சத்தான ராகி களி மற்றும் சுட்ட கத்தரிக்காய் குழம்பு செய்யலாம் வாங்க…

150

சத்தான ராகி களி மற்றும் சுட்ட கத்தரிக்காய் குழம்பு செய்யலாம் வாங்க…

தேவையான பொருட்கள்:

  1. கேழ்வரகு மாவு – ஒரு கப்,
  2. நெய் – சிறிதளவு,
  3. உப்பு – தேவையான அளவு,
  4. தண்ணீர் – ஒன்றரை கப்.

செய்முறை விளக்கம்:

முதலில், ஒரு அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் ஒன்றரை கப் தண்ணீர், உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.
பின்னர் நன்கு தண்ணீர் கொதிவந்ததும் கேழ்வரகு மாவு சேர்த்து கிளறிவிடாமல் வேகவிடவும். பாதி வெந்ததும், ஒரு மரக்கறண்டியைக் கொண்டு கட்டி இல்லாமல் கிளறிவிடவும்.
கேழ்வரகு மாவு நன்றாக வெந்து கெட்டியாகும் வரை கிளறிக் கொண்டே இருக்கவும். இறுதியாக, இந்த கலவையை ஒரு நெய் தடவிய தட்டில் போடவும்.
பிறகு கையை ஈரமாக்கிக் கொண்டு ஒவ்வொருப் பிடியாக எடுத்து உருண்டையாக்கிக் கொள்ளவும்.
இப்போது மிகவும் சுவையான மற்றும் சத்தான ராகி களி தயார். இதற்கு ஏற்றாற்போல் சுவையான சுட்ட கத்தரிக்காய் குழம்பு எப்படி செய்வது என்பதை பார்ப்போம்..

சுட்ட கத்தரிக்காய் குழம்பு செய்ய தேவையான பொருட்கள்:

1. கத்தரிக்காய் – ஆறு,
2. காய்ந்த மிளகாய் – பத்து ,
3. நல்லெண்ணெய் – 3 தேக்கரண்டி,
4. கடுகு – 1 தேக்கரண்டி,
5. உளுத்தம் பருப்பு – 1 தேக்கரண்டி,
6. கறிவேப்பிலை – சிறிதளவு,
7. புளி – எலுமிச்சை அளவு,
8. வெல்லம் – சிறு துண்டு,
9. உப்பு – தேவையான அளவு .

செய்முறை விளக்கம்:

கத்தரிக்காயை நன்கு கழுவிய பின்பு அதை முழுசாக அப்படியே அடுப்பில் காட்டி சுட வேண்டும் என்பதால் சொத்தை , பூச்சி இல்லாமல் கத்தரிக்காய் பார்த்து எடுத்துக் கொள்ளுங்கள். அதன் தோல் கருப்பாகி உதிர்ந்து விழும் வரை சுட வேண்டும். சுட்டதும் காய்ந்த மிளகாய்களையும் சுட்டு எடுக்க வேண்டும், பின் கத்தரிக்காய் மற்றும் காய்ந்த மிளகாய்களை மிக்ஸியில் போட்டு மைய அரைக்க வேண்டும்.

இப்போது கடாய் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி கடுகு , உளுத்தம் பருப்பு சேர்த்து தாளிக்க வேண்டும். பின் கறிவேப்பிலை சேர்க்க வேண்டும். இப்போது அரைத்த கத்தரிக்காய் விழுது சேர்த்து புளி கரைத்து ஊற்ற வேண்டும். உப்பு தேவையான அளவு சேர்த்து நன்கு கொதிக்க வேண்டும். இறக்கும் முன் வெல்லம் சேர்த்து இறக்கிவிடுங்கள். அவ்வளவுதான் சுட்ட கத்தரிக்காய் குழம்பு தயார். இதை ராகி களி யுடன் பரிமாறவும்.