Saturday, October 14, 2023
HomeMahansதியாகராஜ சுவாமிகள் – பகுதி 3

தியாகராஜ சுவாமிகள் – பகுதி 3

ஸ்ரீ தியாகராஜரின் குருவான ஸொண்டி வெங்கடரமணய்யா பற்றி பேராசிரியர் பி.சாம்பமூர்த்தி அவர்கள் கூறும் விவரங்களைப் பார்ப்போம்:- தியாகராஜர் சிறுவனாக இருக்கும்போது காலையில் மலர் கொய்வதற்கு நந்தவனம் செல்வார். அது திருவையாற்றையடுத்த அந்தணக்குறிச்சி எனுமிடத்தில் இருக்கிறது. போகும் வழியில் ஸொண்டி வெங்கடரமணய்யாவின் வீடு. அங்கு சீடர்களுக்கு அவர் பாட்டு சொல்லிக்கொடுத்துக் கொண்டிருப்பார். அந்த வீட்டு வாயிலில் நின்று தியாகராஜர் சங்கீதம் கேட்டுக்கொண்டிருப்பார். அப்படியொருநாள் இவர் நின்று கேட்பதை ராமப்பிரம்மம் கவனித்துவிட்டு, குருநாதரிடம் சென்று தன் மகனுக்கும் சங்கீத சிக்ஷை சொல்லிக்கொடுக்க வேண்டினார். அவரும் உவகையுடன் ஒப்புக்கொண்டாராம். சொல்லிக்கொடுக்க வேண்டியதனைத்தையும் சீடன் மகா மேதை என்பதை உணர்ந்து ஒரே ஆண்டில் சொல்லிக்கொடுத்து விட்டார்.

ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளுடைய தாய்வழித் தாத்தா வீணை காளஹஸ்தி அய்யர் என்பவர். அவர் பல ஸங்கீத நூல்களைத் தன்வசம் வைத்திருந்தார். அவைகளையெல்லாம் வாங்கி வந்து தியாகராஜர் படிக்கலானார். அந்த நூல்களில் ஏற்படும் ஐயப்பாடுகளை நீக்கிக்கொள்ள இவர் அப்போது திருவையாற்றிலிருந்த ஸ்ரீ ராமகிருஷ்ணாந்தா ஸ்வாமிகளிடம் சென்று பாடம் கேட்கலானார். அப்படி பாடம் சொல்லிக்கொடுக்கும்போது ராமகிருஷ்ணானந்தர் தியாகராஜரிடம், நாரத மஹரிஷியை உபாசனை செய்துவந்து வழிபட்டால் ஸங்கீதக் கலை வசப்படுவதோடு, மனதில் தோன்றும் ஐயப்பாடுகள் அனைத்தும் நீங்கிப்போகும் என்று எடுத்துரைத்தார். அதற்கான “நாரத உபாஸனா” மந்திரத்தையும் அவருக்கு உபதேசித்தார். ஸ்ரீ தியாகராஜர் தன் குருநாதர் கூறிய மந்திரத்தைத் தலைமேற்கொண்டு உபாசனை செய்து வந்தார்.

இவரது மந்திரோபாசனையையும், பக்தியையும் பாராட்டி நாரத மஹரிஷியே இவர்முன் தோன்றி, ஸங்கீத ஸ்வர ரகஸ்யங்களடங்கிய “ஸ்வரார்ணவம்” எனும் அரிய நூலைக் கொடுத்து மறைந்தார். ஸ்ரீ நாரத பகவான் தரிசனமும், அவர் அளித்த நூலின் சிறப்பாலும், தியாகராஜர் நிரம்ப ஸங்கீத ஸ்ருதி ஆதாரங்களைக் கொண்ட பாடல்களை இயற்றிப் பாட ஆரம்பித்தார். இப்படி இவரது பெயரும் புகழும் நாடு முழுவதும் பரவப் பரவ பல்வேறு இடங்களிலிருந்தும் சீடர்கள் இவரை நாடிவந்து சேர்ந்து கொண்டார்கள்.

