ஏழைகளின் ஆப்பிள் எனக்கூறும் நெல்லிக்கனியின் மருத்துவ பயன்கள் – அறிவோம்!

275

ஏழைகளின் ஆப்பிள் எனக்கூறும் நெல்லிக்கனியின் மருத்துவ பயன்கள் – அறிவோம்!

இயற்கை அன்னை நமக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. அதில் ஒன்றுதான் நெல்லிக்கனி. நம் வாழ்வில் நீண்ட ஆயுளையும் உடல் பலத்தையும் தரக்கூடிய நெல்லிக்காயானது, இந்திய மக்களிடையே பயன்பாட்டில் நிறைந்து காணப்படுகிறது. இந்த நெல்லிக்கனியை தேனுடன் ஊறவைத்து தேன் நெல்லிக்காய், நெல்லிக்காய் ஊறுகாய் மற்றும் பச்சையாக நெல்லிக்காயை உண்பது என, நெல்லிக்காயின் பயன்களை நாம் சொல்லிக் கொண்டே போகலாம்.

அவ்வைக்கு அதியமான் அளித்த நெல்லிக்கனி:

குறுநில மன்னனாகிய அதியமான், தனக்குக் கிடைத்த அரிய நெல்லிக்கனியைதன தான் உண்ணாமல், அவ்வையாருக்கு தந்தார். ஏனெனில், இந்த நெல்லிக்கனியை உண்டு தான் நீண்ட காலம் வாழ்வதை காட்டிலும், ஔவையார் உண்ணும் போது, தமிழ் நீண்ட காலம் வாழும் என்று எண்ணினார். இப்படியாக நெல்லிக்காயின் பலன்களை தமிழர்கள் பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பாகவே உணர்ந்திருந்தனர்.
எனவே நாமும் தினம் ஒரு நெல்லிக் கனி சாப்பிட்டால் போதும், ஆப்பிளுக்கு நிகரான சத்துக்களைக்கொண்டது. நெல்லிக்காய்; ஒரு நெல்லிக்காய் மூன்று ஆப்பிள்களுக்குச் சமம்.

நெல்லிக்கனியின் பயன்கள்:

நெல்லிக்காயில் கால்சியம், வைட்டமின் சி, புரதம் போன்ற சத்துக்கள் அதிகமாக இருக்கின்றன. சித்தா, ஆயுர்வேதம் போன்ற இயற்கை மருத்துவங்களில் நெல்லிக்காயைத் தவறாமல் பயன்படுத்துகிறார்கள்.

நெல்லிக்காய் சிறிதளவு, துவர்ப்புத் தன்மை உடையது என்பதால், அதை வெறும் வாயில் மென்று சாப்பிடுவது, சிலருக்கு ஒத்து வராது. மேலும் சில குழந்தைகளுக்கு ஏற்றதாக இருக்காது. அவ்வாறான நேரங்களில், நெல்லிக்காயை,தயிர் சாதம், கேரட் சாதம் மற்றும் பிரின்ஜி சாதம் ஆகியவற்றுடன் தொடுகறியாக, சாப்பிடலாம். மேலும் பச்சையாக சாப்பிட முடியாதவர்கள், நெல்லிக்காயை வெறும் தண்ணீரில் நன்றாக அரைத்து ஜூஸாக செய்து சாப்பிடலாம்.

நெல்லிக்காயை தொடர்ந்து சாப்பிட்டு வர, நாள்பட்ட மலச்சிக்கல் மற்றும் செரிமான கோளாறு,காலையில் எழுந்திருக்கும் சமயங்களில் வயிறு உப்புசமாக இருப்பது போன்ற, பிரச்சனைகள் குணமாகின்றது. உடம்பில் இருக்கிற ரணங்களை சீக்கிரமாக ஆற்றும். வயிற்றுப் புண்களைக் குணமாக்கும். நெல்லிக்காயில் உள்ள பாலிபினால், டேனின், ஃப்ளேவினாய்ட்ஸ் போன்றவை உடலின் வளர்ச்சிதை மாற்றத்திற்கு மிகவும் இன்றியமையாததாகும்.

மாதவிடாய் காலத்தில், அதிகப்படியான இரத்தப்போக்கு ஏற்படும் போது, தினமும் மூன்று முறை சிறிது நெல்லிக்காய் ஜூஸையும், கனிந்த வாழைப்பழத்தையும் சாப்பிட்டால், அதிகப்படியான ரத்தப்போக்கு சரியாகிறது.

முகம் நன்கு அழகாக பொலிவோடு இருப்பதற்கு, தினமும் காலையில் நெல்லிக்காய் சாற்றுடன், சிறிது தேன் சேர்த்து குடிக்க வேண்டும். உடலில் இரத்தம் குறைவினால் ஏற்படும் ஞாபக மறதியைத் தடுக்க, தினமும் நெல்லிக்காய் சாற்றை குடித்தால், இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகமாகி, ஞாபக சக்தியும் அதிகரிக்கும்.

வயிறு சம்பந்தப்பட்ட நோய்களைக் கட்டுப்படுத்தும் ‘திரிபலா’ சூரணத் தயாரிப்பில் நெல்லிக்காய்க்கு முக்கியப் பங்கு உண்டு. உடலுக்கும் கண்களுக்கும் குளிர்ச்சியைத் தரும் குணமுடையது என்பதால் ஜலதோஷத்தை உண்டாக்கிவிடும் என்று சிலர் தவறாக நினைக்கிறார்கள். உண்மையில் ஜலதோஷம் வராமல் நெல்லிக்காய் தடுக்கும்.

நெல்லிக்காய் வைரஸ் மூலம் பரவும் நோய்களையும் கட்டுப்படுத்தும். திராட்சை, ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற பழங்களில் வைட்டமின் சி இருக்கிறது. ஆனால், வேறு எந்தப் பழங்களிலும் இல்லாத அளவுக்கு நெல்லிக்காயில் வைட்டமின் சி மிக அதிகம்.

ஒரு சின்ன நெல்லிக்காயில் 600 மில்லி கிராம் வைட்டமின் சி இருக்கிறது. பச்சைக் காயாகச் சாப்பிடும்போதுதான் நெல்லிக்காயின் சத்துகள் முழுமையாகக் கிடைக்கிறது. ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று நெல்லிக்காயாவது சாப்பிடலாம்.

நெல்லிக்காயில் கால்சியம் சத்து நிறைய இருப்பதால், எலும்புகள் உறுதியாகும். ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கவைக்கும். ரத்த சோகைக்கும் நெல்லிக்காய் நல்ல மருந்து. நெல்லிக்காய் தலைமுடியைக் கருமையாக செழிப்பாக வளரவைக்கும் என்பதால்தான் கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் எண்ணெய் வகைகளிலும் தலைச் சாயத் தயாரிப்பிலும் பயன்படுத்தப்படுகிறது.

தினமும் ஒரு நெல்லிக்காய் உண்டுவந்தால், சர்க்கரைக் குறைபாட்டைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிடலாம். அதிக உடல் பருமனால் கஷ்டப்படுகிறவர்கள் காலையில் வெறும் வயிற்றில் நெல்லிக்காய்ச் சாறுடன் இஞ்சிச் சாறு அருந்திவந்தால் தேவையற்ற எடை குறைந்து சிக்கென்ற தோற்றத்தைப் பெறலாம்.

இவ்வாறு, உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் நிரம்பப்பெற்ற, நெல்லிக்காயை அனுதினமும் உண்டு, பலன் பெறுவோம்.