Friday, October 27, 2023
HomeMahansசாங்கு சித்த சிவலிங்க நாயனார்!

சாங்கு சித்த சிவலிங்க நாயனார்!

சாங்கு சித்த சிவலிங்க நாயனார்!

உன்னுள் உத்தமனை காணும் வழி சாகாக் கல்வி என்று வாழ்க்கை போதனையை உலகிற்கு கூறிய மகான் சாங்கு சித்த சிவலிங்க நாயனார். இவர் நவகண்ட யோகம் பெற்று தன் உடலை தனித்தனியாக பிரித்து தியானம் செய்யும் ஆற்றல் பெற்றவர். மகான் 1900 ஆம் ஆண்டு ஆனி மாதம் பௌர்ணமி திதியன்று ஜீவ சமாதி அடைந்தார். ஜீவ சமாதி கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் அனைவருக்கும் வேண்டும் வரம் அளித்து அருள் பாலிக்கின்றார்.

சென்னை மாவட்டம் கிண்டியில் ஜீவசமாதியடைந்த சித்தராவார். இந்த சித்தர் நவகண்ட யோகத்தில் வல்லமை பெற்றவர். இவரது இயற்பெயர் சிவலிங்கம் என்பதாகும்.

தோற்றம்:

சென்னை கிண்டி அருகில் உள்ள பிரிங்காச்சலம் என்னும் பழப்பதி பெருஞ்சிறப்பு விளங்கியது. அவ்வூரில் அரங்கையர், குள்ளம்மாள் தம்பதிகள் வாழ்ந்து வந்தனர். அரங்கையர் அனைத்து கலைகளையும் கற்றுத் தேர்ந்தார். சாதி சண்டை சமய சண்டைகளை வெறுத்தார். சமரச நோக்கதையே மேற்கொண்டு அதனை எங்கும் பரப்பினார். இவ்வேளையில் 1835 ஆம் ஆண்டு இவருக்கு ஆண் குழந்தை பிறந்தது சிவ லிங்கம் என்று பெயரிட்டனர்.அவரே பின்னாளில் மகானாக சிறப்புற்றார்.

கல்வி:

கல்வி கற்க தொடங்கிய சிவலிங்கனார் மிக விரைவாக பயின்றார். உலக நூல் அறிவு நூல் என்று இரண்டிலும் வல்லவராகி பத்தாண்டில் அனைத்து நூல்களையும் கற்றுத் தேர்ந்தார். பதினோராவது ஆண்டு முதல் பதிமூன்று ஆண்டு வரையில் பதினென் சித்தர்கள் பாடிய நூலனைத்தையும் ஆராய்ந்தார். இருபது வயதுக்குள் தத்துவவிசாரம் புரிந்து எங்கும் நிறைந்து எல்லாமாய் உள்ள பிரம்மத்தை அறிய பேரவாக் கொண்டு பித்தனைப் போன்றும் பேயினை போன்றும் அலைந்தார். தன்னைவிட கல்வியில் தேர்ச்சி யுடையவர் யாருமில்லை என்று இறுமாப்புடன் இருந்தார்.

ஞான குருவை தேடல்:

இந்நிலையில் சுட்டிக் காட்டாத வித்தை சுட்டுப் போட்டாலும் வராது என்ற பழமொழிக்கேற்ப சிவலிங்கனார் குரு ஒருவரை எண்ணி அவர் மூலமாக எல்லாவற்றையும் அறிய வேண்டும் என்று மேலும் நூல்களை பார்க்கத் தொடங்கினார். இந்த வேளையில் “ஒழிவிலொடுக்கம்” எனும் சிறிய நூல் கிடைக்கப் பெற்றார். இந்நூல் சீர்காழி கண்ணுடைய வள்ளலார் இயற்றியது. பெருஞ் சிறப்பு வாய்ந்த இந்நூலை இரவும் பகலும் கண்ணும் கருத்துமாய் இருந்து பன்முகப் பார்வையில் ஆராயலானார்.

