Saturday, October 14, 2023
HomeMahansஸ்ரீ குருலிங்க சுவாமிகள்!

ஸ்ரீ குருலிங்க சுவாமிகள்!

மகான் ஸ்ரீ குருலிங்க சுவாமிகள்!
வீட்டில் வரும் விபூதி வாசம்:
ஆன்றோர்கள் முக்தியை நான்கு விதமாக வகுத்துள்ளனர்.
1. சாலோக்கியம்
2. சாமீப்பியம்
3. சாரூப்பியம்
4. சாயுஜ்யம்
இறை உலகில் வாழும் நிலையை ‘சாலோக்கியம்’ என்றும், இறைவனுக்கு அருகில் வாழும் நிலையை ‘சாமீப்பியம்’ என்றும், இறைவனின் வடிவத்தை பெறக்கூடியதை ‘சாரூப்பியம்’ என்றும், இறைவனோடு ஒன்றிணைந்து நிற்கும் நிலையை ‘சாயுஜ்யம்’ என்றும் குறிப்பிடுகின்றனர்.
சித்தர்கள் இந்த நாலாவது நிலையை எட்டிவிட்டவர்கள். சித்தர்களுக்கு எல்லாம் ஆதியாக விளங்கும் மகேசுவரனே ஒரு சித்தன்தானே. திருநாரையூரில் (சீத்தீச்சரம்) எழுந்தருளியிருக்கும் இறைவன் சித்தன் என்றே அழைக்கப்படுகிறார். அந்த மகேசுவரன், உலகுக்கு கருணை செய்வதற்காகவே லிங்க வடிவில் விளங்குகிறார். அதைச் சொல்லும்,
அனுக்ரஹாய லோகானாம்
லிங்கானிச மகேச்வர
என்ற வரிகளின் சத்யத்தை உணர்ந்து, லிங்க வடிவங்களைத் தரிசித்து வந்த மகான் ஸ்ரீ குருலிங்க சுவாமிகள். ஆதியும் அந்தமும் இல்லா இறைவனை அந்தாதி எனும் இலக்கிய வடிவத்துக்குள் கைப்பற்ற முயல்வதை நாம் அறிந்திருக்கிறோம். பல சித்த புருஷர்களின் ஆதி (பிறப்பு) பற்றிய குறிப்புகள் அகப்படுவது இல்லை. நாரைகள் பறந்து சென்ற வானில் அவற்றின் தடயங்களைத் தேடுவது எத்தனை அபத்தம்? அந்தத்தை (ஜீவசமாதி) மட்டும் மானுடர்க்கு அருள்பாலிக்க அடையாளமாய் விட்டுச் செல்கின்றனர் சித்தர்கள்.
சித்தர் ஸ்ரீகுருலிங்க சுவாமிகளின் ஜீவ சமாதி சென்னை, சைதாப்பேட்டையிலுள்ள காரணீஸ்வரர் கோயிலுக்கு அருகே, ரயில் நிலைய தண்டவாளத்தை ஒட்டியுள்ள தெருவில், சுமார் நூறாண்டுகளை கடந்தும் சூட்சுசமமாய் அருள் பெருக்கிக்கொண்டிருக்கிறது.
“நீங்கள் உங்கள் மனக்குறையை இந்த சித்தரிடம் சொல்லிவிட்டு போனால்… போகும் வழியிலோ அல்லது உங்கள் வீட்டிலோ திருநீறு வாசம் வந்தால் உங்களை சித்தர் பின்தொடர்கிறார். அல்லது உங்கள் குறை நீங்கும் என்று பொருள். பலருக்கு இந்த அனுபவம் ஏற்பட்டுள்ளது” என்றார் ஸ்ரீகுருலிங்க சுவாமிகளின் ஜீவசமாதியில் ஆன்மிக பணியாற்றி வரும் ஜோதி என்பவர்.
கன்னட தேசத்திலே விப்பிரர் குலத் தில் அவதரித்தவர் குருலிங்க சுவாமிகள் என்கிறது காரணீஸ்வரர் ஆலய தல வரலாற்று குறிப்பொன்று. இறுதியாய் எல்லா லிங்கங்களையும் தரிசித்து முடித்த சித்தர், காரணீஸ்வரரின் அழகில் மனம் லயித்து இங்கேயே இருந்துவிட்டாராம்.
தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு திருநீறையும் லிங்க வடிவங்களையும் வெறுங்கையில் வரவழைத்து கொடுத்து இருக்கிறார். “எல்லா வியாதிக்கும் ஒரே நிவாரணி திருநீறுதான்” என்பாராம் சுவாமிகள். தன் பக்தர்களையெல்லாம் அழைத்து, “யாம் 1887ஆம் வருடம் கார்த்திகை மாதத்தின் நான்காவது திங்கள் நள்ளிரவு 12 மணிக்கு ஜீவசமாதி அடை வோம்” என்று அறிவித்தார்.
