ஆறுபேர் போட்டி போடும் உடம்பு யாருக்கு சொந்தம்? என்பதைப் பற்றித் தெரிந்து கொள்வோம்.
திருவிளையாடல் புராணத்தில் “இந்திரன்பழி தீர்த்த படலத்தில்” வரும் பாடல் ஒன்று இன்றைய கால சூழலை அப்படியே மெய்பித்து காட்டுகிறது. இந்திரனது பழைய வச்ராயுதம் வாய்மடிந்து போனதால் அவருக்கு புதிய வலிமையான வச்ராயுதம் தேவைப்படுகிறது.
ததீசி என்ற முனிவரின் முதுகுதண்டு வச்சிராயுதமாக உபயோகிக்கும் வல்லமை உடையது “நீ சென்று அவரிடம் கேட்டு பெறு” என்று திருமால் யோசனை கூறுகிறார்”*
இந்திரன் ததீசி முனிவரிடம் வந்து அசுரர்களை வெல்ல உமது உடல் தேவை படுகிறது தருவீர்களா!? என்று கேட்க அதற்கு ததீசி முனிவர்.
நாய் நமது என; நரி நமது எனப்;
மாதா பிதா நமது என; நமன் தனது எனப்; பிணி பேய் நமது என மதிக்கும் பெற்றி போலாய் நமது எனப்படும் யாக்கை யாரதே?
என்கிறார் அதாவது இந்த உடல் எனக்கு சொந்தமானது இல்லை ஏற்கனவே இதற்கு அறுவர் சொந்தம் கொண்டாட கூடியவர்களாக இருக்கிறார்கள்.
அந்த அறுவர்:
1.தாய், தந்தை
2.நோய்
3.எமன்
4.நாய்
5.நரி
6.பேய்
பிறந்த பொழுது தாயும் தந்தையும் நமக்கு சொந்தமானது என்று இந்த உடலை கொண்டாடுகிறார்கள், பிறகு நோய் நொடிவந்து எங்களுக்கு சொந்தமானது என்று கூறி தஞ்சமடைகின்றன பிறகு எமன் வந்து எனக்கு சொந்தமானது என்று கொண்டு செல்கிறான் பிறகு சுடுகாட்டில் சென்று போட்டால் நாயும் நரியும் பேயும் தனக்கு சொந்தம் என கொண்டாடுகின்றன ஆக இந்த உடல் எனக்கு சொந்தமானது இல்லை ஆதலால் நான் எப்படி மறுக்க முடியும்? என்று கூறி தனது உயிரை சிவபெருமானிடத்து சேர்த்து உடலை இந்திரனிடத்து கொடுக்கிறார்.
எத்தனை அற்புதமான நிலையாமை தத்துவத்தை எளிமையாக கூறிவிட்டார் முனிவர்?
கடலின் நஞ்சு உண்டவர் கைவிட்டால் உடலினார் கிடந்து ஊர்முனி பண்டமே!! என்பது அப்பரடிகள் கூறும் உண்மையாகும். இப்படி உடலுக்கு தேவையானதையே என்றும் நிலையாக நினைக்கும் மனிதர்கள் உயிருக்கு தேவையான அருள்வாழ்வை நோக்கி என்று சிந்திக்க தொடங்குகிறார்களோ அன்றைக்கே அனைத்தும் மாறத் தொடங்கும்.
மனிதர்கள் அறிவுடையவர்களாக மாறுகிறார்கள் என்று இறைவனும் ஆதியாத்மிகம் என்று கூறப்படும் பேரழிவுகளையும் குறைப்பார் என்று மனதில் உறுதியோடு இருப்போம்.
எல்லாம் அவன் செயல் சிவன் செயலே ஆகும்.
திருச்சிற்றம்பலம்
சிவ ஓம் நமசிவாய
