விஷ்ணு சஹஸ்ரநாமத்தின் சிறப்புகள் என்னவென்று தெரியுமா?
பாரதப் போரில் பீஷ்மர் அம்பு படுக்கையில் இருக்கும் சமயம், பாண்டவர்கள் ஸ்ரீ கிருஷ்ணனுடன் சென்று அவரை வணங்குகிறார்கள். அப்போது கிருஷ்ணர் பீஷ்மரிடம் பாண்டவர்களுக்கு தர்மத்தை உபதேசிக்கும்படி கோருகிறார். பீஷ்மரும் அவர்களுக்கு பல தர்மோபதேசங்களை செய்து விட்டு, ஸ்ரீமன் நாராயணனின் பெருமைகளை போற்றும் ‘ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம்’ என்ற திவ்ய ஸ்தோத்ரத்தையும் உபதேசிக்கிறார். இதில் சிவபெருமானும் இடையே தோன்றி ஆமோதிப்பது தான் இதன் சிறப்பு. வேறு எந்த ஸ்லோகத்துக்கும் இந்த பெருமை கிடையாது. ‘ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம்’ பற்றி சற்று விரிவாக பார்ப்போம்…
வேத வியாசர் தாம் இயற்றிய நூல்களில் பல அற்புதமான ஸ்லோகங்களை வைத்திருக்கிறார். ஆழ்கடலில் முத்து எப்படி இருக்கிறதோ அதே போன்று அவற்றை படிக்க படிக்க அந்த அரும்பெரும் பொக்கிஷங்களை நாம் உணரலாம். உலக தர்மத்தை அறிந்தவர்கள் என்று பாகவதம் 12 பேரை பட்டியலிடுகிறது. அவர்களுள் பீஷ்மரும் ஒருவர். இதிலிருந்தே பீஷ்மரின் பெருமை விளங்கும். பாரதப் போரின்போது தர்மத்தை பற்றியும் அதன் தன்மைகளை பற்றியும் கிருஷ்ணரிடம் யுதிஷ்டிரர் கேட்டபோது, “இதை கூறுவதற்கு தகுதியான நபர் பீஷ்மர் தான்” என்று கூறி பீஷ்மரிடம் அழைத்துச் சென்றார்.
யுதிஷ்டிரரின் ஐயப்பாடுகளை நீக்கும் வகையில் பீஷ்மர் அரச தர்மம், நெருக்கடி நிலை தர்மம், ஆண், பெண் தர்மம், தான தர்மம், வீடுபெறும் தர்மம் ஆக இன்னும் பல தர்மங்களை உபதேசித்தார். நம் முன்னோர்கள் நல்வழி என்று தாம் ஆராய்ந்து உணர்ந்த வழியில் தாமும் சென்று நலம் பெற்றபின் நம்மையும் அதைப் பின்பற்றுமாறு அன்புடன் கட்டளையிட்டுள்ளதை ‘அனுசாஸனம்’ என்பர். இப்படி அனுசாஸனங்கள் நிறைந்த அனுசாஸன பர்வத்தின் முடிவில், ஒரு சிறந்த அனுசாஸனமாக விஷ்ணு சஹஸ்ரநாமம் இடம் பெறுகிறது.
முடிவாக யுதிஷ்டிரர் பீஷமரிடம் கேட்கும் கேள்விகள் ஆறு: இறைவனைப் பற்றி விளக்கும் எல்லா நூல்களிலும் கூறப்பட்டுள்ள சிறந்த ஒரே தெய்வம் எது? அதை அடைவதற்குரிய மேலான நிலை எது? எந்த தெய்வத்தை அவரது குணச்சிறப்புகளைப் புகழ்ந்து பாடி மானிடர்கள் நலம் எய்துவார்கள்? எந்த தெய்வத்தை புறத்தே அல்லது மனத்தினாலேயோ வழிபட்டு நலமடைய வேண்டும்? எல்லா வழிபாட்டு நெறிகளிலும் சிறந்த நெறியாகத் தங்கள் விருப்பிற்கும் கருத்திற்கும் ஏற்றது எது? எதனை ஜபித்து மனிதன் பிறப்புக் கட்டிலிருந்து விடுபடுகிறான்?
இவை அத்தனை கேள்விகளுக்கும் ஒரே முடிவான விடையாக பீஷ்மர் விஷ்ணுவின் பெயர்களை தியானித்தும், துதித்தும், வணங்கியும் ஒருவன் செய்வதால் எல்லாவித துக்கங்களையும் கடந்துவிடுவான் என்று சொல்லி, விஷ்ணு சஹஸ்ரநாமத்தைச் சொல்கிறார். மந்திர சக்தி மிக்க கடவுளின் நாமங்களை வரிசைப்படுத்தித் தொகுத்து யுதிஷ்டிரர் மூலம் உலகுக்களித்தார் பீஷ்மர்.இறைவழிபாட்டிற்கு மூன்று வித வெளிப்பாடுகள் உண்டு. அவன் குணங்களையும் உருவங்களையும் மனதிலேயே நிறுத்துவது; அவைகளை பறைசாற்றும் நாமங்களை நாவினால் பாடுவது.; சிரம் தாழ்த்தி அவனை வணங்குவது.