இந்நூலைப் படித்த பிறகு வேறு எந்த நூலிலும் மனம் புகவில்லை. இந்நூலை இயற்றிய கண்ணுடைய வள்ளலார் தம்முடைய ஞான குருவாக உள்ளத்தில் கொண்டார். ஒவ்வொரு நாளும் அவரையே போற்றி வழிபட்டார். இப்பெரியோருடைய திருவருள் கிடைக்கப் பெற்றார். அவ்வள்ளளார் தம்மை ஆட்கொண்ட திருவருட் சிறப்பால் “பூரணாநந்தோதயம்” என்னும் நூலை இயற்றினார். இந்நூலில் தாம் ஆட்கொள்ளப்பட்டதை பதிவிட்டுள்ளார். சீர்காழி கண்ணுடைய வள்ளலாரின் திருவருளைப் பெற்ற பிறகு இவருடைய பெயர் சாங்கு சித்த சிவலிங்க நாயனார் என்று வழங்குவதாயிற்று.

திருமணம்:

சிவலிங்க நாயனாருக்கு 20 வயதில் பெற்றோர்கள் வேலாயி என்னும் பெண்ணை 1855 ஆம் ஆண்டு திருமணம் செய்து வைத்தனர். நாயனார் அவர்கள் இல்லறத்தில் ஈடுபட்ட பின்னர் தமது அலுவலை முன்னிட்டு சென்னை சேத்துப்பட்டில் உள்ள ஜகந்நாதபுரம் என்ற பகுதிக்கு குடிபெயர்ந்தார். அங்கு இவருக்கு 1864ஆம் ஆண்டு ஆண் மகன் பிறந்தார். அக்குழந்தைக்கு உமையலிங்கனார் என்று பெயர் சூட்டினார்கள். ரெங்கய்யர் என்று மற்றொரு மகனும் இருந்துள்ளார். உமையலிங்கனார் அண்ணா சாலையில் உள்ள “ஹிக்கின்போதம்ஸ்” நூல் விற்பனை நிலையத்தில் பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு குப்பம்மாள் என்பவரை திருமணம் செய்வித்தனர்.
பணியாற்றியது.

நாயனார் அக்காலத்தில் பென்னி அண்ட் கம்பெனி நிறுவனத்தின் இயக்குனராக இருந்த கிளமெண்ட் சிம்சன் என்னும் துரைமகனாரின் வீட்டு அலுவல பணியும் சமையல் பணிகளையும் செய்துவந்தார். பணிபுரியும் அலுவலகத்தில் நாயனார் அவர்கள் உலக நிலையிலிருந்து விடுபட்டு யோக நிலையில் ஆழ்ந்து விடுவார்கள். இவ்வாறு அரிய யோக சக்தியால் பெறற்கரிய வாக்கு வன்மையை பெற்று, வரும் காலங்களில் நிகழக்கூடிய நிகழ்ச்சிகளை முன்கூட்டியே உணரும் ஆற்றல் பெற்றிருந்தார்.

சித்தர் நாயனாரின் தவ ஆற்றல்:

நாயனார் அவர்கள் எதிர் நிகழும் நிகழ்வுகளை முன் கூட்டியே உணர்ந்த படியால் தான் பணி செய்த அதிகாரி துரைமகனாருக்கு நிகழ இருந்த ஆபத்துகளை தடுத்து ஆட்கொண்டார். ஒரு நாள் இரவு துரைமகனார் படுக்கையறைக்கு செல்லும் போது நாயனார் அவர்களை தடுத்து இன்று படுக்கை அறையில் தாங்கள் படுக்கக் கூடாது என்று வற்புறுத்தி கூறினார். அவர் நாயனார் சொல் கேளாமல் படுக்கைக்கு சென்று உறங்கிவிட்டார். நாயனார் உள்ளமோ கலங்கியது.

