ராமன் ராவணனுக்குத் தந்த தட்சிணை

371

வேத வ்யாச ராமாயணத்தில் கண்டதாகக் கூறப்பட்ட ஓர் செவி வழிக் கதை.

சீதையை இலங்கையில் கண்டு பிடித்த பின் வானராதிகளுக்கும், ராம லக்ஷ்மணர்களுக்கும் பெரும் குழப்பம்.

எப்படி சீதையை மீட்பது?. சமாதானம் சாத்தியமா?. இல்லை போர் தான் ஒரே வழியா?.

நம் நாட்டின் தெற்குக் கடற்கரையில் இலங்கைக்கு மிக அருகில் ராம சேனை குழுமிக் கிடந்தார்கள்.

எந்த முயற்சி செய்வதற்கு முன்னாலும், தேவாதிகளின் அருளைப் பெற என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?

மனித ஸ்வரூபத்தில் வந்த அந்த மகா அவதாரமும் இதற்கு விலக்காக விரும்பவில்லை. ரகு குலத்திற்கான நேம நிஷ்டைகளிலிருந்து ஒரு காலும் தவறியதில்லை, மானிடனாக வந்த எம்பிரான் ராமன்.

ராமப் பெருமான் தம் குல வழக்கப்படி ருத்திரனுக்குப் பரிகார பூஜை செய்ய யத்தனித்தார்.

ராம லக்ஷ்மணர்களின் ஆணைப்படி பூஜைக்கான சாதனங்கள் ஏற்பாடாகி விட்டன. பூஜை செய்விக்க பண்டிதர் வேண்டுமே?. கடற்கரையில் அந்நாளில் பண்டிதர் கிடைப்பது சாத்தியமா?

கடற்கரை ஓரத்தில் இருந்த உள்ள ராம சேனைக்கு, ஸ்ரேஷ்டமான எல்லாம் தெள்ளறத் தெரிந்த பூஜைக்கான உயர்ந்த பண்டிதர் கிடைப்பது எப்படி?

எம்பெருமானின் ஞான திருஷ்டியில், பூஜைகள் செய்விப்பதற்கான, அருகாமையில் உள்ள மிக உயர்ந்த பண்டிதரான ராவணனைப் பற்றிய எண்ணம் உதித்தது. தம் மனைவியைக் கடத்தி வைத்திருக்கும் அரக்கனையா பண்டிதனாக நியமிப்பது.

யாரிடமும் வேற்றுமை பாராட்டாத ராம மகா பிரபுவுக்கு ராவணனே பூஜைக்கான சரியான பண்டிதன் என்று தோன்றியது. ஒரு சமயம் ராவணனோடு நேருக்கு நேர் சந்திப்பில் சமரசம் கூட ஏற்படலாமே. பல அசுர சேனைகள் ராமனின் திவ்ய சொரூபத்திற்கு அடிமையாகி, பக்தர்களாக மாறிய கதைகள் உண்டே!

ராமனின் அன்புக் கட்டளைக்காக காத்துக் கிடந்த ஹனுமான், மறு முறை, ராவணனை, பூஜா பண்டிதனாக வரவழைக்க இலங்கை புறப்பட்டான்.

மகான் அனுமனுக்கா, எதிரியிடம் தான் வந்த நோக்கத்தை அழகாகத் தெரிவிப்பது தெரியாமல் இருக்கும்.

ராவணனுக்கு தெண்டம் சமர்ப்பித்து தன்னுடைய நோக்கத்தைத் தெரிவித்தான். போன முறை வந்து தன்னுடைய நாட்டைச் சின்னா பின்னம் செய்த அனுமனுக்குள் இத்தனை அடக்கமா என்று இராவணன் வியந்து நின்றான்.

ஞான வேத பண்டிதனான ராவணனும் ராமனின் இந்த அழைப்பை உடனே ஏற்றுக் கொண்டான். புறப்பட்டான்.

தர்ம யுகத்தில் வாழ்ந்த மகா பண்டிதர்கள், பூஜை புனஸ்காரங்களுக்கென்று அழைக்கப் பெற்றால், எதிரியின் இல்லம் என்றாலும் சென்று பணியாற்றிட மறுக்காத உயர்ந்த ஸ்ரேஷ்டர்கள்.

ராம லக்ஷ்மண பரிவாரங்களிடை வந்து அடைந்த இராவணன் ருத்ர பூஜைக்கென்று ஏற்பாடான சாதனங்களைப் பார்வையிட்டான்.

ராமபிரானிடம் தெரிவித்தான். பூஜைக்கான எல்லா சாதனங்களுமே, இருந்தும் ராமனின் மனைவி உடன் இல்லாமல் பூஜை நடத்துவது எப்படி சாத்தியம் என்று வினவினான்?

கேள்விக்கான பதிலும் அவனிடமே இருந்ததால், ராமபிரானின் கோரிக்கையை ஏற்று பூஜைக்கென்று சீதையைத் தருவிப்பதில் தனக்குச் சம்மதமே, ஆனால், பூஜை முடிந்த பிறகு சீதையை இலங்கைக்கே திரும்பவும் அழைத்துச் செல்வேன் என்று தெரிவித்தான்.

எல்லாமே அறிந்த, போகப் போக என்ன நடக்கும் என்று தெரிந்ததனால், மகா பிரபு ராமனும் ராவணனுடைய கோரிக்கையை ஏற்றுக் கொண்டார்.

பரிகார பூஜையை வெகு அழகாக செய்வித்து, ராம பரிவாரத்திற்கு வெற்றி கிட்டட்டும் என்று ஒரு தேர்ந்த பண்டிதனுக்கான ஸ்ரேஷ்டத்தோடு ஆசிர்வதித்து, சீதையுடன் இலங்கை திரும்பிட யத்தனித்த ராவணனிடம், பூஜை செய்வித்தற்கான குரு தக்ஷனை அல்லது சம்பாவனை என்ன வேண்டும் என்று ராமபிரான் கேட்டதற்கு

இராவணன் கூறினான்.

‘அயோத்யா இளவரசே, என்றாவது ஒரு நாள் எனக்கு மரணம் ஏற்பட்டால் அச்சமயம் தாங்கள் எம் அருகினில் இருந்து என்னை ஆசீரவ்திக்க வேண்டும் என்பதே நான் விரும்பும் தட்சிணை’

ஞான பண்டிதனான ராவணனுக்கு எல்லோரும் விரும்பிடும் இறுதி காலத்தில், எம்பெருமானின் திருவடி சரணாகதி ஓன்று தான் மிக உயர்ந்தது, என்பது தெரியாமலா இருக்கும்?

ராவணனின் எண்ணப்படி அவன் உயிர் பிரிந்திடும் சமயத்தில், போர்க்களத்தில், அருகிலிருந்து எம்பெருமான் ராமன், ராவணனை, தன்னுடைய வாக்குறுதியை நிறைவேற்றும் வண்ணம் அருகிலிருந்து ஆசிர்வதி்த்தார்.

மன்னிக்க முடியாத சீதா அபகரணத்திற்காக வதம் செய்யப்பட்ட ராவணனுக்கு அவனுடைய உயர்ந்த வேத பண்டிதனுக்கான குரு தட்சிணை, அவன் மரணத்தின் போதில் கிட்டியது.

ஸ்ரீ ராம ஜெய ராம ஜெய ஜெய ராமா !