மனமனக்கும் மசாலா இடியாப்பம் மற்றும் நிலக்கடலை சட்னி செய்வது எப்படி?

209

மனமனக்கும் மசாலா இடியாப்பம் மற்றும் நிலக்கடலை சட்னி செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்:

இடியாப்ப மாவு – இரண்டு கப்,
தேங்காய் எண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன்,
துருவிய தேங்காய் – ஒரு கப்,
கடுகு – ஒரு டீஸ்பூன்,
பச்சைமிளகாய் – இரண்டு ,
உளுத்தம்பருப்பு – ஒரு டேபிள் ஸ்பூன்,
பெருங்காயத் தூள் – ஒரு டீஸ்பூன்,
கறிவேப்பிலை – ஒரு கொத்து,
உடைத்த முந்திரி – ஒரு டேபிள்ஸ்பூன்,
நல்லெண்ணெய் – இரண்டு டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு .

செய்முறை விளக்கம்:

முதலில் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். பின்னர் ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் ஊற்றி , அதில் உப்பு, நல்லெண்ணெய் ஊற்றி கொதிக்க விட்டு அடுப்பை நிறுத்தவும். இப்போது அதில் இடியாப்ப மாவினை கொட்டிக் கைவிடாமல் கிளறி, சிறிது ஆறியதும் இடியாப்ப அச்சில் போட்டு இடியாப்பமாக பிழிந்து இட்லித் தட்டில் ஆவியில் சுமார் எட்டு நிமிடம் வேகவிட்டு எடுக்கவும்.

பின்னர் பிழிந்த இடியாப்பம் ஆறியதும் உதிர்த்து கொள்ளவும். இப்போது, ஒரு கடாயில் எண்ணெய் விட்டு அது காய்ந்ததும் அதில் கடுகு, பெருங்காயம், உளுத்தம்பருப்பு, முந்திரி, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, பச்சைமிளகாய், தேங்காய்த்துருவல் போட்டு வறுத்த பின்னர் உதிர்த்த இடியாப்பத்தை சேர்த்து ஒரு முறை கிளறி சூடாக பரிமாறினால் மனமனக்கும் மசாலா இடியாப்பம் சுவைக்க தயார்.

நிலக்கடலை சட்னி செய்ய தேவையான பொருட்கள்:

வறுத்த நிலக்கடலை – 250 கிராம்
காய்ந்த மிளகாய் – நான்கு
புளி – சிறிய நெல்லிக்காய் அளவு
பூண்டு – ஐந்து பல்

தாளிப்பதற்கு:

நல்லெண்ணெய் – 1 டீஸ்பூன்
கடுகு – கால் ஸ்பூன்
உழுந்தம் பருப்பு – ½ டீஸ்பூன்
சீரகம் – சிறிதளவு
காய்ந்த மிளகாய் – இரண்டு
கறிவேப்பிலை – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு

செய்முறை விளக்கம்:

வறுத்த நிலக்கடலை யை ஒரு சூடான வாணலியில் இட்டு நன்றாக இன்னொறு முறை சூடேறும் வரை வறுத்து கொள்ளவும். நிலக்கடலை வாசம் நன்றாக வரும் வரை வறுக்கவும். தீய்த்துவிட வேண்டாம். பிறகு நிலக்கடலை யை ஆறவைக்கவும். ஆறிய பின்பு அதில் , வர மிளகாய், புளி, பூண்டு, கறிவேப்பிலை, தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து மைய அரைக்கவும். பின் தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து தாளித்து, அரைத்து வைத்துள்ள நிலக்கடலை சட்னியில் போட்டு கலந்து விடவும், இப்போது சுவையான இந்த நிலக்கடலை சட்னி யை மசாலா இடியாப்பத்துடன் சேர்த்து பரிமாறவும்.