ரெஸ்டாரன்ட் ஸ்டைலில் வெஜ் கோப்தா கிரேவி செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்:
1. உருளைக்கிழங்கு – 2 வேக வைத்து மசித்தது
2. பீன்ஸ் – அரை கப் (நறுக்கியது)
3. காலிபிளவர் – அரை கப் (நறுக்கியது)
4. பீட்ரூட் – அரை கப் (துருவியது)
5. பச்சை மிளகாய் – 2 (நறுக்கியது)
6. இஞ்சி பூண்டு விழுது – கால் டேபிள் ஸ்பூன்
7. மிளகாய் தூள் – 1/2 டேபிள் ஸ்பூன்
8. கரம் மசாலா – 1/4 டேபிள் ஸ்பூன்
9. பிரட் க்ரம்ஸ் – 2 டேபிள் ஸ்பூன்
10. உப்பு – தேவையான அளவு
11. மைதா – 1 டேபிள் ஸ்பூன்
கோப்தா உருண்டை செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் வேகவைத்து மசித்து வைத்த உருளைக்கிழங்கு 2, அரை கப் நறுக்கிய பீன்ஸ், அரை கப் வேகவைத்து நறுக்கிய காலிபிளவர், அரை கப் துருவிய பீட்ரூட், நறுக்கிய பச்சை மிளகாய் 2, கால் டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக கலக்கவும்.
பின் அதில் 1/2 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள், 1/4 டேபிள் ஸ்பூன் கரம் மசாலா, 2 டேபிள் ஸ்பூன் Bread Crumbs, உப்பு தேவையான அளவு, 1 டேபிள் ஸ்பூன் மைதா சேர்த்து மிக்ஸ் பண்ணவும்.
மிக்ஸ் செய்த மாவை சிறிய, சிறிய உருண்டைகளாக உருட்டி கொள்ளவும். பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி இந்த உருண்டைகளை வறுக்கவும். உருண்டைகளை வறுத்து ஒரு தட்டில் எடுத்து வைத்து கொள்ளவும்.
கிரேவி செய்ய தேவையான பொருட்கள்:
1. எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
2. வெங்காயம் – 3 (நறுக்கியது)
3. தக்காளி – 2 (நறுக்கியது)
4. இஞ்சி, பூண்டு விழுது – 2 டேபிள் ஸ்பூன்
5. தயிர் – 2 டேபிள் ஸ்பூன்
6. மிளகாய்த்தூள் – 1 டேபிள் ஸ்பூன்
7. காஷ்மீரி மிளகாய் தூள் – 1 டேபிள் ஸ்பூன்
8. கரம் மசாலா – 1/2 டேபிள் ஸ்பூன்
9. மல்லி தூள் – 1 டேபிள் ஸ்பூன்
10. உப்பு – தேவையான அளவு
11. தண்ணீர் – 1 கப்
கிரேவி செய்முறை:
ஒரு கடாயில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் சூடான பிறகு நறுக்கிய வெங்காயம் 3, நறுக்கிய தக்காளி 2, முந்திரி 7, இஞ்சி பூண்டு விழுது 1/4 டேபிள் ஸ்பூன் சேர்த்து நன்றாக வதக்கவும். பின் இதை மிக்ஸியில் போட்டு 2 டேபிள் ஸ்பூன் தயிர் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு அரைத்து கொள்ளவும்.
கடாயில் 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அரைத்து வைத்திருக்கும் பேஸ்டை அதில் போட்டு வதக்கவும். பின் அதில் 1 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள், 1 டேபிள் ஸ்பூன் காஷ்மீரி மிளகாய் தூள், 1/2 டேபிள் ஸ்பூன் கரம் மசாலா, 1 டேபிள் ஸ்பூன் மல்லி தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து மிக்ஸ் பண்ணவும்.
பின் அதில் 1 கப் தண்ணீர் சேர்த்து 3 நிமிடம் கொதிக்க வைக்கவும். 3 நிமிடம் கழித்து நாம் வறுத்து வைத்திருக்கும் உருண்டைகளை சேர்த்து 2 நிமிடம் வேக வைக்கவும். இரண்டு நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து விடவும். இப்போது சுவையான வெஜ் கோப்தா கிரேவி தயார்.
