களத்தர தோஷம் என்றால் என்ன? என்ன பரிகாரம் செய்யலாம்?

95

களத்தர தோஷம் என்றால் என்ன? அதற்கு என்ன பரிகாரம் செய்யலாம்?

சிலருக்கு திருமணத்தை நடத்த முடியாமல் ப்ரசனையை ஏற்படுத்தும் இந்த கருணையற்ற களத்திர தோஷம் பலருக்கு திருமணம் நடந்த பிறகு சிக்கல்களை ஏற்படுத்துகிறது. திருமணம் தொடர்பான பாவகங்களான 1 ,2,7,8 ஆகிய ஸ்தானங்களில் அசுப கிரகங்களான சூரியன், சனி, செவ்வாய், ராகு, கேது அமர்வது அல்லது ஏழாம் இடத்தில் நீசம், அஸ்தமனம் அடைந்த கிரகங்கள் அமர்வதாகும்.

இந்த தோஷ அமைப்பை பெற்றவர்களுக்கு தாமதத் திருமணம் அல்லது திருமணமே நடக்காத நிலை இருக்கும் அல்லது குடும்ப சூழ்நிலை காரணமாக விருப்பமில்லாதவருடன் வாழ்வது. அல்லது சமமான அழகு, படிப்பு, அந்தஸ்து, படிப்பறிவு இல்லாதவர்களுடன் வாழ்வது அல்லது ஒரே வீட்டில் சதா சண்டை சச்சரவுடன் வாழ்வது அல்லது ஒருவர் குறையை மற்றவர் பெரிதுபடுத்தி நிம்மதியை இழப்பது அல்லது தம்பதிகள் ஒருவருக்கொருவர் துரோகம் செய்வது அல்லது தம்பதிகள் தொழில், உத்தியோக நிமித்தமாக கருத்து வேறுபாடு இல்லாமல் பிரிந்து வாழ்வது அல்லது கருத்து வேறுபாடு காரணமாக நிரந்தரமாக பிரிந்து வாழ்வது அல்லது விவாகரத்து பெறுவது அல்லது தம்பதிகளில் ஒருவர் மட்டும் இறந்து விடுவது போன்ற ஏதாவது இடரைத் தந்து கொண்டே இருக்கும்.

பலருக்கு களத்திர தோஷ பாதிப்பு இருந்தாலும் களத்திர ஸ்தானம் எனும் 7மிட அதிபதி நின்ற நிலைக்கு ஏற்பவே திருமண வாழ்க்கை அமையும். 7-ம் அதிபதியை கருத்தில் கொண்டு களத்திர தோஷ பாதிப்பை முடிவு செய்ய வேண்டும். ஏழாம் அதிபதி ஜாதகத்தில் கெட்டால், திருமணம் கேள்விக்குறியாகும் அல்லது சில நேரங்களில் மிக மிக தாமதமாக திருமணம் அமையும். களத்திர தோஷம் உள்ள ஆண் ஜாதகத்தில் ஏழாம் அதிபதியும் சுக்ரனும் வலுப்பெற்றால் திருமண வாழ்க்கை பாதிக்காது.

அதேபோல் களத்திர தோஷம் உள்ள பெண் ஜாதகத்தில் ஏழாம் அதிபதியும் செவ்வாயும் வலுப்பெற்றால் திருமண வாழ்க்கை பாதிக்காது. இதுவே ஜோதிட சூட்சமம். ஏழாம் அதிபதியும் திருமண வாழ்க்கைக்கு முக்கியம். மேலும் களத்திர தோஷம் பெண்ணிற்கு மட்டும் பார்க்க வேண்டும். ஆண்களுக்கு பார்க்க வேண்டிய அவசியம் இல்லை.

பரிகாரம்:

களத்திர தோஷங்களுக்கு, ஸ்ரீசுக்கிரப் பரிகார ஹோமம் செய்வதும் நன்று எனப்படுகிறது. திருமண வரம் போல சந்தானப்பேறு அளிப்பதும் சுக்கிர பகவானின் அருளால் எனப்படுகிறது. அதனாலேயே இவரை `களத்திர காரகன்’ என்கிறோம். தொட்டதை எல்லாம் பொன்னாக்கித் தரும் இந்த சுக்கிரன் அருள் இருந்தால் சகல சம்பத்துக்களையும் பெறலாம் என்பது ஜோதிட விதி. சுக்கிரனுக்கு உரிய பரிகாரப் பொருள்கள், மந்திரங்கள், சமித்துக்கள் கொண்டு இவரை ஹோமம் செய்து ப்ரீத்தி செய்பவருக்கும் எந்நாளும் துணை இருந்து அனுக்ரஹிப்பார் என்பது நம்பிக்கை.

இதனால் நீண்ட ஆயுள், நீடித்த ஆரோக்கியம், குழந்தைப்பேறு, திருமண வரம், வியாபார விருத்தி, தொழில் அபிவிருத்தி, மகிழ்ச்சியான வாழ்வு பெறலாம். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் – ஆவணிப்பூர் சாலையில் கீழ்ப்பசார் என்ற ஊரில் எழுந்தருளி இருக்கிறார் ஸ்ரீமரகதாம்பிகை சமேத ஸ்ரீசந்திரமௌலீஸ்வரர். சுமார் 1500 ஆண்டுகள் பழைமையான இந்த ஆலயம் முன்பு சுக்கிரப் பரிகாரத் தலமாக இருந்து வந்துள்ளது.

அசுர குருவான சுக்கிரன் மகாபலியின் தானத்தைத் தடுத்து வாமனப் பெருமாளின் காரியத்துக்கு இடையூறு செய்த பாவம் நீங்க சுக்கிரபகவான் இங்குள்ள சந்திர தீர்த்தத்தில் நீராடி வழிபட்டார் என்று கூறப்படுகிறது. ஈசனின் கருணையால் பாவம் நீங்கிய சுக்கிரன் பெரும் வரங்களைப் பெற்றார் என்றும் சகலருக்கும் நன்மைகளை வழங்கும் தேவகிரகமாக மாறினார் என்றும் கூறப்படுகிறது.