திருமணத் தடை நீக்கும் பரிகாரம்

241

திருமண தடை நீங்கி திருமண வாழ்வு சிறப்பாக அமைய கவனிக்கப்பட வேண்டிய விதிமுறைகள் சில இருக்கின்றன. அதைப் பற்றி அறிந்துகொள்வோம்.

திருமணத் தடை நீக்கும் பரிகாரம்புதிய சமுதாய தொடக்கத்தை உருவாக்கும் இரு மனங்களின் இணைவே ‘திருமணம்.’ மனித வாழ்வில் மகத்தான அத்தியாயம் திருமணம் என்றால் அது மிகையல்ல.

ஆனால் திருமண வயதில் இருக்கும் ஆண்-பெண் அனைவருக்கும் சவால் விடும் பிரச்சினையாக இருப்பது , திருமணத் தடை. நாட்டில் ஆயிரக்கணக்கான திருமணத் தகவல் மையங்கள் இருந்தாலும், திரு மணத்திற்கு வரன் கிடைப்பது குதிரைக்கு கொம்பு முளைத்த கதையாகத்தான் இருந்து வருகிறது. உளவியல் ரீதியாக நாட்டில் ஆண்களை விட பெண்களின் சதவீதம் குறைவாக இருப்பதே திருமணத் தடைக்கான காரணங்கள்.

திருமணத் தடைக்கு காரணமாக அனைவரும் நம்பும் பிரச்சினைகள் செவ்வாய் தோஷம், ராகு-கேது தோஷம். ஆனால் சூட்சமமான பல்வேறு காரணிகள் திருமணத்தை தடை செய்வதில் முன்னிலையில் இருக்கிறது. ‘களத்திர தோஷம்’ எனும் கடுமையான தோஷம் திருமணத்திற்கு முன்னும், பின்னும் பல்வேறு மன சஞ்சலத்தை ஏற்படுத்துகிறது. ஒரு சிலருக்கு திருமணத்தை நடத்தி தராமலும், ஒரு சாரருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட திருமணத்தை நடத்துவதும் களத்திர தோஷத்தின் சிறப்பு அம்சமாகும். இவர் களுக்கு எதிர்பார்த்த மண வாழ்க்கை அமையாது. காலதாமத திருமணம், திருமண வாழ்வில் ஏமாற்றம், பிரச்சினையுடன் கூடிய மண வாழ்க்கை, பொருத்தமில்லாத ஜோடி, தம்பதிகளிடையே எப்பொழுதும் கருத்து வேறுபாடு போன்றவை ஏற்படும்.

தன் வாழ்வையே இழக்கும் உறவின் கீழ், வாழ்வு அமையவும் வாய்ப்பு உண்டு. கணவன் – மனைவி உறவு என்பது, அன்பை பரிமாறிக் கொள்ளும் உறவாக இருந்தால் திருமணம் சொர்க்கம். சரியாக அமையாத திருமண உறவு நரகம். இனிமையாக இல்லறம் நடத்துபவர்கள் திருமணத்தை வாழ்வின் முக்கிய நிகழ்வாகவும், திருமணத்தின் மூலம் மன வேதனை அனுபவிப்பவர்கள் அதை கெட்ட சம்பவமாகவும், திருமணத் தடையால் பாதிக்கப்பட்டவர்கள் ‘எப்பொழுது திருமணம் நடைபெறும்?’ என்று அதை ஒரு எட்டாக்கனி போல் பார்த்துக் கொண்டும் இருக்கிறார்கள்.

திருமண வாழ்வு சிறப்பாக அமைய கவனிக்கப்பட வேண்டிய விதிமுறைகள் சில இருக்கின்றன. அதைப் பற்றி அறிந்துகொள்வோம்.

