தியாகராஜ சுவாமிகள் – பகுதி 8

454

ஸ்வாமிகள் பற்றி கூறப்படும் நிகழ்ச்சிகள். இந்த இடத்தில் ஒரு கதை சொல்லப்படுகிறது. அதன் தீவிரத் தன்மையை உணர்ந்து ஏற்றுக் கொள்வதும், ஏற்றுக் கொள்ளாததும் வாசகர்களுக்கு உரியது. சிலரது பெருமையை உயர்த்திக் காட்டும் வகையில் சில புனந்துரைகள் புகுந்துவிடுவது இயல்பு. இந்தக் கதையும் அதுபோன்ற புனந்துரையா, அல்லது நடந்ததா என்பதை நீங்களே புரிந்து கொள்ளுவதுதான் சரியாக இருக்கும். ஸ்ரீ சுவாமிகள் பயணம் செய்துகொண்டிருந்த போது வில்லில் கற்களை வைத்து அடித்து வழிப்பறி செய்யும் ஒரு கூட்டம் இவர்களை வழிமறித்ததாம். நாகலாபுரம் கள்வர்கள் எனப்படும் அவர்கள் வழிப்பறி செய்யும்போது அவர்கள் சீடர்களில் ஒருவர் சுவாமிகளிடம் சென்று முறையிட்டார். அதற்கு சிவாமிகள் நம்மிடம் என்ன இருக்கிறது கொள்ளையடிக்க என்கிறார்.

அப்போது அந்த சீடர் கோவூர் முதலியார் ஆயிரம் பொற்காசுகளைப் பல்லக்கில் வைத்திருப்பதைச் சொல்கிறார். அப்படியானால் அந்த காசுகளை எடுத்து அந்த கொள்ளையர்களிடம் கொடுக்கச் சொல்லி சுவாமிகள் சொல்கிறார். அதற்கு சீடர் கோவூர் முதலியார் அந்த பொன்னை அவரது சொந்த செலவுக்குக் கொடுக்கவில்லையென்றும் ஸ்ரீ ராமபிரான் உற்சவங்களுக்கென்று கொடுக்கப்பட்டவை என்றும் சொல்கிறார். அதற்கு சுவாமிகள் அப்படியானால் அது ஸ்ரீ ராமனின் சொத்து, அதனை அவனே காத்துக் கொள்வான் என்கிறார். அப்போது இரண்டு வில்வீரர்கள் தோன்றி அம்புகள் எய்து அந்த திருடர்களை விரட்டியடிக்கின்றனர். பின்னர் மறைந்து விடுகின்றனர். அவர்கள் யார் என்று விசாரிக்க அவர்கள் அங்கு காணப்படவில்லை. வந்தவர்கள் இராம லக்ஷ்மணர்களே என்று அனைவரும் மகிழ்ந்து போற்றுகின்றனர். இப்படியொரு வரலாறும் ஸ்ரீ தியாகராஜர் வாழ்க்கையில் பேசப்படுகிறது. திருப்பதியை விட்டு காஞ்சிபுரம் வரும் வழியில் புத்தூர் அருகில் ஒரு கிணற்றங்கரையில் பலர் நின்றுகொண்டு வருந்துகின்றனர். விஷயம் என்னவென்று சுவாமிகள் விசாரிக்க, சேஷய்யா எனும் பிராமணர் ஒருவர் அந்த கிணற்றில் விழுந்து உயிர் துறந்துவிட்ட செய்தியையும், அவரது மனைவியும் குழந்தையும் கதறி அழுகின்றனர் என்றும் அங்கிருந்தவர்கள் சொல்ல, ஸ்ரீ தியாகராஜர் தனது சீடர்களைவிட்டு “லோகாவன சதுர பாஹிமாம்” எனும் பாடலையும், “ஏமானதிச்சேவோ யேமெஞ்சினாவோ” எனும் கிருதியையும் பாடச் சொல்லுகிறார். வேங்கடரமண பாகவதர் “நாஜீவாதார நா நோமுபலமா” எனும் பிலஹரி ராகக் கிருதியைப் பாடுகிறார். இந்தப் பாடலின் பொருள்: “என் உயிருக்கு ஆதாரமே! நான் நோற்ற நோன்புகளின் பயனே! பங்கயக் கண்ணனே! ராஜாதி ராஜருள் முதல்வனே! என் பார்வையின் ஒளி நீயே! என் நாசி நுகரும் நறுமணமும் நீயே! நான் ஜபம் செய்யும் அக்ஷரங்களின் உருவம் நீயே! நான் செய்யும் பூஜைக்கு மலரும் நீயே!” இவ்வளவுதான் அந்த பாடல். இறந்து கிடந்த அந்தணர் உயிர் பெற்றெழுகிறார். அனைவரும் ஸ்ரீ தியாகராஜரை வணங்கி வாழ்த்துகின்றனர். பின்னர் சுவாமிகள் காஞ்சிபுரம், வாலாஜாபேட்டை, ஸ்ரீரங்கம் முதலான இடங்களுக்குச் சென்றுவிட்டு திருவையாறு திரும்புகிறார்.

