நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் உணவுகள்!

132

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் உணவுகளும், அதன் சத்துக்களும் !!

நமது உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவினால் பலவிதமான தொற்று நோய்கள் ஏற்படுகிறது. உடலை பாதிக்கக்கூடிய கிருமிகளிடமிருந்து பாதுகாத்துக்கொள்ள நம் உடம்பில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிக அளவில் இருக்க வேண்டியது அவசியமாகும்.

நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இருந்தால் தான் எப்படிப்பட்ட நோய் தாக்கம் ஏற்பட்டாலும் அதில் இருந்து நாம் மீள முடியும். நோய் எதிர்ப்பு குறைவாக இருப்பவர்களுக்கு நோய் தாக்கம் அதிக அளவில் காணப்படும். சிறிய அளவிலான நோயினையும் அவர்களால் எதிர்கொள்ள முடியாது. எப்போதும் உடல் சோர்வாக இருப்பது போலவே உணர்வார்கள். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடிய சில உணவுகளை பார்க்கலாம்.

வெங்காயம்:

வெங்காயத்தில் உள்ள செலினியம் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் தன்மையுடையது. இதில் உள்ள ‘அலிலின்’ என்னும் வேதிப்பொருள் உடலில் பாக்டீரியா, நச்சு போன்றவை சேராமல் தடுக்கின்றன. ஒரு சின்ன வெங்காயத்தை மென்னு தின்று, வெந்நீர் குடித்தால் ஜலதோஷம் குறையும், தும்மல், நீர்க்கடுப்பு குணமாகும். வெங்காயத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ரத்தக்கொதிப்பு குறைந்து, இதயம் பலமாகும். மூல நோய் இருப்பவர்கள் உணவில் அதிகமாக வெங்காயம் சேர்ப்பது நல்லது.

பூண்டு:

தலைவலி முதல் புற்றுநோய் வரை பல நோய்களையும் குணமாக்கும் தன்மை பூண்டுக்கு உள்ளது. இது உடலுக்குக் கெடுதல் செய்யும் வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களை எதிர்க்கும் திறன் கொண்டதால் தினசரி உணவில் பூண்டை சேர்த்துக்கொள்வது நல்லது. வாயுத் தொல்லையை சரி செய்வதில் பூண்டுக்கு நிகர் வேறு எதுவும் இல்லை. தாய்பாலை அதிகரிக்க செய்யும், சளியை கரைத்து, சுவாச தடையை நீக்கும். ஜீரண சக்தியை மேம்படுத்தும். ரத்த கொதிப்பை தணிக்கும், உடல் பருமனையும், ரத்தத்தில் உள்ள கொழுப்பையும் குறைக்கும்.

மஞ்சள்:

மஞ்சள் இயற்கையான ஆன்டிபயாட்டிக் என்பதால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிக அளவில் உள்ளது. மஞ்சளை நம் உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்வதின் மூலம் கிருமிகள் தொற்று ஏற்படுவது தடுக்கப் படுகிறது. இரத்தத்தைச் சுத்தகரிக்க உதவுகிறது. காய்ச்சல், சளி, இருமல் போன்ற நோய்களில் இருந்து பாதுகாக்கிறது.

தயிர்:

தயிரானது நமது உடம்பில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து, செரிமான மண்டலத்தின் செயல் திறனை மேம்படுத்துகிறது. எனவே அன்றாடம் சாப்பிடும் உணவில் தயிரை சேர்த்துக் கொண்டு வந்தால், தொற்று நோய்களின் தாக்கத்திலிருந்து விடுபடலாம். தயிரில் இருக்கும் நல்ல பாக்டீரியா ஜீரண சக்தியை அதிகரிக்கும் நன்மை செய்யும் பாக்டீரியாவை உருவாக்குகிறது. தயிர் உடலுக்கு மட்டுமல்லாமல் முடி வளர்ச்சிக்கும் பயன்படுகிறது.