சொன்னபடியே, அதேநேரம் சிவனோடு சேர்ந்த சித்தர் குரு லிங்க சுவாமிகள் தான் சமாதி அடைய காரணீஸ்வரருக்கு எதிரே ஒரு இடம் வேண்டும் என்று, ஒரு செல்வந்தரிடம் பணிவோடு கேட்க, அவர், சித்தரை மிகவும் அவமானப்படுத்தி அனுப்பிவிட்டார். சில நாட்களில், செல்வந்தரின் குடும்பத்தினர் அனைவரும் வயிற்று வலியில் அவதிப்பட்டனர்.
எந்த மருத்து வமும் பயனளிக்காமல் போயின. அப்போது, ஒரு வேலைக்காரனிடம் திருநீறு கலந்த நீரை சொம்பில் கொடுத்தனுப்பி, ‘மனிதன் சக மனிதனை அவமானப் படுத்தலே மிகப்பெரிய தவறு. மனிதனுக்குள் இருக்கும் சிவனை நிந்திப்பது பாவமில்லையா? இனி வாழ்நாளில் எந்த, மனுஷனையும் அவமதிக்காதே என்று அவ ரிடம் சொல்’ – என்று சொல்லி நோயைத் தீர்த்தாராம் ஸ்வாமிகள்.
சென்னை சைதாப்பேட்டை இரயில் நிலையத்துக்கு அருகில் இருப்புப் பாதையை ஒட்டி, காரணீசுவரர் திருக்கோயில் தெருவில் ஜீவ சமாதி கொண்டிருக்கிறார் ஸ்ரீ குருலிங்க சுவாமிகள். இவர் இங்கே சமாதி ஆனது 1887 ஆம் ஆண்டு. தவப்பெரியார் குருலிங்க சுவாமிகளின் 126 ஆவது குருபூசை கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் அவரது பக்தர்களால் கோலாகலமாக நடத்தப்பட்டது. 1887 ஆம் ஆண்டு கார்த்திகை மாதத்தின் நான்காவது திங்கட்கிழமை அன்று நள்ளிரவு 12 மணிக்கு யாம் ஜீவ சமாதி அடைவோம் என்று தம் பின்பற்றார்களிடம் சொல்லி அதன்படியே குறித்த நேரத்தில் ஜீவ சமாதி ஆனவர் ஸ்ரீ குருலிங்க சுவாமிகள்.
சுவாமிகள் பிறந்ததில் இருந்தே மாபெரும் சிவபக்தராகத் திகழ்ந்தவர். ஒவ்வொரு ஊரிலும் உள்ள சிவன் கோவில்களுக்குச் சென்று அங்கு உறையும் லிங்கத் திருமேனியின் அழகில் மெய்மறந்து தரிசித்தபடி யாத்திரையாக வந்து கொண்டிருந்தவர் இறுதியாக வந்து சேர்ந்த இடம்தான் திருக்காரணி எனப்படும் சைதாப்பேட்டை.
இங்கு கோவில் கொண்டுள்ள காரணீசுவரரை தரிசித்தார். இத்திருத்தலத்தின் அழகும் கோயில் அமைப்பும் மனதைக் கொள்ளை கொண்டுவிட்டதால், இங்கேயே நிலையாகத் தங்கிவிட்டார். நாள்தோறும் காரணீசுவரரைத் தொழுவதைத் தம் வழக்கமாகக் கொண்டார். தம்மை தரிசிக்க வந்த ஓரிரு பக்தர்களின் பிணிகளை குருலிங்க சுவாமிகள் தீர்த்து வைத்ததால் இச்சேதி ஊரெங்கும் வேகமாய்ப் பரவியது. சென்னை நகர மக்கள் இவர் இருக்கும் இடம் தேடி வந்து தங்கள் பிணிகளைச் சொல்லி திருநீறு பெற்றுச் செல்லத் தொடங்கினர்.
காலங்கள் கழிந்தோடின தம் மனதுக்கு மிகவும் பிடித்தமான காரணீசுவரர் சந்நிதியிலேயே தான் ஜீவ சமாதி ஆக வேண்டும் என்று தீர்மானித்தார். சைதாப்பேட்டையில் வசித்துவரும் செல்வந்தர் ஒருவரை அணுகினார். அவர் ஜீவ சமாதி அடைவதற்கான வசதி அந்த செல்வந்தருக்கு இருந்தும் சுவாமிகளின் பெருமை புரியாமல் ஏளனம் செய்து அனுப்பிவிட்டார் செல்வந்தர். சுவாமிகள் ஏதும் பேசாமல் அங்கிருந்து புறப்பட்டு சைதாப்பேட்டை அடையாறு ஆற்றங்கரைக்கு வந்தார்.
தெள்ளிய ஆறென ஓடும் அதன் கரையில் ஆழ்ந்த நிஷ்டையில் அமர்ந்தார்.