வருவது வரட்டும் என்று துணிந்து நாயனார் தன் கீழ் வேலை பார்க்கும் ஆட்களைக் கொண்டு கட்டிலோடு அறையை விட்டு அப்புறப்படுத்தினார். அவரோ ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார். சில மணி நேரம் கழித்து படுக்கை அறையின் மேல்தளம் பேரிரைச்சலுடன் இடிந்து விழுந்தது. அச்சத்தோடு எழுந்த துரைமகனார் இடிந்து இருந்த கட்டிடத்தை கண்டு பயம் உற்றார். முன்கூட்டியே சொன்ன மகானின் வாக்கு வன்மையை கண்டு வியந்தார்.

வேறொரு தருணத்தில் லண்டனில் உள்ள தன் அருமை மகன் நோய்வாய்ப்பட்டு இருப்பதாக தந்தி மூலம் செய்தி கிடைத்தது. துரைமகனார் அதிர்ச்சி அடைந்து கலக்கமுற்றார். அவர் நிலையைக் கண்ட நாயனார் அவரைத் தேற்றி ஒரு வாரத்திற்குள் உங்கள் மகன் குணம் அடைந்த செய்தி வரும் கவலைப்பட வேண்டாம் என ஆறுதல் கூறினார். நாயனார் கூறியவாறு மறு தந்தி வரக்கண்ட துரைமகனார் மிக்க மகிழ்ச்சி அடைந்து நாயனாரின் வாக்கு வன்மையை வியந்து உள்ளம் மகிழ்ந்தார்.

சித்தர் நாயனார் ஜீவ சமாதி அடைதல்:

நாயனார் இல்லறத்தவராக தோன்றினாலும் வாழ்வில் பற்றற்றவராக விளங்கினார்கள். தமக்கென எந்த பொருளையும் சேர்த்துக் கொள்ளவில்லை. தான் மாதந்தோறும் பெற்ற ஊதியத்தையும் ஏழை எளியவருக்கு கொடுத்து உதவுகின்ற பரந்த தியாக உள்ளம் கொண்டவராக இருந்தார். இத்தகைய அருள் குணமும் ஞானமும் கொண்ட நாயனார் அவர்கள் தாம் சமாதி அடையும் காலத்தை முன்கூட்டியே மாணவர்களுக்கு அறிவித்து இருந்தார். அவர் அறிவித்தபடியே தமிழ் சார்வாரி ஆண்டு ஆனி மாதம் 29ஆம் நாள் (12.7.1900) மூல நட்சத்திரம் கூடிய பவுர்ணமி திதி வியாழன் அன்று சென்னை கிண்டியில் ஜீவசமாதி அடைந்தார்.

சித்தர் நாயனார் ஜீவசமாதியும் வழிபாட்டு முறைகளும்:

நாயனார் சமாதி மக்கள் வழிபடும் தெய்வ ஆலயமாக திகழ்ந்து வருகிறது. ஆண்டுதோறும் நடைபெறும் ஆனி மாதம் மூல நட்சத்திரம் கூடிய பவுர்ணமி திதியில் மகா குருபூஜை சிறப்பாக நடைபெற்று வருகிறது. நாயனாரின் சமாதி ஆலயத்தில் வாரந்தோறும் வியாழன் மற்றும் ஞாயிறு கிழமைகளில் சிறப்பு பூஜை, பிரதோஷ பூஜையை, அமாவாசை, பவுர்ணமி, சிவராத்திரி பூஜைகள் மிகவும் சிறப்பாக நடைபெறுகிறது. மேற்படி பூஜை நடைபெறும் தினங்களில் சிறப்பு அன்னதானமும் வழங்கப்படுகிறது.

நாயனார் திருக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் நீரும் திருநீரும் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இது அனைவருக்கும் நோய் தீர்க்கும் மருந்தாக உள்ளது. தீராத பெரிய நோய்களுக்கு அருமருந்தாக உள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twenty − ten =

Most Popular