Saturday, October 28, 2023
HomeMahansதியாகராஜ சுவாமிகள் – பகுதி 7

தியாகராஜ சுவாமிகள் – பகுதி 7

காஞ்சி, திருவொற்றியூர், திருப்பதி விஜயம்.

இப்படி ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள் திருவையாற்றில் இசை உண்டு, தன் இராமனுண்டு என்று வாழ்ந்து கொண்டிருந்த நாட்களில், காஞ்சிபுரம் ஸ்ரீ உபநிஷத் பிரஹ்ம சுவாமிகள் என்பவர் ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளைத் தன் ஊருக்கு வருமாறு அழைக்கிறார். இந்த உபநிஷத் சுவாமிகள் தியாகராஜரின் தந்தைக்கு மிகவும் வேண்டியவர் மட்டுமல்லாமல் நூறு வயதைக் கடந்தவரும்கூட. சென்னை நகரத்தில் வசித்து வந்த பெரும் வணிகரும் பக்திமானுமான கோவூர் சுந்தர முதலியார் என்பவர் ஸ்ரீ தியாகராஜரைத் தன் கிராமத்துக்கு வரவழைத்துவிட வேண்டுமென்று விரும்பி உபநிஷத் பிரம்ஹ சுவாமிகளிடம் வேண்டிக்கொள்ள அவரும் அங்ஙனமே இவரை வரச்சொல்லி தகவல் அனுப்பினார். திருவையாற்றில் மிகவும் பிரபலமாகவும், ஸ்ரீ ராமபிரான் மீது கொண்ட பக்தியால் பற்பல பாடல்களைப் பாடிக்கொண்டிருப்பதையும் கேள்வியுற்ற உபநிஷத் சுவாமிகள் கோவூர் சுந்தர முதலியார் வேண்டுகோளுக்கிணங்க இவரை அழைக்கிறார். திரு வி.ராகவன் அவர்கள் தன் நூலில் சோழ நாட்டில் 18ஆம் நூற்றாண்டில் காமகோடி பீடத்தில் விளங்கிய அத்வைத சந்நியாசியாகிய திரு போதேந்திரர்தான் தியாகராஜரை காஞ்சிபுரம் வருமாறு அழைத்ததாகக் சாகித்ய அகாதமி வெளியிட்டுள்ள நூலில் குறிப்பிடுகிறார்.

18, 19ஆம் நூற்றாண்டுகளில் காஞ்சி காமகோடி பீடத்தை அலங்கரித்த ஆச்சார்யார்களில் 6ஆவது ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள்தான் (1813 முதல் 1875) ஸ்ரீ தியாகராஜர் காலத்தில் இருந்தவர். மேலும் இவர் அப்போது காஞ்சிபுரத்தில் இல்லாமல், முகலாயர் படையெடுப்பு காரணமாக தஞ்சை மாவட்டத்தில் தனது மடத்தை மாற்றிக் கொண்டு வந்துவிட்டார். அப்போது இவர் கும்பகோணம் அல்லது திருவிடைமருதூர் இங்கு எங்காவது இருந்திருக்க வேண்டும். மேலும் ஸ்ரீ தியாகராஜர் ஊர் சுற்றிப் பார்க்கவோ, பல தலங்களுக்குச் செல்ல வேண்டுமென்றோ விரும்பியது கிடையாது. அவர் திருவையாற்றைத் தவிரவும் தன் இராம பக்தி சாம்ராஜ்யத்தை விட்டும் எங்கும் போகவிரும்பாவிட்டாலும், சில நிர்ப்பந்தங்கள் காரணமாகத்தான் ஸ்ரீரங்கம், லால்குடி, திருப்பதி, கோவூர், திருவொற்றியூர், நாகப்பட்டணம் ஆகிய ஊர்களுக்குச் சென்று வந்திருக்கிறாரே தவிர ஊர்சுற்றும் ஆசை அவரிடம் இல்லவே இல்லை. ஸ்ரீ உபநிஷத் சுவாமிகள் அழைத்த காரணத்தால் காஞ்சி சென்றார் அவ்வளவுதான் அங்கிருந்து மற்ற இடங்களுக்கும் அவசியம் நேர்ந்ததால் சென்றார்.

ஸ்ரீ தியாகராஜர் காஞ்சிபுரம் தலயாத்திரை சென்றார் என்கிறார்கள். “History of Kanchi Sankaracharya Math and Acharyaparampara” எனும் ஆங்கில வரலாற்று கட்டுரையை “Make History” மூன்று மாதத்திற்கொருமுறை வெளியாகும் ஆங்கில பத்திரிகையில் 2003ஆம் வருஷம் ஜுலை முதல் செப்டம்பர் வரையிலான இதழில் வெளியாகியிருக்கிறது. இந்த கட்டுரையில் காஞ்சி மடம் தோன்றிய காலம் தொட்டு இப்போது 70ஆவது பீடாதிபதியாக வீற்றிருக்கும் ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் வரை விவரங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. 1813 முதல் 1875 வரை ஸ்ரீ 6ஆம் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் பீடாதிபதியாக இருந்திருக்கிறார்கள். ஆகவே ஸ்ரீ தியாகராஜரை காஞ்சிக்கு அழைத்தவர் காஞ்சி சங்கராச்சாரியார் இல்லை, தியாகராஜரின் உறவினரான உபநிஷத் சுவாமிகள்தான்.

காஞ்சிக்குப் புறப்பட்ட சுவாமிகள் சென்னை திருவொற்றியூர் ஸ்ரீ வீணை குப்பய்யர் வேண்டுகோளுக்கிணங்க கோவூர் சுந்தர முதலியாருடைய பந்தர் தெரு கிரகத்தில் ஏழு நாட்கள் தங்கினார். அந்த செல்வந்தருடைய இல்லத்தில் மாலை நேரங்களில் பாட்டுக் கச்சேரிகள் நடந்தன. அங்கிருந்து தன்னை வரவேற்ற சுந்தர முதலியாரின் கோவூருக்குச் சென்றார். அங்கு கோயில் கொண்டுள்ள ஸ்ரீ சுந்தரேச்வரரைப் பற்றி பாடினார். அங்கு ஐந்து கிருதிகளைச் செய்து அவை ‘கோவூர் பஞ்ச ரத்தினங்கள்’ எனும் பெயர் பெற்றன. அந்த செல்வந்தர் தியாகராஜருக்குத் தெரியாமல் ஆயிரம் பொற்காசுகளைக் கட்டி அவரது பல்லக்கில் மறைத்து வைத்திருந்தாராம். தெரிந்தால் சுவாமிகள் வாங்கிக் கொள்ள மாட்டார் என்ற எண்ணம். சீடர்களுக்கெல்லாம் நல்ல சன்மானங்கள் வழங்கி வழி அனுப்பி வைத்தாராம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 + seventeen =

Most Popular