கன்னியாகுமரி ஸ்பெஷல் சுவையான முந்திரி கொத்து செய்யலாம் வாங்க!
தேவையான பொருட்கள்:
- பாசிப்பயிறு- 2 கப்
- வெல்லம் -2 கப்
- அரிசிமாவு- 1 கப்
- தேங்காய் -1/2 முடி (துருவியது)
- மைதா மாவு- 2 ஸ்பூன்
- ஏலக்காய் தூள்-1 ஸ்பூன்
- எள் – 1 ஸ்பூன்
- மஞ்சள் தூள்- 1/2ஸ்பூன்
- நெய் – 3 ஸ்பூன்
- உப்பு- தேவையானஅளவு
- எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை விளக்கம்:
முதலில், அடுப்பில் ஒரு கடாய் வைத்து (அதில் எண்ணெய் சேர்க்காமல்) , பாசிப்பயிரை போட்டு லேசாக வறுத்துக் கொண்டு, அதனை ஆற வைத்து விட்டு, ஒரு மிக்சி ஜாரில் மாற்றி அதனை அரைத்துக் கொண்டு அதனை ஒரு தட்டில் எடுத்துக் கொண்டு அதில் ஏலக்காய் தூள் தூவி வைத்துக் கொள்ள வேண்டும்.
பின் அதே கடாயில் எண்ணெய் சேர்க்காமல்,துருவி வைத்துள்ள தேங்காய் சேர்த்து,நன்கு மணக்கும் படி வறுத்துக் கொண்ட, பின் அதில் சிறிது எள்ளு சேர்த்து கிளறி விட வேண்டும்.
அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து, வெல்லம் சேர்த்து அதில் சிறிது தண்ணீர் ஊற்றி,அடுப்பின் தீயினை மிதமாக வைத்து ,பாகு தயார் செய்து கொள்ள வேண்டும்.
பின் பாகினை வடிகட்டி மற்றொரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் அரைத்த பாசிப்பருப்பு மாவு சேர்த்துக் கொண்டு, பின் அதில் வறுத்து வைத்துள்ள தேங்காய் துருவலையும் சேர்த்து, பின் சிறிது நெய் சேர்த்து மீண்டும் நன்றாக கிளறி விட்டு பிசைந்துக் கொள்ள வேண்டும்.
சூடாக பிசைந்து வைத்துள்ள மாவினை கையில் சிறிது நெய் தடவி கொண்டு, சிறிய சிறிய உருண்டைகளாக பிடித்துக் கொள்ள வேண்டும். பிடித்த உருண்டைகளை அப்படியே சுமார் 45 நிமிடங்கள் வரை வைத்து விட வேண்டும். இப்போது ஒரு பாத்திரத்தில் மைதா, அரிசிமாவு, மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து கலந்து விட்டு சிறிது தண்ணீர் ஊற்றி தோசை மாவு பதத்திற்கு ரெடி செய்து கொள்ள வேண்டும்.
அடுப்பில் ஒரு வாணலி வைத்து எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடான பின் , தீயினை சிம்மில் வைத்து விட்டு, உருண்டைகளை எடுத்து மைதா மாவு கரைசலில் டிப் செய்து எண்ணெய்யில் போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுத்தால், கன்னியாகுமரி ஸ்பெஷல் சுவையான முந்திரி கொத்து ரெடி.
