பிரச்சினைகளை பெரிதாக்கும் கோபம்

153

கிருஷ்ணரின் இந்த தத்துவம் பல விஷயங்களில் நமக்கு பொருந்தும். நாமும் பல விஷயங்களுக்கு, எந்த எதிர்வினையும் ஆற்றாமல் இருந்தாலே, அந்த விஷயம் ஒன்றும் இல்லாமல் போய்விடும்.

பிரச்சினைகளை பெரிதாக்கும் கோபம்
கிருஷ்ணன்
மனித வாழ்க்கையில் தத்துவத்தை கிருஷ்ணர் உதிர்த்த மொழிதான், இன்று நம் கையில் ‘பகவத் கீதை’ என்ற நூலாக தவழ்ந்து கொண்டிருக்கிறது. கிருஷ்ணரின் ஒவ்வொரு நடவடிக்கையும் நமக்கு வாழ்வின் தத்துவத்தை உணர்த்துவதாகவே அமைந் திருக்கும். கிருஷ்ணரின் உபதேசம், நமக்கு பல சூழ்நிலைகளிலும் பாடம் சொல்லித் தருவதாக இருக்கும். அப்படி ஒரு கதையைத்தான் இங்கே பார்க்கப் போகிறோம்.

ஒரு முறை கிருஷ்ணர், அவரது சகோதரர் பலராமர், பாண்டவர்களின் ஒருவரான அர்ச்சுனன் ஆகிய மூவரும், ஒரு அடர்ந்த வனத்தின் வழியாக சென்று கொண்டிருந்தனர். நடு இரவாகி விட்ட காரணத்தால், ஓரிடத்தில் தங்கி விடிந்ததும் செல்லலாம் என்றும் மூவரும் நினைத்தனர்.

அடர்த்தி மிகுந்த இந்த வனத்தில் கொடிய மிருகங்கள் இருக்கும் என்பதால், மூவரும் ஒருசேர தூங்கக்கூடாது என்றும், ஜாமத்திற்கு ஒருவராக காவல் காக்க வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது.

அதன்படி கிருஷ்ணரும், பலராமரும் தூங்கச் செல்ல, அர்ச்சுனன் காவலுக்கு இருந்தான். அப்போது அங்கு திடீரென ஒரு புகை மண்டலம் உண்டானது. அதிலிருந்து பார்ப்பவர்களை பயம் கொள்ளச் செய்யும் வகையிலான ஒரு உருவம் வெளிப்பட்டது. மரத்தடியில் இருவர் தூங்குவதையும், ஒருவன் காவல் இருப்பதையும் கண்ட அந்த உருவம், அசந்து தூங்கிக்கொண்டிருந்த கிருஷ்ணர், பலராமர் அருகில் சென்றது. அதைக்கண்ட அர்ச்சுனன் கோபத்துடன் அந்த உருவத்தைத் தடுத்தான்.

அதற்கு அந்த உருவம், “நான் இந்த இருவரையும் கொல்லப்போகிறேன். அதற்கு நீ துணை நிற்க வேண்டும்” என்று கேட்டது. அதைக் கேட்டு மேலும் கோபம் கொண்ட அர்ச்சுனன், அந்த உருவத்தைத் தாக்கினான். அர்ச்சுனனின் கோபம் அதிகமாக அதிகமாக, அந்த உருவத்தின் பலமும், வடிவமும் பெருகிக்கொண்டே போனது. அதைக் கண்டு அர்ச்சுனன் நடுநடுங்கிப்போனான். இருப்பினும் அந்த உருவத்தோடு ஆக்ரோஷத்துடன் போரிட்டான். இப்போது அந்த உருவம் பூதாகரமாக அந்த இடம் முழுவதையும் ஆக்கிரமித்தாற்போல் வளர்ந் திருந்தது. அது அர்ச்சுனனை பலமாகி தாக்கி விட்டு மறைந்தது.