ஸ்ரீ தியாகராஜருடைய வாழ்க்கை இப்படி ஸங்கீதம், பூஜை, தியானம், சீடர்களுக்கு இசை ஞானத்தை உபதேசிப்பது என்று போய்க்கொண்டிருந்த நேரத்தில் இவருக்கு பார்வதி எனும் கன்னிகையைத் திருமணம் செய்து வைத்தார்கள். இவர்களுடைய மணவாழ்க்கை என்பது வெறும் ஐந்தே ஆண்டுகள் நடந்தன. பிறகு பார்வதி அம்மாள் ஸ்ரீ ராமனின் பாதாரவிந்தங்களில் ஐக்கியமாகிவிட்டார். பார்வதி இறந்த சிலகாலம் கழித்து அன்னாருடைய தங்கையான கமலாம்பாள் (கனகம்மாள் என்று திரு வி.ராகவன் குறிப்பிடுகிறார்) என்னும் கன்னிகையை இவருக்குத் திருமணம் செய்வித்தார்கள்.

அதன்பின்னர் ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள் சிலகாலம் மகிழ்ச்சியோடு வாழ்ந்து வந்தார். தினமும் ஸங்கீதம் பாடுவது, ஸாஹித்யங்கள் இயற்றுவது, வேதங்களைப் பாராயணம் செய்வது, புராணங்களைக் கற்பது, பின் அவற்றைப் பிறருக்கு ஓதுவது, ஜோதிஷ சாத்திரத்தைக் கற்பது, அதில் ஆராய்ச்சி செய்வது, கணித சாத்திரத்தைக் கற்பது, இப்படிப் பற்பல கலைகளிலும் விற்பன்னராக விளங்கி வந்தார். இவர் பாடுவதோடு, வீணை வாசிப்பதிலும், கின்னரீ எனும் தந்தி வாத்தியத்தை வாசிப்பதிலும் நிகரற்று விளங்கினார். இவருடைய இசை ஞானத்தைப் பற்றி கேள்விப் பட்டவர்கள் இவரை பூலோக நாரதர் என்றே பெருமைப் படுத்திப் பேசினர். நாட்டில் மக்கள் இறையருளை மறந்து, பாவங்களைச் செய்து பாழ்நரகக் குழிக்கே செல்லும் பான்மை நீங்க மோட்சத்தைக் கொடுக்கக்கூடிய நல்ல பல பக்தி கீர்த்தனைகளை இவர் இயற்றி மக்களுக்குப் பயன்பட வைத்துக் கொண்டிருந்தார். சங்கீதம் மட்டுமல்லாமல், கணிதம், ஜோதிஷம் ஆகிய சாஸ்திரங்களையும் இவர் தனது சீடர்களுக்குப் பாடம் சொல்லி வந்தார். அந்தக் காலத்தில் குருமார்கள் தங்கள் சீடர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பதற்கென்று தட்சிணை எதுவும் வாங்கும் வழக்கம் கிடையாது. சீடர்களைத் தங்களோடு வைத்துக்கொண்டு, உணவளித்துப் பாடங்களையும் சொல்லிக் கொடுத்தார்கள்.

விசேஷமான உத்சவ தினங்களில் குறிப்பாக ஸ்ரீ ராமநவமி, ஸ்ரீ கிருஷ்ண ஜன்மாஷ்டமி, வைகுண்ட ஏகாதசி போன்ற நாட்களில் இவர் பக்க வாத்தியங்களோடு ஊரில் உஞ்சவிருத்திசெய்து அதில் ஈட்டும் பொருள் கொண்டு திருவிழாக்களைக் கொண்டாடி வந்தார். திருமஞ்சன வீதியில் தியாகராஜரின் வீடு அமைந்திருந்தது. தினசரி உஞ்சவிருத்தி சென்று வீதிகளின் வழியாக நடந்து வந்து வீட்டை அடைவார். அங்கு அவருடைய பூஜை அறையில் ஸ்ரீ சீதாராமர், லக்ஷ்மணர், அனுமன் ஆகியோர் உள்ள விக்ரகத்தின் முன் உட்கார்ந்து தியானிப்பார். கையில் தம்பூரா, மெய்மறந்த நிலையில் அவர் பாடும் பாடல்கள், காவிரியின் பிரவாகம் போல பெருக்கெடுத்து ஓடிவருகின்றது. இசை இன்பம் ஊரை நனைக்கிறது.

இவர் சீடர்களிடம் பணம் வாங்குவது கிடையாது என்பதையும் முன்பே குறிப்பிட்டோம். இவரது ஸாஹித்யங்களில் ஸ்ருங்கார ரஸம்கொண்ட பாடல்கள் கிடையாது. இவர் நெளகா சரித்திரம் எனும் இசை நாடக வடிவத்தைப் படைத்திருக்கிறார். இதில் ஸ்ருங்கார ரஸ வருணனைகளுக்கு இடமிருந்தும் அவர் அப்படிப் பாடவில்லை. இவரது நோக்கமே மக்களுக்கு பக்தி ரஸத்தை அள்ளி வழங்க வேண்டுமென்பதுதான் என்பது தெரிகிறது.

