பால் அபிஷேகம் செய்தால் சந்திரதோஷம் அகலும்

313

திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவிலில் ஒரு மண்டலம் இங்குள்ள காமநாசினி தீர்த்தத்தில் நீராடி, ஈசனுக்கு பால் அபிஷேகம் செய்து, கருவறை தீபத்தில் தூய பசும் நெய் சேர்த்து வழிபட கர்மவினைகள், காம வினைகளால் வந்த தோஷங்கள் யாவும் அகலும் என்பது நம்பிக்கை.

பால் அபிஷேகம் செய்தால் சந்திரதோஷம் அகலும் திருவான்மியூர் மருந்தீஸ்வரர்
சென்னை திருவான்மியூரில் உள்ள மருந்தீஸ்வரர் ஆலயம் மிகப் பழமையானது. ஆலயம் திருவான்மியூர் பஸ் நிலையத்தின் அருகிலேயே உள்ளது.

மூளை, மனது, எண்ணங்கள், கற்பனைகள், உணர்ச்சிகள் முதலிய நம் செயல்களுக்கு சந்திர பகவானே காரணம். தற்போது ஆட்டிசம், ஹைப்பர் ஆக்ட்டிவ் குழந்தைகளை காண்கிறோம். இதற்கு காரணம் கர்ம வினைகள் தான்.

ஆனாலும் இந்த விதமான பாதிப்புக்கு ஆளாக்குபவர் சந்திரனே. சந்திரன் சுபகிரகம். நம் சந்தோசம், தானம், தனம் இவைகளுக்கும் சந்திரனே காரணமாவார்.
அத்திரி முனிவரின் புதல்வர் சந்திரன். மிகுந்த அழகன். அத்திரி முனிவர் தன் புதல்வன் சந்திரனை கல்வி கற்க வேண்டி பிரகஸ்பதியிடம் அனுப்பினார். பிரகஸ்பதியும் சந்திரனுக்கு சகல கலைகளையும் போதித்தார். பிரகஸ்பதியின் மனைவி தாரை சந்திரனின் அழகில் மயங்க, கல்வி கற்க வந்த இடத்தில் தன் குருவின் மனைவியான தாரையின் அழகில் சந்திரனும் மயங்க, இருவரும் ஒன்றாயினர்.

இதனால் தாரையின் வயிற்றில் கரு உண்டானது. இப்படி சந்திரனுக்கும் தாரைக்கும் பிறந்தவர் ‘புதன்’. சகல கலைகள், கல்வி, ஞானம், புத்திரபாக்கியம் இவைகளை அளிக்க கூடியவர் புதன். சந்திரன் தன் குருவின் மனைவி தாரையோடு தொடர்பு கொண்டதால் அவனுக்கு பாவம் உண்டானது. பிரகஸ்பதி சந்திரனை குரு துரோகி என சபிக்க, சந்திரன் தனது கலைகளை இழந்து, ஒளியை இழந்தார்.

அந்த சாபம் நீங்குவதற்கான வழிகளைத் தேடினார் சந்திரன். நாரதர், சந்திரனை திருவான்மியூர் திருத்தலம் சென்று, அங்கு உள்ள காமநாசினி தீர்த்தத்தில் நீராடி, ஈசனை வழிபட பணித்தார். சந்திரன் திருவான்மியூர் வந்து முறைப்படி ஈசனை வழிபாடு செய்து, தாம் இழந்த அனைத்து கலைகளையும், ஒளியையும் மீண்டும் அடைந்தார்.

கலிகாலத்தில் காமத்தால் தவறுகள், கொலைகள் பல நடந்து வருகின்றன. இதனால் இன்று பல குடும்பங்களில் பிரச்சினைகள் ஏற்பட்டு, தீர்வுகளைத் தேடி அலை கிறார்கள். இந்த கொடிய காம பாவங்களுக்கு பரிகாரம் இல்லை. இருந்தாலும் மன ஒருமைப்பாட்டுடன், மனம் திருந்தி இத்தலம் வந்து ஒரு மண்டலம் தொடர்ந்து இங்கு உள்ள காமநாசினி தீர்த்தத்தில் நீராடி, ஈசனுக்கு பால் அபிஷேகம் செய்து, கருவறை தீபத்தில் தூய பசும் நெய் சேர்த்து வழிபட கர்மவினைகள், காம வினைகளால் வந்த தோஷங்கள் யாவும் அகலும் என்பது நம்பிக்கை.

இங்கு உள்ள கேதாரீஸ்வரர் வழிபாட்டினை திங்கள், தீபாவளி நாட்களில் செய்தால் பித்ரு சாபங்கள் தீர வழிவகுக்கும். இங்கு உள்ள கேதாரீஸ்வரரை தீபாவளி நாளில் வட மாநிலத்தவர் உட்பட பலரும் அபிஷேகம் செய்து வழிபடுகிறார்கள்.