில் வந்துள்ளது. மாசி பௌர்ணம்மி அன்று ஹோலி பண்டிகை கொண்டாடப்படுகிறது. கடந்த 2009 ஆம் ஆண்டில் ஹோலிப் பண்டிகை மார்ச் 11 ஆம் தேதியன்றும், ஹோலிகா தகனம் மார்ச் 10 ஆம் தேதியன்றும் கொண்டாடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. பஞ்சமிக்கு சில நாட்கள் கழித்து வருகின்ற அரங்க பஞ்சமியுடன் ஹோலி பண்டிகை முடிவடையும்.

இந்த ஆண்டு மாசி 24 ஆம் தேதியான இன்று ஹோலி பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதாவது, மார்ச் 07 ஆம் தேதியான நேற்று பௌர்ணமி. நேற்று ஹோலிகா தஹான் (ஹோலிகா தகனம் – எரிக்கப்பட்டது) விழாவும், இன்று மார்ச் 08 வண்ணங்களின் விழாவான ஹோலியும் கொண்டாடப்படுகிறது. இது ஒரு வசந்த கால விழா என்றும் அழைக்கப்படுகிறது. வசந்தத்தை வரவேற்கும் வகையில் இந்த விழா கொண்டாடப்படுகிறது.

ஹோலி பண்டிகையின் முதல் நாளில் ஹோலிகா தஹான் அல்லது சோட்டி ஹோலி கொண்டாடப்படுகிறது. தீமையின் மீது நன்மையானது வெற்றி பெற்ற நாளாக கொண்டாடப்படுகிறது. 2ஆவது நாளன்று துலண்டி அல்லது ரங்காலி ஹோலி விழா கொண்டாடப்படுகிறது. கிருஷ்ணர் மற்றும் ராதையின் அன்பை மக்கள் இந்த 2ஆம் நாளில் கொண்டாடுகின்றனர்.

ஹோலிகா தஹான் விழா மார்ச் 07 ஆம் தேதி நடைபெறும். ஹோலிகா தஹான் பூஜையானது இரவு 9.06 மணிக்கு தொடங்கி 10.16 மணிக்கு முடிவடையும். துலண்டி விழாவானது மார்ச் 08ஆம் தேதி கொண்டாடப்படும். இந்த பௌர்ணமி திதி மார்ச் 06 அன்று மாலை 05.3 மணிக்கு தொடங்கி மறுநாள் மார்ச் 07 ஆம் தேதி இரவு 07.14 வரை இருக்கும்.

ஹோலி பண்டிகை அதாவது வண்ணங்களின் விழா அன்று மக்கள் ஒருவருக்கொருவர் பல வண்ணப் பொடிகள் பூசியும், ஒருவர் மீது ஒருவர் வண்ணங்கள் கலந்த தண்ணீரை பீய்ச்சி அடித்தும் மகிழ்வர். ஹோலி பண்டிகையில் மிகவும் சுவை மிகுந்த குஜியா என்ற உணவையும், பாங் என்ற பானத்தையும் சமைத்து ஒருவருக்கொருவர் பகிர்ந்து உண்டு மகிழ்வர்.

ஹோலி பண்டிகைக்கு முதல் நாள் ஹோலிகா தஹான் விழா கொண்டாடப்படும். இந்த நாளில் மக்கள் குடும்பங்களாக ஒன்று சேர்ந்து நெருப்பை மூட்டி மகிழ்ச்சி அடைவார்கள். இந்தியாவில் ஒரு சில பகுதிகளில் ஹோலி பண்டிகையானது தல் ஜத்ரா அல்லது தல் பூர்ணிமா என்றும் அழைக்கப்படுகிறாது.

ஹோலிகா தஹான் நாள் அன்று சில முக்கிய சடங்குகள் செய்யப்படும். ஹோலிகா என்ற அரக்கியை நினைவு கூர்ந்து இந்த ஹோலிகா தஹான் சடங்குகள் செய்யப்படும். அதன் மூலமாக தீமையின் மீது நன்மையானது வெற்றி பெற்றதை நினைத்து மக்கள் மகிழ்ச்சியோடு கொண்டாடுவர். ஹோலிகா தஹான் நாளின் போது விறகுக் கட்டைகளை அடுக்கி வைத்து அதனை மௌலி என்று அழைக்கப்படும் வெள்ளை நூலினால் 3 அல்லது 7 முறை கட்டுவார்கள். பிறகு அந்த விறகு கட்டையின் மீது புனித நீரை ஊற்றி குங்குமம் வைத்து அதன் மீது பூக்கள் தூவி வணங்குவர். இந்த சடங்கு முடிந்த பிறகு அந்த விறகுகள் மீது நெருப்பு வைத்து பெரு நெருப்பை மூட்டி மகிழ்வர்.

