Thursday, October 19, 2023
HomeMahansதியாகராஜ சுவாமிகள் – பகுதி 10

தியாகராஜ சுவாமிகள் – பகுதி 10

பெங்களூர் நாகரத்தினம்மாள்.

சற்குரு தியாகராஜ சுவாமிகளுக்குக் கோயில் எழுப்பிய பெங்களூர் நாகரத்தினம்மாள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டாமா? இவர் மைசூரில் பிறந்தவர், எனவே மொழியால் கன்னடர். இவர் சமஸ்கிருதம், தெலுங்கு முதலான மொழிகளோடு சங்கீதமும் கற்றுத் தேர்ந்தார். நாட்டியக் கலையும் இவர் பயின்றார். தியாகராஜ சுவாமிகளிடம் அபார பக்தி கொண்டவர். அவருடைய பாடல்களைப் பாடி இவர் சங்கீதக் கச்சேரி நடத்துவார். இவருக்கு மைசூரைச் சேர்ந்த ஒரு அன்பர் கடிதம் எழுதியிருந்தார். அதில் திருவையாறு தியாகராஜ சுவாமிகளின் சமாதியையொட்டி சுகாதார சீர்கேடு அடைந்து மிகவும் மோசமாக இருப்பதாகவும், இதற்கு விடிவுகாலம் பிறக்காதா என்றும் கேட்டு எழுதியிருந்தார். இந்தக் கடிதம் கண்டவுடன் நாகரத்தினம்மாள் சென்னை சென்று அங்கு சங்கீதத் துறை சம்பந்தப்பட்டவர்களிடமும் பேசி அவர்கள் ஆலோசனையின்படி இவர் திருவையாற்றுக்குப் பயணமானார். அங்கு சென்று இவர் தஞ்சை மராட்டிய மன்னர் பரம்பரையைச் சேர்ந்த ராஜாராம் மன்னோஜி கர்வே என்பவரிடம் பேசி சமாதி நிலத்தை கையகப்படுத்திக் கொண்டார்.

அப்போது அந்தப் பகுதியில் ஏராளமான சமாதிக் கோயில்கள் இருந்தமையாலும், அசுத்தமும், அடர்த்தியான செடிகொடிகளும் வளர்ந்திருந்ததாலும் ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின் சமாதி எது என்பதைக் கண்டுபிடிப்பது சிரமமாக இருந்தது.

பின்னர் இதுதான் சற்குருவின் சமாதி என்பது உறுதி செய்துகொண்டபின் தன் சொந்தப் பணத்தில், வீடு, நகை முதலான ஐஸ்வர்யங்களை விற்றுக் கிடைத்த பணத்தில் சுவாமிகளுக்கு சமாதி மீது கோயில் எழுப்பி கும்பாபிஷேகமும் செய்வித்தார்கள். அங்கு காணப்படும் கல்வெட்டில் கீழ்காணும் வாசகம் பொறிக்கப்பட்டது. “ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள் ஆலயமும் பிரகாரமும், மடப்பள்ளி முதலிய கட்டடங்களும் இவைகள் அமைந்திருக்கும் ஆஸ்ரமும் மேல்படி சுவாமிகளின் அடியாளும், மைசூர் புட்டலெக்ஷ்மி அம்மாளின் புத்திரியுமான வித்யாசுந்தரி பெங்களூர் நாகரத்தினம்மாளின் கைங்கர்யமாகக் கட்டப்பெற்று 7-1-1925இல் கும்பாபிஷேகம் நடைபெற்று 1930ல் கட்டடம் பூர்த்தியாகியுள்ளது” திருமதி பெங்களூர் நாகரத்தினம்மாள் திருவையாற்றுக்கு வந்து தியாகையருடைய சமாதியில் கோயில் எழுப்பவும், இடத்தை வாங்கவும் மராட்டிய ராணி துர்க்காபாயி எனும் அம்மையாரிடமிருந்து அவருக்குச் சொந்தமான வாழைத்தோட்டத்தை விலைக்கு வாங்கவும், சட்டப்படியான அனைத்துப் பணிகளையும் மேற்கொண்டு எல்லா உதவிகளையும் செய்தவர் திருவையாற்றில் வழக்கறிஞராக இருந்த சி.வி.இராஜ கோபாலாச்சாரியார் என்பவராகும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

six + 13 =

Most Popular