கொலஸ்டாலைக் குறைக்கும் சிறுதானிய கொள்ளு சாதம் மற்றும் கொள்ளு ரசம் செய்வது எப்படி?
சிறுதானிய கொள்ளு சாதம் செய்ய தேவையான பொருட்கள்:
1. வரகரிசி/சாமை/குதிரைவாலி – 100 கிராம்
2. கொள்ளு – 50 கிராம்
3. பூண்டு – 6 பல்
4. உப்பு – தேவையான அளவு
5. எண்ணெய் – தேவையான அளவு
வறுத்து பொடி செய்து கொள்வதற்கு:
1. சீரகம் – 1 டீஸ்பூன்
2. கடலை பருப்பு – 2 டேபிள் ஸ்பூன்
3. வெந்தயம் – 1 டீஸ்பூன்
4. மிளகு – 1 டீஸ்பூன்
5. கொத்தமல்லி – 3 டேபிள் ஸ்பூன்
6. காய்ந்த மிளகாய் – 3
தாளிக்க:
1. கடுகு – 1 டீஸ்பூன்
2. கருவேப்பிலை – தேவையான அளவு
3. பெருங்காய தூள் – சிறிதளவு
செய்முறை விளக்கம்:
கொள்ளு/வரகரிசி/சாமை அரிசி/குதிரைவாலி அரிசியை நன்கு கழுவி உதிரியாக வேகவைத்துக் கொள்ளவும். பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும். பின்பு வறுத்த பொருட்களை மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து பொடி செய்து கொள்ளவும். அதன் பிறகு ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்து கொள்ளவும்.
பின்பு நறுக்கிய பூண்டை வதக்கி அவற்றுடன் வேகவைத்துள்ள கொள்ளு மற்றும் பொடி ஆகியவற்றை சேர்த்து நன்றாக வேகவைத்து கொள்ளவும். பின்பு வேகவைத்துள்ள சாதத்துடன் இந்த கலவையை சேர்த்து நன்றாக கிளறிவிடவும். இப்போது சிறுதானிய கொள்ளு சாதம் தயார்.
கொள்ளு ரசம் வைக்க தேவையான பொருட்கள்:
1. கொள்ளு – 1 கப்
2. புளி – 1 நெல்லிக்கனி அளவு
3. சீரகம், மிளகு – 1 தேக்கரண்டி
4. எண்ணெய் – 1 தேக்கரண்டி
5. கடுகு – 1 தேக்கரண்டி
6. தூள் பெருங்காயம் – சிறிதளவு
7. பூண்டு – 6 பல்
8. கொத்தமல்லி இலை – சிறிதளவு
9. உப்பு – தேவையான அளவு.
செய்முறை விளக்கம்:
இந்த கொள்ளு ரசம் செய்வதற்கு முதலில் கொள்ளுவை ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாக வருத்து, பின்பு கொஞ்சம் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். புளியை கரைத்து வைத்துக் கொள்ளவும். சீரகம் மற்றும் மிளகாய் இடித்து கொள்ளவும் பூண்டை தட்டி கொள்ளவும்.
கொள்ளு நன்கு வெந்ததும் மேலும் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். அதன் பிறகு கொள்ளை தண்ணீரில் கரைத்தால் கெட்டியான கொள்ளு தண்ணீர் கிடைக்கும். பிறகு கடாயில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும், கடுகு, பெருங்காயம் மற்றும் கருவேப்பில்லை ஆகியவற்றை போட்டு தாளித்த பின்பு கரைத்து வைத்துள்ள புளி கரைசலை அவற்றில் ஊற்றவும்.
அதன் பிறகு இடித்து வைத்துள்ள சீரகம், மிளகு மற்றும் தட்டி வைத்துள்ள பூண்டு மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்க்கவும். நுரையாக வரும் போது கொஞ்சம் கொத்தமல்லி இலையை தூவினால் சுவையான கொள்ளு ரசம் தயார்.