ஹோலி கொண்டாட்டத்திற்கு புராணங்களில் பல கதைகள் சொல்லப்பட்டுள்ளது. ஒரு காலத்தில் இரணியகசிபு என்ற அசுரன் வாழ்ந்து வந்தான். அவனை மனிதர்களாலும், உயிரினங்களாலும் கொல்ல முடியாத அளவிற்கு சாகா வரம் பெற்றவனாக இருந்தான். நாளுக்கு நாள் தொடர்ந்து மக்களை துன்புறுத்தி வந்துள்ளான். உலகிலுள்ள மக்கள் அனைவரும் மகா விஷ்ணுவை விட்டுவிட்டு தன்னை மட்டும் வணங்க வேண்டும் என்பதற்காக துன்புறுத்தி வந்தான்.

ஆனால், அவனது மகனான பிரஹலாதன் தந்தையின் கொடூரத்தனத்தை மறந்து மகா விஷ்ணு மீது தீவிர பக்தி கொண்டிருந்தான். இதையடுத்து, தனது சகோதரி ஹோலிகா என்ற அரக்கியின் உதவியுடன் மகனை கொல்ல முடிவு எடுத்தான். ஹோலிகாவிடம் உள்ள ஒரு சால்வை அவளை நெருப்பிலிருந்து பாதுகாக்கும். ஆனால், மற்றவர்களை அது எரித்துவிடும். இதன் மூலமாக அவனை கொன்றுவிடலாம் என்று முடிவெடுத்த ஹோலிகா, பிரஹலாதனை தன்னோடு பெருநெருப்பில் வந்து அமருமாறு பணித்தாள்.

இருவரும் பெருநெருப்பிற்குள் இறங்கினா். அவள் மட்டும் தனது சால்வையால் தன்னை மூடிக் கொண்டாள். நெப்பானது அதிக வெப்பத்துடன் எாியத் தொடங்கியது. அப்போது விஷ்ணுவின் அருளால் ஹோலிகா சுற்றியிருந்த சால்வையானது தானாக பிரிந்து, அவளை விட்டு பறந்து சென்று பிரஹலாதனை சுற்றிக் கொண்டது. விஷ்ணு பகவானின் அருளால் பிரஹலாதன் நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டான். ஹோலிகா நெருப்பில் சாம்பலானாள்.

ஹோலிகா எரிந்து சாம்பலான தினத்தை ஹோலி பண்டிகை என்று கொண்டாடுகிறோம். விஷ்ணு பகவான் பாதி மனித வடிவமும், பாதி சிங்க வடிவமும் எடுத்து, பகலும், இரவும் இல்லாத அந்தியிருட்டில் வீட்டின் தாழ்வாரப் பகுதியில் (வீட்டிலோ வெளியிலோ இல்லாத ஒரு இடத்தில்) இரணியகசிபுவை தனது மடியில் வைத்து (விண்ணிலும் மண்ணிலும் இல்லாதபடி) தனது விரல் நகங்களால் கிழித்துக் கொன்றார்.

கண்ணன் பிறந்து வளர்ந்த இந்த விரிந்தாவனத்திலும் மதுராவிலும் இந்த திருவிழாவானது 16 நாட்கள் கண்ணன் ராதாவின் தெய்வீக காதலை கொண்டாடும் அரங்கபஞ்சமி நாள் வரை கொண்டாடப்படுகிறது. கண்ணன் கோபியர்களுடன் கொஞ்சி விளையாடி இந்த நாள் தான் ஹோலி பண்டிகை. இந்தப் பண்டிகையானது கண்ணன் மற்றும் ராதா இருவரும் விளையாடிய விளையாட்டு. கண்ணன் தனது தோலின் நிறம் கருப்பாகவும், ராதா சிவப்பாகவும் அழகாகவும் இருப்பதாகவும் தனது தாயாரிடம் சொன்னதாகவும் கூறப்படுகிறது. இதற்கு கண்ணனின் தாயார் யசோதா, ராதையின் முகத்தில் வண்ணம் பூசிட செய்ததாகவும் கூறப்படுகிறது.

ஹோலி பண்டிகை உருவானதற்கு மற்றொரு புராணக் கதையும் சொல்லப்படுகின்றது. அதாவது, காமதேவனைப் பற்றியது. பார்வதி தேவி சிவபெருமானை மணப்பதற்கு உதவும் பொருட்டு தவம் செய்து கொண்டிருந்த சிவபெருமான் மீது காமன் தனது பூக்கணையைச் செலுத்தி தவத்தைக் கலைத்தார். இதனால், அவரது உடல் அழிந்தது. சிவபெருமான் தனது 3ஆவது கண்ணைத் திறந்ததால் அவரது பார்வையை தாங்க முடியாமல் காமனின் உடல் சாம்பலானது.

காமனின் மனைவியான ரதியின் வேண்டுதலுக்கிணங்க காமனை மீண்டும் சிவபெருமான் உயிர்ப்பித்தார். ஆனால், உணர்வு வழி மட்டுமெ அன்பை வெளிப்படுத்த முடியுமே தவிர, உடல் வழி காமத்தை வெளிப்படுத்த முடியாத அருவ உருவத்தை உருவாக்கினார். இந்த நிகழ்வை குறிக்கும் வகையில் தான் ஹோலி பெருந்தீ கொண்டாடப்படுவதாக சொல்லப்படுகிறது.