தினைப் பணியாரம் செய்வது எப்படி?

12

தினைப் பணியாரம் செய்வது எப்படி?

தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்த காலமான இன்றைய காலத்தில் ஆரோக்கியமான உணவு பழக்க வழக்க முறையானது நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. சிறுதானியங்கள் பற்றி இன்றைய தலைமுறையினருக்கு தெரிவதுமில்லை. உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை அளிக்க கூடியது தான் சிறுதானியங்கள். அதிலும் சிறு பிள்ளைகள் கட்டாயம் தினையை சாப்பிட வேண்டும் என்று எல்லோரும் சொல்வார்கள்.

இதற்குக் காரணம் என்னவென்றால், தினை அரிசியில் நார் சத்துக்கள், உடலுக்குத் தேவையான வைட்டமின்கள், புரோட்டீன்கள் அதிகம் உள்ளன. உடல் எடை குறையவும் சிறுதானியங்கள் அதிகம் உதவுகிறது. சிறுதானியங்கள் கொண்டு சாதம், இட்லி, தோசை, பணியாரம் என்று எல்லாம் செய்யலாம். இன்றைய பதிவில் சிறுதானியங்கள் கொண்டு தினைப் பணியாரம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

  1. வாழைப்பழம் – 1
  2. வெல்லம் – தேவையான அளவு
  3. நெய் – சிறிதளவு
  4. தினை அரிசி – 1 டம்ளர்
  5. பச்சரிசி – 1/4 டம்ளர்
  6. தேங்காய் துருவல் – 1/2 கப்
  7. சோடா உப்பு – சிறிதளவு

செய்முறை:

முதலில் பச்சரிசி, தினை அரிசி இரண்டையும் நன்றாக சுத்தம் செய்து, இரண்டையும் ஒன்றாகப் போட்டு இரண்டு மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். பின்னர் நன்கு ஊறியதும், மிக்சியில் போட்டு தேங்காய் சேர்த்து நைசாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக இந்த மாவை சுமார் 4 முதல் 5 மணி நேரம் புளிக்க விட வேண்டும்.

மாவு நன்கு புளித்ததும் அதில் வெல்லம், சோட்டா உப்பு, வாழைப் பழம் சேர்த்து பிசைந்து, பணியாரக் கல்லில் சிறிது நெய் தடவி மாவை ஊற்ற வேண்டும். வழக்கம் போல், அடிப்பகுதியில் வெந்ததும் பணியாரத்தை திருப்பிப் போட்டு வேக வைக்க வேண்டும்.

இறுதியாக பணியாரம் நன்றாக வெந்ததும், எடுத்து வைத்து கொள்ள வேண்டும். சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் சாப்பிடலாம். மாலையிலோ அல்லது விடுமுறை நாட்களிலோ தினைப் பணியாரம் செய்து சாப்பிடலாம்.

தினை அரிசியில் ஏராளமான நன்மைகள் நிறைந்துள்ளது. இதில், அதிகளவில் நார்ச்சத்தும் நிறைந்துள்ளது. உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் அரிசிக்குப் பதிலாக தினை அரிசியை பயன்படுத்தலாம். தினந்தோறும் தினை அரிசியை பயன்படுத்தி வந்தால் உடல் எடை குறையும்.