எல்லோருக்குமே கஷ்டம் உண்டு: இறைவனுக்கும் கஷ்டம் வருமா?
ஓர் ஊரில் ஒரு வியாபாரி இருந்தார். அவர் கடவுள் பக்தி உடையவர். ஜவுளி மூட்டையைச் சுமந்துகொண்டு கிராமப் புறங்களுக்கு நடந்தே சென்று வியாபாரம் செய்து வந்தார். வீட்டில் பிள்ளைகள் சரியாகப் படிக்காததால், அவர் மிகவும் வேதனை அடைவார். தெய்வம் நமக்கு மட்டும் ஏன் இவ்வளவு கஷ்டங்கள் கொடுக்கிறது? என்று நினைத்து, தெய்வத்திடம் போய் முறையிடுவார். அப்போது ஓர் எண்ணம் தோன்றியது. தெய்வத்திடம் தனிமையில் நம் குறைகளை எடுத்துக் கூறினால் என்ன? என்று நினைத்தார். அதன்படி, ஒரு நாள் பூஜையெல்லாம் முடிந்து கோயில் மூடப்படும்போது கோயிலுக்குள்ளேயே மறைந்துகொண்டார். அவருக்கு அசதியாக இருந்ததால், அங்கேயே சிறிது நேரத்தில் உறங்கிவிட்டார்.
நடு இரவில் ஏதோபேச்சுக் குரல் கேட்டது. விழித்துப் பார்த்தார். அப்போது படிக்கட்டும் தூணும் பேசிக்கொண்டிருந்தன. அவர் அதை உற்றுக் கவனித்தார். அப்போது படிக்கட்டு தூணிடம் நாம் எல்லோரும் ஒரே பாறையாகத்தான் இருந்தோம். அங்கு வந்த கொத்தனாரும் சிற்பியும் பாறையைத்தட்டிப் பார்த்து, ‘இந்தக் கல்லைப் படிக்கட்டாகவும் இந்தக் கல்லைத் தூணாகவும் இந்தக் கல்லை சிலையாகவும் வடிக்கலாம் என்று கூறினார்கள். அதன்படி நம்மை உருவாக்கினார்கள்.
இப்போது நீ பரவாயில்லை, தூணாக நிற்கிறாய். நானோ படிக்கட்டாக மாறினேன் என்னை கோயிலுக்கு வருவோர், போவோர் எல்லோரும் மிதித்துச் செல்கின்றனர். என்னால் வலியைத் தாங்க முடியவில்லை என்று கூறியது. அதற்குத் தூண், படிக்கட்டிடம் உனக்காவது பரவாயில்லை, மிதித்துவிட்டுச் சென்றுவிடுகின்றனர். ஆனால், நானோ அப்படியல்ல, எப்போதுமே இந்தக் கோபுரத்தைச் சுமந்துகொண்டு அப்படியே நின்றுகொண்டிருக்கிறேன்.
நம்முடன் வந்து சிலையாக இருக்கிறதே, அதற்கு தினசரி பால் அபிஷேகம், சந்தன அபிஷேகம், நெய் அபிஷேகம் என்று பலவிதமான அபிஷேகங்கள் செய்கிறார்கள். சிலை சந்தோஷமாக இருக்கிறது! என்று தூண் கூறியது. உடனே எங்கோ இருந்து மெதுவாக ஓர் அழுகைச் சத்தம் கேட் டது. அது சிலையின் குரல்தான். உடனே படிக்கட்டும் தூணும் சிலையைப் பார்த்து, நீதான் சந்தோஷமாக இருக்கிறாயே, ஏன் அழுகிறாய்? என்று கேட்டன. உடனே சிலை, படிக்கட்டைப் பார்த்து உன்னை மிதித்துவிட்டுச் சென்று விடுகிறார்கள்.
தூணோ, கோபுரத்தைத் தாங்கிக் கொண்டு நின்றுவிடுகிறது. ஆனால், என் நிலை… ஒவ்வொருவரும் வந்து ஒரு அபிஷேகம் செய்துவிட்டு, அவரவர் குறைகளை எல்லாம் சொல்லி என்முன் கண்ணீர் வடிக்கும்போது, ‘ஏன்தான் நாம் சிலையாக வந்தோமோ… மக்களுக்கு இவ்வளவு கஷ்டங்கள் இருக்கிறதா? என்று தினமும் நான் வேதனையடைகிறேன். இதையெல்லாம் கேட்கக் கேட்க என்னால் தாங்க முடியவில்லை’’ என்று கூறியது. இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த ஜவுளி வியாபாரிக்கு அப் போது ஓர் உண்மை புரிந்தது.
அது என்னது தெரியுமா, இறைவனால் படைக்கப்பட்ட ஒவ்வொரு உயிருக்கும் ஒரு கஷ்டம் இருக்கும். கஷ்டத்தை கொடுப்பவனும் அவனே, நம்மை காத்தருள்பவனும் அவனே. அப்படியிருக்கும் போது நம்மை சோதிக்கவே இறைவன் இவ்வாறு செய்கிறான் என்று புரிந்து கொண்டு, அவரவர் கஷ்டத்தை அவர்களாகவே சந்தித்து அதற்குரிய பரிகார பலனை செய்து கஷடத்திலிருந்து வெளிவர வேண்டும்.