பெருமாள் கோயில்களில் தலையில் சடாரி வைப்பது ஏன்?
பெருமாள் கோயிலுக்கு சென்றால் அங்கு, தலையில் சடாரி வைப்பதை பார்த்திருப்பீர்கள். ஆனால், அது ஏன் வைக்கிறார்கள்? என்று சிந்தித்து பார்த்திருக்கிறீர்களா? அதைப் பற்றிதான் இந்தப் பதிவில் பார்க்கப் போகிறோம். பெருமாள் கோயிலில் துளசி தீர்த்தமும், பெருமாளின் பாத அச்சை கொண்டிருக்கும் சடாரியும் இருக்கும். சடாரியை பக்தர்களுக்கு தலையில் வைப்பார்கள்.
சடாரி உருவான வரலாறு:
ஒருமுறை, வைகுண்டத்தில் மகா விஷ்ணு சயன நிலைக்குச் செல்ல தயாராகும் போது தன்னுடைய சங்கு, சக்கரம், கிரீடம் ஆகியவற்றை எடுத்து ஆதிசேஷன் மீது வைத்தார்.
அப்பொழுது திடீரென தன்னை தரிசிக்க வந்த முனிவர்கள் குரல் கேட்டு, ஆதிசேஷனிடம் இருந்து அவசரமாக எழுந்து சென்றார் மகா விஷ்ணு. வழக்கத்துக்கு மாறாக தன் பாதுகைகளையும் (காலில் அணிவது) ஆதிசேஷன் மேல் விட்டு சென்று விட்டார். ஆதிசேஷன் மீது சங்கு, சக்கரம், கிரீடம் அமர்ந்திருந்த இடத்தில் பாதுகைகளும் இருந்தது. இம்மூன்றுக்கும் பாதுகைகள் அருகில் இருப்பது பிடிக்கவில்லை.
சங்கும், சக்கரமும், கிரீடமும் பாதுகைகளைப் பார்த்து, “பகவானின் தலையில் இருக்கும் எங்களோடு தூசியிலே இருக்கும் பாதுகைகள் எப்படி இருக்கலாம்?” என்று கேட்டன. “இது எங்கள் தவறில்லை. பகவான் தான் எங்களை இங்கே விட்டுச் சென்றார்” என்றன பாதுகைகள். உடனே கிரீடம் கோபத்துடன் சொன்னது, உங்களின் வழக்கமான இடத்துக்குப் போய்விடுங்கள் என்று. இதுவரை பொறுமையாக இருந்த பாதுகைகள் கோபத்துடன், மகரிஷிகளும், தேவர்களும் மகா விஷ்ணுவின் பாதங்களில் விழுந்து வணங்குகிறார்களே தவிர, உங்களைத் தழுவித் தரிசிப்பதில்லை என்று பதிலுக்கு கூறியது.
பின் மகா விஷ்ணு வந்தவுடன் பாதுகைகள் முறையிட்டன. மகா விஷ்ணு, இங்கே நடந்ததை நான் அறிவேன் என்று கூறி, என் சன்னதியில் ஏற்றத் தாழ்வுகள் இல்லை என்பதை அறியாமல் சங்கும், சக்கரமும், கிரீடமும் ஆணவத்தால் புனிதமான உங்களை இழிவாக பேசினார்கள். அவர்கள் பாவ பலனை அனுபவிக்க வேண்டிய நாள் வரும் என்றார். தர்மத்தை நிலை நாட்டுவதற்கு நான் ராமாவதாரம் எடுப்பேன். அப்போது சங்கும், சக்கரமும் என் சகோதரர்களாக பரதன், சத்ருக்கனன் என்ற பெயரில் பிறப்பார்கள். அந்த அவதாரத்தில் நான் மன்னர் என்ற பதவியை ஏற்று சிம்மாசனத்தில் அமர முடியாத ஒரு சூழ்நிலை ஏற்படும்.
அப்போது இந்த கிரீடத்தை சிம்மாசனத்தில் வைத்து அதன் மீது பாதுகைகளான உங்களை வைத்து சங்கும், சக்கரமும் 14 வருடங்கள் பூஜிப்பார்கள் என்றார் மகா விஷ்ணு. இப்பொழுது உங்களுக்கு அறிந்து இருக்கும் சடாரியை ஏன் தலையில் வைக்கிறார்கள் என்று. இதன்படி தான் ராமாயணத்தில் ராமனின் பாதுகைகளை பூஜை செய்தனர். இறைவனின் முன்பு அனைவரும் சமமானவர்கள். அவர் சன்னதியில் ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடுகள் இல்லை என்ற தத்துவத்தை நமக்கு உணர்த்தவே தலையில் சடாரி வைக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.