ஒரு ஜாம நேரம் முடிந்தது. அதனால் பலராமரை எழுப்பி விட்டு விட்டு, அர்ச்சுனன் தூங்கச் சென்றான். இப்போது பலராமர் காவலுக்கு இருந்தார். அப்போது மீண்டும் அந்த உருவம் அங்கு தோன்றியது. அர்ச்சுனனிடம் கூறியது போல, தூங்கிக்கொண்டிருக்கும் இருவரையும் கொல்லப்போவதாகவும், அதற்கு பல ராமர் துணை நிற்க வேண்டும் என்று கூறியது.

பலராமரும் அந்த உருவத்துடன் சண்டையிட்டார். அந்த உருவம் அவருக்கு அடிபணிவதாய் இல்லை. பலராமரின் கோபம் அதிகமாக, அதிகமாக அந்த உருவம் பெரியதாகிக்கொண்டே சென்றது. பின் அந்த உருவம் பலராமரையும் பலமாகத் தாக்கி விட்டு, அங்கிருந்து மறைந்தது.

இப்போது அடுத்த ஜாமம் தொடங்கிவிட்டது. பலராமர், கிருஷ்ணரை காவல் இருக்கும்படி எழுப்பிவிட்டு, தான் படுத்துக் கொண்டார். கிருஷ்ணர் காவல் இருக்கும்போதும், அந்த உருவம் வெளிப்பட்டது. அதைப் பார்த்த கிருஷ்ணர் கடகடவென சிரித்தார்.

உடனே கோபம் கொண்ட அந்த உருவம், “ஏன் சிரிக் கிறாய்?” என்றது. தன்னுடைய தூக்கிய பற்களையும், வெளியே பிதுங்கி நிற்கும் முட்டை கண்களையும் பார்த்துதான் கிருஷ்ணர் சிரிப்பதாக அது எண்ணியது. “நீ என் உருவத்தைப் பார்த்து கேலி செய்கிறாயா?” என்று கேட்டபடியே, கிருஷ்ணருடன் போரிட்டது.

கிருஷ்ணரோ புன்னகை மாறாமல், அந்த உருவத்தோடு சண்டையிட்டார். கிருஷ்ணர் பலமாக சிரிக்க, சிரிக்க, அந்த உருவத்தின் பலம் குறைந்ததோடு, அந்த உருவமும் சிறியதாகிக்கொண்டே போனது. இறுதியில் அந்த உருவம் சிறு புழுவாக மாறி, தரையில் கிடந்து நெளிந்தது. கிருஷ்ணர் அந்தப் புழுவை எடுத்து ஒரு துணியில் முடிந்து வைத்தார்.

பொழுது விடிந்தது. பலராமரும், அர்ச்சுனனும் எழுந்தனர். இரவில் தங்களுக்கு நடந்த அனுபவங் களைப் பற்றி, இருவரும் கிருஷ்ணரிடம் கூறினர்.

அப்போது கிருஷ்ணர் துணியில் முடிந்து வைத்திருந்த புழுவைக் காட்டி, “நீங்கள் இருவரும் தீவிரமாக சண்டை போட்ட உருவம் இதுதான்.

நீங்கள் இந்த உருவத்துடன் சண்டையிடும்போது, கடுமையாக கோபம் கொண்டீர்கள். உங்கள் கோபம் அதி கரிக்க, அதிகரிக்க அதன் பலமும், உருவமும் பெருகுகிறது. ஆனால் நான் அந்த உருவத்துடன் சிரித்துக்கொண்டே சண்டையிட்டேன். அதனால் அதன் உருவமும், பலமும் குன்றியது. இப்போது ஒரு புழுவாக காட்சியளிக்கிறது. நம்மோடு வீண் சண்டைக்கு வருபவனை, புன்னகையோடு கடந்து போய்விட்டால், அவன் புழுவுக்கு சமமாகி விடுவான். கோபத்தைக் குறைப்பவனே ஞானி” என்றார்.

கிருஷ்ணரின் இந்த தத்துவம் பல விஷயங்களில் நமக்கு பொருந்தும். நாமும் பல விஷயங்களுக்கு, எந்த எதிர்வினையும் ஆற்றாமல் இருந்தாலே, அந்த விஷயம் ஒன்றும் இல்லாமல் போய்விடும்.