திருமணம் தொடர்பான பாவங்களாக 1, 2, 7, 8 ஆகிய இடங்கள் உள்ளன. இவை பலம் பெற வேண்டும். ஆண் ஜாதகத்தில் சுக்ரனுக்கும், பெண் ஜாதகத்தில் செவ்வாய்க்கும் ராகு-கேதுக்களின் சம்பந்தம் இருக்கக்கூடாது. சுக்ரன், செவ்வாய்க்கு சனியின் பார்வை இருந்தால், அது திருமணத்தை காலதாமதமாக்கும். அதே போல், 1, 2, 7, 8 ஆகிய இடத்தின் அதி பதிகள் வக்ரம், நீச்சம், அஸ்தமனம் அடையக்கூடாது. 7-ம் இடமான களத்திர ஸ்தானத்தில், பாவ கிரகங்களான சூரியன், செவ்வாய், சனி, ராகு- கேது போன்ற அசுப கிரகங்கள் தனித்து நின்றாலும் திருமணம் காலதாமதமாகும். அதே போல் 7-ம் இடத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட அசுப கிரகங்கள் இருந்தால், ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் அல்லது திருமணத்திற்குப் பிறகு தவறான நட்பை ஏற்படுத்தும்.

ஜனன கால ஜாதகத்தில் 2, 7-ம் இடத்திற்கு செவ்வாய்- ராகு, சூரியன்-ராகு, சுக்ரன்- ராகு, சனி- ராகு, சூரியன்- சனி, செவ்வாய்- சனி போன்ற கிரகங்களின் சம்பந்தம் இருந்தால், திருமணம் தாமதமாவதுடன், திருமணத்திற்குப் பின் தம்பதியரிடையே கருத்துவேறுபாட்டை உருவாக்கும்.

அதே போல் 2, 7-ம் இடத்திற்கு, செவ்வாய் – கேது, சூரியன்- கேது, சுக்ரன்- கேது, சனி- கேது, செவ்வாய் – கேது போன்ற கிரகங்களின் சம்பந்தம் இருந்தால், ஜாதகரின் 1, 5, 9 ஆகி இடங்களில் வலிமைக்கு ஏற்றவாறே திருமணம் கைகூடும்.

பெண்ணின் ஜாதகத்தில் 8-ம் இடமான மாங்கல்ய ஸ்தானத்தில் அசுப கிரகங்கள் இருந்தால் திருமணத் தடை உண்டாகும். 2, 7-ம் இடத்துக்கான அதிபதிகள், மறை ஸ்தானமான 6, 8, 12-ம் அதிபதிகளுடன் சம்பந்தம் பெறாமல் இருக்க வேண்டும்.

பரிகாரம்

ஜாதகத்தில் உள்ள குறையை சரிசெய்ய பிரபஞ்சம் வழங்கிய கொடைதான், திருமணப் பொருத்தம். எனவே தம்பதிகளிடையே மன ஒற்றுமையை அதிகரிக்கச் செய்ய முறையான கட்டப்பொருத்தம் அவசியம். ஒரு ஜாதகத்தில் இருக்கும் பாதகத்தை சாதகமாக மாற்றும் விதமான ஜாதகத்தை இணைப்பதே, திருமணத் தடைக்கு முதல் பரிகாரம்.

* சூரியன், ராகு-கேது சேர்க்கையால் திருமணத் தடையை சந்திப்பவர்கள் , ஸ்ரீ காளகஸ்தி ஆலயம் சென்று காளகஸ்தீஸ்வரரையும், ஞானப் பூங்கோதை தாயாரையும் வழிபட வேண்டும்.

* சூரியன், சனி சேர்க்கை இருந்தால், சனிக்கிழமைகளில் திருவண்ணாமலை சென்று அண்ணாமலையாரை தரிசனம் செய்ய திருமணத் தடை அகலும்.

* சுக்ரன்,கேது சேர்க்கை இருப்பவர்கள், வெள்ளிக்கிழமைகளில் லலிதா சகஸ்ர நாமத்தை குங்கும அர்ச்சனையுடன் சொல்லி வந்தால், மனதிற்கினிய வரன் அமையும்.

* செவ்வாய், கேதுவால் திருமணத் தடை இருப்பவர்கள், அரச மரத்தடியில் இருக்கும் சர்ப்ப சிலைகளை செவ்வாய்க்கிழமை காலை 8 மணி முதல் 9 மணி வரையான சுக்ர ஒரையில் வழிபட திருமணம் கைகூடும்.

* சனி, ராகு-கேது சம்பந்தத்தால் திருமணம் தடைபட்டால், ராகு வேளையில் பிரத்யங்கரா தேவியை வழிபட பலன் கிடைக்கும்.

* செவ்வாய், சனி சம்பந்தம் இருப்பவர்கள், லட்சுமி நரசிம்மரை வழிபட வேண்டும்.