இவர் சிறு வயதுமுதலே ஸ்ரீராம நாம ஜபத்தைச் செய்துகொண்டு வந்தார். தினம் தினம் இவர் ஜபிக்கும் ராமநாம ஜபம் பல கோடிகளைக் கடந்ததாக இருந்தது. இவர் எந்தக் காரியத்தைச் செய்துகொண்டிருந்தாலும், இவரது நா ஸ்ரீராமநாமத்தை உச்சரித்துக் கொண்டேயிருக்கும். இவர் தாய்மொழி தெலுங்கு என்றாலும், தெலுங்கு நாட்டிலிருந்து தமிழ்நாட்டின் இருதய ஸ்தானத்திற்கு குடிபுகுந்தவர் என்றபோதிலும், இவர் பெரும்பாலும் தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட சீடர்களைத் தன்னுடன் ஏற்றுக்கொண்டு இசை ஞானத்தை அவர்களுக்கு உபதேசித்து வந்தார். இவர் ஸ்ரீ ராமனை வழிபட்டாலும், இதர தெய்வங்களின்மீது பற்றும் பக்தியும் குறைந்தவரில்லை. தாய் மொழி தெலுங்கு என்றாலும், பிற மொழிகளின் மீது துவேஷம் இல்லை. தன் பாடல்களை மட்டுமின்றி பூஜையின் போது மற்ற பல பெரியோர்களின் கீர்த்தனைகளையும் இவர் பாடி வந்திருக்கிறார். அப்படி இவர் பாடிய பெரியோர்கள் ஸ்ரீ புரந்தரதாஸர், ஸ்ரீ ராமதாஸ், ஸ்ரீ வேங்கடவிட்டலஸ்வாமிகள், ஸ்ரீதாளபாக்கம் சின்னையா, ஆகிய பெரியோர்களின் பாடல்களும் இவரால் பாடப்பட்டன.

இவரை குருவாக ஏற்றுக்கொண்டு சீடர்கள் எனும் பெருமையைப் பெற்றவர்களில் குறிப்பிடத் தகுந்தவர்கள் முறையே, வாலாஜாபேட்டை வேங்கடரமண பாகவதர், தில்லைஸ்தானம் ராமய்யங்கார், திருவொற்றியூர் வீணை குப்பையர், ஐயா பாகவதர், மானம்புச்சாவடி வேங்கடசுப்பையர், தஞ்சாவூர் ராமராவ், லால்குடி ராமய்யர், நெய்க்காரப்பட்டி சுப்பையர், உமையாள்புரம் கிருஷ்ண பாகவதர், சுந்தர பாகவதர், ஸொஜிரி சீதாரமையர், நங்கவரம் நீலகண்டய்யர், கணேசய்யர் காரு, செவுனா வெங்கடாசலபதி பாகவதர் ஆகியோராவர்.

ஸங்கீதத்தை கிரமப் படுத்தி அதனை முறையாகப் பயிலுவதற்கு ஏற்ப அதற்கு ஸரளிவரிசை, ஜண்டை வரிசை, அலங்காரம், கீதம், வர்ணம், ஸ்வரஜதி, கீர்த்தனம் என்று வகைப்படுத்திக் கொடுத்தவர் ஸ்ரீ புரந்தரதாஸர். அப்படி அவர் ஏற்படுத்திக் கொடுத்த இலக்கணப் பாதையில் பற்பல ராகங்களில் அபூர்வமான சாஹித்தியங்களைச் செய்தருளியவர் தியாகராஜர். மகாகவி பாரதியார் குறிப்பிட்டிருப்பதைப் போல, சாஹித்தியத்தின் ரஸம் அந்தந்த ராகத்தில் வெளிப்படவேண்டும். அப்படி வெளிப்படும்படியான பாடல்களைப் பாடியவர் ஸ்ரீ தியாகராஜர். தற்காலத்தில் சிலர் தங்கள் மனதுக்கேற்றவாறு இவற்றை மாற்றியும், அழகு செய்தும் பாடமுயற்சிக்கிறார்கள், அங்ஙனம் செய்தல் கூடாது என்று பல பெரியோர்கள் கூறிச் சென்றிருக்கிறார்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three × one =

Most Popular