கோவில்பட்டி பூவனநாதசுவாமி கோயில் வரலாறு!

65

கோவில்பட்டி பூவனநாதசுவாமி கோயில் வரலாறு!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ளது அருள்மிகு செண்பகவல்லி அம்பாள் உடனுறை பூவனநாதசுவாமி திருக்கோயில். செண்பக மன்னனால் எழுப்பப்பட்ட இந்தக் கோயில் என்பதால் இத்தல இறைவிக்கு செண்பகவல்லி எனப் பெயர் சூட்டப்பட்டது. தென் மாவட்டத்தில் மதுரைக்கு அடுத்தபடியாக கோவில்பட்டி செண்பகவல்லி அம்பாள் கோயிலில் அம்பாளே அரசாட்சி செய்கிறாள். 7 அடி உயரத்தில் எழில் கொஞ்சும் தோற்றத்துடன் அருள் பாலிக்கிறார் செண்பகவல்லி அம்பாள்.

கோவிலின் சிறப்பு:

இந்தக் கோயிலில் மட்டும் நின்ற கோலத்துடன் அருள்பாலிக்கும் அம்பிகையை அமர்ந்த கோலத்தில் அலங்காரம் செய்வது சிறப்பு. ‘சதுங்கன்’, ‘பதுமன்’ என்ற இரண்டு சர்ப்பத் தலைவர்கள் இத்தல இறைவனைப் பூவனப் பூக்களால் அர்ச்சித்ததால் இத்தல இறைவனுக்கு ‘பூவனநாதர்’ என்ற திருநாமம் பெற்றார்.

இறைவனும், இறைவியும் கிழக்கு பார்த்தபடி அருள்புரியம் சிவாலயங்களில் இத்தலமும் ஒன்று ஈசனின் திருமணத்தின் போது வடபுறம் தாழ்ந்து தென்புறம் உயர்ந்த நிலையில், உலகை சமன் செய்யும் வகையில், இறைவனின் ஆணைப்படி அகத்தியர் பொதிகை மலை நோக்கிப் பயணித்தார். வழியில் எதிர்த்த அரக்கர்களான வாதாபி மற்றும் வில்வனன் ஆகியோரை வதைத்ததால், பிரம்மஹத்தி தோஷம் நீங்க களாவனத்தில் எழுந்தருளிய பூவனநாதரைப் பூஜித்து தோஷம் நீங்கப் பெற்றார்.

அகத்தியர் தீர்த்தம்:

பொன்மலை முனிவர்களின் வேண்டுகோளினை ஏற்று அகத்தியர் ஏற்படுத்திய தீர்த்தமே இத்தலத்தில் அகத்திய தீர்த்தமாகப் போற்றப்படுகிறது.

கோவில் திருவிழா:

இங்கு ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் முக்கியத் திருவிழாக்களில் பங்குனித் திருவிழாவும் ஒன்று. திருவிழாவின் போது சுவாமி, அம்பாள் மற்றும் பஞ்சமூர்த்திகளுக்குச் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடைபெறும். ஆண்டுதோறும் நடக்கும் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் ஒன்று கூடி சுவாமியின் அருள் பெற்று செல்வது வழக்கம்.

தொடர்ந்து, கொடி மரத்தில் கொடியேற்றமும், அதைத் தொடர்ந்து, சுவாமி, அம்பாள், கொடி மரம், நந்தி பலிபீடம் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்கார தீபாராதனைகள் வெகு விமரிசையாக நடைபெறும். இவ்விழா நாள்களில் தினமும் காலையிலும், மாலையிலும் சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, திருவீதியுலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.