விஷேசங்களுக்கு செய்யும் சுவையான காப்பரிசி செய்வது எப்படி?
காப்பரிசி செய்ய தேவையான பொருட்கள்:
• பச்சரிசி ஒரு – கப்,
• வெல்லம் – முக்கால் கப்,
• பொட்டுக்கடலை – அரை கப்,
• தேங்காய் (சிறிய பல்லாக நறுக்கியது) – இரண்டு ஸ்பூன்,
• ஏலக்காய் தூள் – சிறிதளவு,
• நெய் – தேவையான அளவு.
செய்முறை விளக்கம்:
1. முதலில் பச்சரிசியை நன்கு தண்ணீரில் கழுவிக் கொள்ள வேண்டும். ஆனால், அதிக நேரம் தண்ணீரில் ஊற விடக் கூடாது.
2. பின்னர் கழுவிய பச்சரிசியை ஒரு வெள்ளை துணியில் வைத்து காய வைக்க வேண்டும்.
3. அதன் பின்னர் பச்சரிசி ஈரம் உலர்ந்து நன்கு காய்ந்ததும் அதனை எடுத்து வைத்துக் கொள்ளவும்.
4. இப்பொழுது ஒரு அடி கனமான வாணலியை அடுப்பில் வைத்து உலர்த்திய பச்சரிசியை நன்கு சிவந்து வரும் வரை வறுக்க வேண்டும். சிவந்து பொறியும் பொழுது அரை ஸ்பூன் நெய் விட்டு அரிசியை வறுத்துக் கொள்ள வேண்டும்.
5. அரிசி சிவந்து பொரிந்ததும் அதை ஒரு தட்டில் கொட்டி வைத்துக் கொள்ளவும்.
6. இப்பொழுது வாணலியில் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து தேங்காய் பற்களை வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
7. வெள்ளத்தை தூளாக்கி அதனுடன் தண்ணீர் சேர்த்து நன்கு கரைத்துக் கொள்ளவும். இதனை வடிகட்டி வாணலியில் சேர்த்து பாகு வரும் வரை கிளற வேண்டும்.
8. வெல்லம் கெட்டியாகி விடக்கூடாது வெல்லத்தின் பாகினை எடுத்து தண்ணீரில் போட்டால் அது உருண்டு வரும் இதுதான் சரியான பதம். இந்த பதத்தில் இருக்க வேண்டும்.
9. இப்பொழுது இதனுடன் ஏலக்காய் தூள் மற்றும் பொட்டுக்கடலை சேர்த்து பின் வறுத்து வைத்த அரிசியையும் சேர்த்து இரண்டு நிமிடங்கள் வரை கிளற வேண்டும்.
10. பின் அடுப்பை அணைத்து சிறிது நேரம் கழித்து மீண்டும் கிளறினால் பாகு முழுமையும் அரிசியில் உறைந்திருக்கும் கைகளில் ஒட்டாது. அரிசி உதிரி உதிரியாக இருக்கும்.
11. அவ்வளவுதான் சுவையான காப்பரிசி இப்பொழுது தயார்…! இந்த காப்பரிசி யை பிறந்த குழந்தைகளுக்கு பெயர் வைக்கும் வைபவத்திலும் மற்றும் ஆயுஷ் ஹோமம் செய்யப்படும் போதும் செய்வது பாரம்பரிய வழக்கமாக இன்றளவும் உள்ளது.