1845 விச்வாவசு வருஷம் அவரது தர்மபத்தினியாரவர்கள் மோட்ச கதியை அடைகிறார்கள். அதற்கடுத்த பராபவ வருஷம் புஷ்ய சுக்ல ஏகாதசி ராத்திரியில் பஜனை நடந்துகொண்டிருந்த சமயத்தில் ஸஹானா ராகத்தில் “கிரிபை நெலகொன்னராமுனி” எனும் கிருதியைப் பாடி அங்குக் கூடியிருந்தவர்களைப் பார்த்து “அன்பர்களே! வரும் (1857) பகுள பஞ்சமி தினத்தில் ஓர் விசேஷம் நடக்கப் போகிறது. எல்லோரும் அந்த தினத்தில் அதிகாலை வேளையில் இங்கு வந்துவிடுங்கள்” என்று அழைப்பு விடுத்தார். அதன்படியே அன்றைய தினம் எல்லோரும் வந்து கூடினார்கள். ஆபத் ஸந்நியாசமும் முக்தியும் அன்றைக்கு நாலைந்து நாட்களுக்கு முன்னதாக சுவாமிகள் ஸ்ரீ பிரம்மானந்த ஸ்வாமிகள் என்பவரை வரவழைத்து அவரிடம் ஆபத் ஸன்யாசம் வாங்கிக் கொண்டார். பகுளபஞ்சமி தினம் அதிகாலை ஸ்நானம் முதலான நித்ய கர்மாக்களை முடித்துக் கொண்டு பக்தர்களும் சீடர்களும் புடைசூழ ஸ்ரீ ஸீதாராமச்சந்திர மூர்த்தியை ஆராதித்தார். அதனைத் தொடர்ந்து பஜனை நடைபெறுகிறது. அப்போது சுவாமிகள் பஜனையை நிறுத்திவிட்டு அனைவரும் ஸ்ரீராம நாம ஜபத்தை இடைவிடாமல் செய்து வரச் சொன்னார். அதன்படியே அங்கு ஸ்ரீ ராம நாமத்தை அனைவரும் ஜபம் செய்து கொண்டிருந்தார்கள். அப்போது ஸ்ரீ சுவாமிகள் மனோஹரி ராகத்தில் “பரிதாபமு கனியாடின பலுகுல மரசிதிவோ” எனும் கிருதியைப் பாடி, கரத்தில் சின்முத்திரை காட்டி முக்தியடைந்தார். அந்த சமயம் அவர் கபாலத்திலிருந்து ஒரு ஜோதி புறப்பட்டு ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி விக்கிரகத்திலும், மேலே சென்றதையும் சிலர் பார்த்ததாகக் கூறுகிறார்கள்.