சாந்தி கல்யாணம் என்றால் என்ன?
அந்த நாட்களில் ஆண்/பெண் இருவருக்கும் 10-12 வயது இருக்கும் பொழுதே திருமணம் முடித்து விடுவார்கள். பிறகு பெண் பெரியவளான பிறகுதான் சாந்தி முஹூர்த்தம் நடத்துவார்கள்.
சிவசங்கரி அவர்கள் எழுதிய பாலங்கள் நாவலில் முதல் தலைமுறைல நடந்த சாந்தி கல்யாணம் பற்றி விவரித்த விதம் அதுவே இன்னொரு கல்யாணம் மாதிரி பிரம்மாண்டாமா இருக்கு. பெண் பெரியவளான வைபவதுக்கே சொந்தக்காரா, தெரிஞ்சவா அத்தனை பேருக்கும் தகவல் சொல்லி அதை ஒரு மினி கல்யாணம் மாதிரி கொண்டாடறா.
பெண் திரண்டதுக்கு புட்டு சமைத்து ஊருக்கே கொடுக்கறது, விருந்து சீர் செனத்தின்னு ஆர்ப்பாட்டமா கொண்டாடுவார்கள். அதுக்கு பிறகு நல்ல நாள் பார்த்து சாந்தி கல்யாணத்துக்கு நாள் பார்த்து மேள தாளத்தோடு பெண்ணை புக்ககத்துக்கு அழைத்துக் கொண்டு செல்வார்கள். அதன் பிறகு வைதீக பிராமணாள் சாஸ்திரப்படி வேதம் சொல்லி பெண்ணுக்கு கலச அபிஷேகம், பெண் மாப்பிள்ளையை மணையில் உட்கார வைத்து சீர் வரிசைகளை ஓதியிடுவது வழக்கமாகும்.
வைபவத்துல கலந்துண்டவா எல்லாருக்கும் விருந்து சாப்பாடு, சாயங்காலம் அவல் /பிடி கொழுக்கட்டை, சேவை வகைகள்னு அமர்க்களப்படும். அது முடிஞ்சோன்ன இரவு சாந்தி முஹூர்த்தத்துக்கு சோபன அறை இந்திரலோகம் போல ஜோடனை நடக்கும். விதம் விதமான புஷ்ப அலங்காரம், ஏழுவகை பக்ஷணங்கள், ஏழுவகை பழங்கள், பருப்பு தேங்காய், குடம், குத்து விளக்கு, தாம்பாளம்னு சீர் வரிசைப் பட்டியல் சீனப் பெருஞ்சுவர் மாதிரி நீண்டு இருக்கும்.
அன்னிக்கு ராத்திரி மணமக்களுக்கு வெள்ளி தட்டுல பால் சாதம் போட்டு சாப்பிடற சொல்ற சம்ப்ரதாயம் உண்டு. சோபன அறையில் தம்பதியர் தங்கறதுக்கு முன்னாடி ஒரு வயதான தம்பதியர் சோபன கட்டில்ல உட்கார்ந்து எழுந்துருக்கற வழக்கம் உண்டு. பெண் மாப்பிள்ளை சோபன அறைக்குள் வந்த உடனே சில வேத மந்திரங்கள் உண்டு. அதுக்கு பிறகு பெண் ஆத்துக்காரருக்கு தலயணை மந்திரம் ஓதறது தனி எபிசோட் ஆகும்.
சாந்தி முஹூர்த்த அறையில பக்ஷணங்கள், பழங்கள், பருப்பு தேங்காய், குடம், குத்து விளக்கு தாம்பாளங்கள், வெள்ளிக் குடத்துல பால்னு பட்டியல் கொலு இடம் பெறும்.
இத்தனை பக்ஷண வகையாறாக்களை பார்த்தால் அது சாந்தி முஹூர்த்த அறை மாதிரி இல்லாமல் திருநெல்வேலி சாந்தி ஸ்வீட்ஸ் கடை மாதிரி இருக்கும். ராத்திரி ஈ எறும்பு மொய்க்காம பார்த்துக்கணும். இல்லேன்னா பக்ஷண தட்டுகளை சுத்தி எறும்பு பவுடர் தூவி வைக்கணும். விஷயம் தெரியாதவா யாராவது உள்ள வந்து ஏதோ லாலா கடைன்னு நினைச்சுண்டு அரைகிலோ அல்வாவும், அரைகிலோ காரா சேவும் கொடுங்கோன்னு கேக்காத வரை க்ஷேமம்.
எல்லா அமளி துமளிகளும் அடங்கின பிறகு பெண் கையில பால் சொம்பை கொடுத்து அனுப்பி புத்திமதிகள் சொல்லி அனுப்புவா. அதோட விடுவாளா அவா சோபன அறைக்கு போன பிறகு வெளியில உள்ள பேரிளம் பெண்கள் (கிழவிகள்னு சொன்னா குழவியால இடிப்பா) சோபன அறை பாடல்களை விடிய விடிய பாடுவார்கள். நல்லவேளை பூஜை அறையில கரடிகள் நுழையாம வெளில இருந்தே இடைஞ்சல் பண்ணிண்டு இருக்கும்.
மறுபடியும் கார்த்தால மங்கள ஸ்நானம், பெண் அகத்து மனுஷாளுக்கு பிள்ளையாத்துல விருந்து, கட்டுசாதக் கூடை, காய்கறிகள், அரிசி மூட்டை, தாம்பூலம்னு பதில் சீர்வரிசைகள் கொடுத்து மரியாதையோடு அனுப்பி வைப்பார்கள்.
இந்த காலத்துல கல்யாணம் முடிஞ்ச அன்னிக்கே சத்திரத்துல சாந்தி கல்யாணம் பண்ணிடறா, அது பரவாயில்ல, ஏன்னா வைதீக கார்யங்கள் நடந்த இடம், புது மெத்தை, தலையணைகள், அதனால் தோஷமில்லை.
ஆனால் அந்தஸ்து உள்ளவா ஆடம்பர மோகத்துல நட்சத்திர ஹோட்டல்களில் சாந்தி முஹூர்த்தம் நடத்தற கூத்து தாங்க முடியலை. சொல்றது தப்பில்லை. ஹோட்டல்களில் ரெய்டுகள், தவறான வழியில் உபயோகபடுத்தியவர்கள்னு எத்தனையோ அநாசாரங்கள் இருக்கும்.
சாஸ்திர சம்ப்ரதாயப்படி கல்யாணம் பண்ணிட்டு சாக்கடையில் போய் கால் வைக்க வேண்டாம். ஆனாலும் அந்த காலத்து சாந்தி கல்யாணங்களை பற்றி நினைத்தால் தீக்ஷிதர் கல்யாணம் திமிலோகப்பட்ட மாதிரி அமர்க்களமாக நடத்தியுள்ளார்கள்.
