Akshaya Tritiya 2023: நகை வாங்க நல்ல நேரம் எப்போது?
அட்சய திரிதியை (அட்சய திருதியை) வைஷாக மாதம் சுக்ல பக்ஷத்தின் மூன்றாம் நாளில் கொண்டாடப்படுகிறது. அட்சய திரிதியா இந்து மதத்தில் சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது.
அட்சய என்ற வார்த்தையின் அர்த்தம் ‘எதுவும் அழியாதது அல்லது அழியாதது’ என்பதாகும். அத்தகைய சூழ்நிலையில், நம்பிக்கையின்படி, ஒருவர் தானம், ஸ்நானம், யாகம், மந்திரம் போன்ற சுபகாரியங்களைச் செய்தால், அதனால் வரும் அசுப பலன்களுக்குச் சிதைவு ஏற்படாது என்று கூறப்படுகிறது.
அட்சய திரிதியை திதி மற்றும் நல்ல நேரம்
இந்த ஆண்டு அட்சய திருதியை ஏப்ரல் 23 (இன்று) வந்துள்ளது. ஏப்ரல் 22 ஆம் தேதி காலை 09:18 மணிக்கு திரிதியை திதியின் ஆரம்பம் தொடங்கி 23 ஆம் தேதி காலை 09:27 மணிக்கு முடிவடைகிறது. இதனுடன் ஆயுஷ்மான் யோகம், சுப கிருத்திகை நட்சத்திரம் (நட்சத்திர அதிபதி சூரியன்), சர்வார்த்த சித்தி யோகம், ரவி யோகம், அமிர்த சித்தி யோகம், திரிபுஷ்கர யோகம் ஆகியவையும் இருக்கும்.
இந்த திரிதியை முடியும் காலை 9.27 மணிக்குள்ளாக எப்போது வேண்டுமானாலும் தங்க நகை வாங்கிக் கொள்ளலாம். அதிலேயும், குளிகை நேரமாக இருந்தால் கூடுதல் சிறப்பு. ஏனென்றால் குளிகை நாம் செய்வது எதுவாக இருந்தாலும் அது திரும்ப திரும்ப நடக்கும் என்பது ஐதீகம். அதன்படி இன்று குளிகை பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை என்பது குறிப்பிடத்தக்கது. அப்படி காலையில் தங்கம் வாங்க முடியாவிட்டால், முதலில் மஞ்சள், உப்பு, அரிசி வாங்கிக் கொள்ளலாம். அதன் பிறகு கூட தங்கம் வாங்கலாம்.
விரதம் இருப்பது எப்படி?
நம் அன்றாட வாழ்வில் நட்சத்திரங்கள் மற்றும் திதிகள் முக்கிய பங்கு வகிப்பவை. சில மாதங்களில் வரும் திதிகளுக்கு தனி சிறப்பு உண்டு. அந்த வகையில் சித்திரை மாதம் அமாவாசைக்கு பிறகு வரும் திருதியை திதி அட்சய திருதியை எனப் போற்றப்படுகிறது.
அட்சய திருதியை நாளில் வாங்கப்படும் எந்தப் பொருளும் இல்லத்தில் குறைவின்றி நிறைந்திருக்கும் என்பது நம்பிக்கை. இந்த நாளில் குண்டுமணி அளவுக்காவது தங்கம் வாங்கினால், செல்வம் பெருகும் என்பது நம்பிக்கையாக இருக்கிறது. ஆனால், தங்கம் வாங்க இயலாதவர்கள் அட்சய திருதியை நாளில், சிறிதளவு உப்பு வாங்கி வீட்டில் வைத்தால் கூட செல்வ வளம் பெருகும்.
யாரை வழிபட வேண்டும்?
இந்த நாளில் லட்சுமி, குபேரன், சிவசக்தி, அன்னபூரணி, லட்சுமி நாராயணர் ஆகியோரின் படங்களில் ஏதாவது ஒன்றை வீட்டில் வைத்து விரதமிருந்து வழிபட்டால் குறைவில்லாத செல்வத்தை பெற்று சிறப்பான வாழ்க்கையை பெற்றிடலாம்.
அட்சய திருதியை நாளில் குலதெய்வ வழிபாடு செய்வதும் முக்கியமானது. அட்சய திருதியை நாளில் விரதம் இருப்பது, பூஜைகள் செய்வது, புதிய பொருட்களை வாங்குவது விட முக்கியமானது தானமளிப்பதும், முன்னோர் கடன்களை செய்வதும்தான்!
பூஜை செய்வது எப்படி?
அட்சய திருதியை தினத்தன்று அதிகாலையிலேயே எழுந்து நீராடுங்கள். பிறகு பூஜை அறையில் கோலமிடுங்கள். அதன்மேல் ஒரு மனைப்பலகையை போட்டு மேலே வாழை இலை ஒன்றினை இடுங்கள். இலையின் நடுவே கொஞ்சம் பச்சரிசியை பரப்பி அதன்மேல் ஒரு செம்பில் நீர் நிரப்பி மாவிலை, மஞ்சள் தடவிய தேங்காய் வைத்து கலசமாக்குங்கள். அதனுள் காசுகளை போடுவது காசுகளை பரப்பி அதன் நடுவே கலசத்தினை வைப்பது எல்லாம் அவரவர் வழக்கப்படி செய்யலாம்.