அதே நேரம் செல்வந்தர் குடும்பத்தில் அனைவருக்கும் திடீரென வயிற்று வலிஏற்பட்டு துன்புற்றனர். திகைப்புற்ற அந்த செல்வந்தர் தம் குடும்பத்தவரோடு சென்று மருத்துவரிடம் அனைவருக்கும் சிகிச்சை எடுத்துக் கொண்டார். ஆனாலும் வயிற்றுவலி தீரவில்லை. செல்வந்தர் வீட்டில் பணிபுரிந்த வேலைக்காரன் ஒருவன் குருலிங்க சுவாமிகளின் அருமை பெருமை அறிந்தவன், சுவாமிகள் ஜீவ சமாதி ஆவதற்கு இடம் தராததால் தான் அவர் குடும்பம் இப்படி துன்புற்று துடிக்கிறது என்பதை ஊகித்து சுவாமிகளைத் தேடி அடையாறு ஆற்றங்கரை பகுதிக்கு வந்தான்.
தன் முதலாளி குடும்பத்தின் துன்பநிலையை சுவாமிகளிடம் சொல்லி அழுதான். அவர்களை எப்படியாவது இந்தத் துன்பத்தில் இருந்து மீட்க வேண்டினான்.
குருலிங்க சுவாமிகள் வேலைக்காரன் கையில் ஒரு சொம்பைக் கொடுத்து ஆற்றில் இருந்து நீர் மொண்டுவருமாறு அவனைப் பணித்தார். அவன் நீரை மொண்டு ஓட்டமாய் ஓடி வந்தான். அதில் சிறிது திருநீறு தெளித்து இதைக் கொண்டு போய் அவரது குடும்பத்தில் உள்ள அனைவரையும் குடிக்கச் சொல் என்று சொல்லி நீஷ்டையில் ஆழ்ந்தார்.
வேலைக்காரன் வீட்டிற்கு ஓடினான். சுவாமிகளை அவமதித்து அனுப்பியதால்தான் இத்தனைத் துன்பமும் வந்துற்றது என்று சொல்லி அவரிடம் இருந்து வாங்கி வந்த நீரைக் கொடுத்து அனைவரையும் பருகச் சொன்னான். எத்தனையோ சிகிச்சை செய்தும் பயன் இல்லாமல் இருந்த அவர்கள் அந்த நீரைக் குடித்த அடுத்த கணமே வயிற்று வலி தொலைந்தே போனது. இதன்பின் செல்வந்தருக்கு குருலிங்க சுவாமிகளின் பெருமை விளங்கிற்று.
சுவாமிகள் நீஷ்டையில் இருக்கும் ஆற்றங்கரைக்கு குடும்பத்தினரை அழைத்துச் சென்றார். அவர் திருப்பாதங்களில் அனைவரும் வீழ்ந்து வணங்கினர். கண்களில் நீர் மல்க என்னை மன்னித்து அருளுக என்று மன்றாடினார் செல்வந்தர். அதோடு, சுவாமிகளிடம் ஜீவ சமாதி ஆவதற்கு உரிய இடத்தையும் தருவதாக உறுதியளித்தார்.
ஜீவ சமாதி ஆனபின்பு செய்யவேண்டிய முன் ஏற்பாடுகளைத் தானே முன்னின்று செய்யத் தொடங்கினார் செல்வந்தர். அந்த இடம் தான் சுவாமிகளின் ஜீவ சமாதி அமைந்துள்ள இன்றைய இடம். தாம் ஜீவசமாதி அடையும் முன், காரணீசுவரர் கோயிலை மூன்று முறை வலம் வந்தார் குருலிங்க சுவாமிகள். அதன் பின்பு அங்கு கூடி இருக்கும் பக்தர்களுக்கு ஆசி வழங்கினார்.
நம சிவாய முழக்கம் எல்லாத் திசைகளிலும் எழும்ப சரியாக நள்ளிரவு 12 மணிக்கு சமாதிக்குள் இறங்கி நிஷ்டையில் ஒன்றிப்போனார் சுவாமிகள். பிறகு சமாதி எழுப்பப்பட்டு அதன்மேல் சிவலிங்கம் பதிப்பிக்க்கப்பட்டு அன்றே வழிபாடு தொடங்கிற்று.
ஜீவ சமாதி கோயில் காலையில் 7 முதல் 10.30 வரையும், மாலையில் 5.30 முதல் 8 வரையும் திறந்திருக்கும். இங்கு ஒருமுகப்பட்ட தியானம் சிறப்பாக அமைகின்றது. சுவாமிகளின் குருபூசை திருவிழா ஆண்டுதோறும் திசம்பர் மாதம் இதாவது, சுவாமிகள் சமாதி ஆன கார்த்திகை மாதம் நான்காவது திங்கட்கிழமை அன்று மேற்கொள்ளப்படுகின்றது.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

18 − nine =

Most Popular