கலசத்தின் அருகே ஒருபடி, ஆழாக்கு அல்லது ஒரு டம்ளரில் நெல் நிறைத்து வையுங்கள். கலசத்திற்கு பொட்டு, பூ வையுங்கள். லட்சுமி நாராயணர் படம் இருந்தால் அதனையும் வைத்து அலங்கரியுங்கள். பின்னர் குத்துவிளக்கினை ஏற்றி வையுங்கள். மஞ்சள் பிள்ளையார் பிடித்து வாழை இலையில் வலதுப் பக்கமாக வையுங்கள்.
நீங்கள் புதிதாக வாங்கிய பொருளை கலசத்தின் முன்பாக வையுங்கள். அது விலை உயர்ந்த பொருளாக இருக்க வேண்டும் என்பதில்லை. அட்சய திருதியை நாளில் எல்லோராலும் வாங்க முடிந்த பொருள் ஒன்று உண்டு. அதிக பலன் தருவதும் அதுதான். உப்பு வாங்கி வைத்தாலே போதும். அஷ்டலட்சுமி கடாட்சம் உங்கள் வீடு தேடி வந்துவிடும்.முதலில் விநாயகரை வேண்டிக் கொள்ளுங்கள்.
பின்னர் கலசத்தில் மகாலட்சுமியை எழுந்தருளும்படி பிரார்த்தியுங்கள். உங்களுக்கு தெரிந்த விஷ்ணு-லட்சுமி, சிவன்-பார்வதி, குபேரன் துதிகளை சொல்லுங்கள். குசேலரின் கதையை படிப்பது கேட்பது, சொல்வதும் சிறந்தது. பின்னர் அவரவர் வழக்கப்படி தூப தீப ஆராதனைகள் செய்யுங்கள். இந்த பூஜையில் பாயாசம் அல்லது சர்க்கரை கலந்த பால் நிவேதிப்பது சிறப்பானது.
அன்றைய தினம் மாலையில் சிவாலயம், பெருமாள் கோயில் என்று உங்களால் இயன்ற தலத்திற்கு சென்று தரிசியுங்கள். அதன் பின்னர் மீண்டும் தூப, தீப ஆராதனையை கலசத்துக்கு செய்துவிட்டு, கலசத்தினை வடக்குப் பக்கமாக நகர்த்தி வையுங்கள். உண்ணாவிரதம் இருப்பது எளிய திரவ ஆகாரம் மட்டும் உண்பது எல்லாம் அவரவர் வசதி, உடல்நலத்தை பொறுத்தது. கலசத்தினை நகர்த்துவது விரதத்தினை நிறைவு செய்துவிட்டதாக அர்த்தம். பயன்படுத்திய அரிசி, கலசத் தேங்காயை வரும் வெள்ளிக்கிழமை பூஜையில் உடைத்து பொங்கல் செய்யலாம். நெல்லை ஒரு முடிச்சாகக் கட்டி அரிசிவைக்கும் பாத்திரத்தில் வைத்து விடுங்கள். காசுகளை பீரோவில் வையுங்கள்.
அட்சய திரியை நாளில் விரதம் இருப்பது, பூஜைகள் செய்வது புதிய பொருட்களை வாங்குவது எல்லாவற்றையும் விட முக்கியமானது, தானம் அளிப்பதும், முன்னோர் கடன்களை செய்வதும்தான்.இல்லாதவர்களுக்கு உங்களால் இயன்ற அளவுக்கு உதவுங்கள். பெற்றோர் பெரியோரிடம் ஆசி பெறுங்கள். நீத்தார் கடன்களை அவசியம் செய்யுங்கள். இவற்றை செய்தாலே பெரிதும் அட்சயதிருதியை வழிபாட்டின் முழு பலன்களையும் பெறலாம். பொருளை தேடிக் கொள்வதைப் போல புண்ணியத்தையும் தேடிக் கொள்ள வேண்டும் என்று பெரியவர்கள் சொல்வார்கள். அதற்கு சரியான சந்தர்ப்பமாக அட்சய திருதியை வருகிறது.
நீங்கள் மனம் உவந்து ஏழைகளுக்கு செய்யும் தான, தர்மம், பல மடங்காக வளர்ந்து, அதன் புண்ணியத்தை உங்களுக்கு கொடுக்கும். சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் அட்சய திருதியை தினத்தன்று நீங்கள் 10 சதவீதம் தானம் 10 சதவீதம் தர்மம் செய்தாலே, அது பல்கி பெருகி உங்களுக்கு 100 சதவீத புண்ணியத்தைத் தேடித் தரும்.
இத்தகைய சிறப்பான தினத்தன்று, செல்வத்துக்கு அதிபதியான லட்சுமி பூஜையை ஒவ்வொருவரும் செய்ய வேண்டும். இதனால் செல்வம் பெருகும். லட்சுமி கடாட்சம் உண்டாகும். மகாலட்சுமி படம் முன்பு நெய் தீபம் ஏற்றி லட்சுமி துதியை மனம் உருக சொல்ல வேண்டும். நிச்சயம் அலை மகள் உங்கள் வீட்டில் அவதரிப்பாள்.
