பக்தனின் திருமணத்திற்கு சாட்சி சொன்ன சிவன்!
காவிரிபூம்பட்டினத்தை சேர்ந்த வணிகன் ஒருவன். அவன் பெயர் அரதன குப்தன். மதுரையைச் சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு, மதுரையிலேயே வாழ்ந்து வந்தானாம். காவிரிபூம்பட்டினத்தில் வசித்து வந்த, அவன் தங்கைக்கும், தங்கையின் கணவருக்கும் தங்கள் மகள் ரத்னாவளியையும் அரதன குப்தனுக்கே மணம் முடித்து விட மனதுக்குள் ஆசை.
எதிர்பாராமல் ஒரு நாள் , அரதன குப்தனின் தங்கையும், அவள் கணவரும் இறந்துவிட்டதாக காவிரிபூம்பட்டினத்திலிருந்து தகவல் வர உடனே புறப்பட்ட அரதன குப்தன், காவிரிபூம்பட்டினம் சென்று தங்கையின் இறுதி சடங்கில் கலந்து கொண்டு விட்டு, திரும்பும்போது தாய் தகப்பனை இழந்து நின்ற ரத்னாவளியையும் அழைத்துக் கொண்டு மதுரைக்கு புறப்பட்டான்.
வரும் வழியில் திரும்புறம்பயம் என்ற இடத்திலே ஒரு புன்னைவனம் அதில் ஒரு வன்னிமரம் அருகில் ஒரு சிவலிங்கம் சற்றுத் தள்ளி ஒரு கிணறு கட்டுசோறை பிரித்து சாப்பிட்டு விட்டு அங்கேயே தங்கி விட்டார்கள் இருவரும். காலையில் கண் விழித்த ரத்னாவளி பதறிப் போனாள் கதறி அழுதாள். காரணம்? அசைவற்றுக் கிடந்தான் அரதன குப்தன்.
நள்ளிரவில் நல்ல பாம்பு வந்து கடித்திருக்கிறது. தற்செயலாக அந்த வழியாக வருகிறார் திருஞானசம்பந்தர். நடந்ததை அறிந்து அவர், ஈசனிடம் முறையிட
உயிரோடு எழுந்தான் அரதன குப்தன். சம்பந்தப்பட்ட விஷயங்கள் எல்லாவற்றையும் ரத்னாவளியிடம் கேட்டுப் புரிந்து கொண்டாராம் சம்பந்தர். அப்புறம் சொன்னாராம்: “ஈசனுக்கு முன்பாகவே இந்தப் பெண்ணுக்கு ஒரு தாலியைக் கட்டி, இவளை உன் மனைவியாகவே ஊருக்கு அழைத்துக் கொண்டு போ.”
மறு பேச்சுப் பேசாமல் மணம் செய்து கொண்டான் அரதன குப்தன். இந்த கல்யாணத்திற்கு சாட்சிகள். அங்கே இருந்த ஒரு வன்னிமரமும், கிணறும், சிவலிங்கமும்தான்! இருவரும் மதுரை வந்து சேர்ந்தார்கள். கணவனோடு இன்னொரு பெண்ணைக் கண்டு கோபம் கொண்ட முதல் மனைவி, கொதித்துப் போனாளாம். ரத்னாவளி நடந்த விஷயங்களை, உள்ளது உள்ளபடியே சொல்ல அதை கொஞ்சமும் நம்பவில்லையாம் முதல் மனைவி!
வழக்கு சபைக்கு வந்தது திருமணம் நடந்ததற்கு சாட்சி என்ன என்று எல்லோரும் கேட்டார்கள். “மனிதர்கள் யாரும் இல்லை. சிவலிங்கமும், வன்னிமரமும், கிணறும்தான் சாட்சி” என்று கூறினாள் ரத்னாவளி. முதல் மனைவி கேலியாக கேட்டாளாம் இப்படி ஒரு கேள்வி: “ஓஹோ அந்த சிவலிங்கம் இங்கே வந்து சாட்சி சொல்லுமா?”
கூடி இருந்தவர்கள் விழுந்து விழுந்து சிரித்தார்களாம். கூனிக்குறுகிப் போன ரத்னாவளி, கைகூப்பி அழுதாள் தொழுதாள்! கண்களில் கண்ணீர் வடிய கதறினாளாம் ரத்னாவளி “ஈசனே இது என்ன சோதனை? இப்போது எனக்காக இங்கு சாட்சி சொல்ல வருவது யார்? சொல் இறைவா சொல்?” ரத்னாவளி பெரும் குரல் எடுத்து கதறி அழ அந்த அழுகையை நிறுத்தியது அங்கே கேட்ட ஒரு குரல்:
“நாங்கள் சாட்சி” குரல் வந்த திசையில் கூட்டத்தினர் அனைவரும் திரும்பிப் பார்க்க. ஈசன் அங்கே எழுந்தருளி நின்றாராம்! “ஆம் இவர்கள் திருமணம் நடந்தது உண்மைதான். ரத்னாவளி கல்யாணத்துக்கு சாட்சியாக, கல்யாணம் நடந்த இடமான திரும்புறம்பயத்தில் இருந்த வன்னிமரமும், கிணறும், லிங்கமும், இன்று முதல், இந்த மதுரை கோவிலில், என் சந்நிதிக்கு ஈசான்ய மூலையில் சாட்சியாக இருக்கும்.” என்று சொல்லி மறைந்தாராம் ஈஸ்வரன்!
பார்த்தவர் அனைவரும் பரவசப்பட்டுப் போனார்களாம். இப்போதும், மதுரையில் சுவாமி சன்னதிக்கு வெளி பிரகாரத்தில் சிவன் சன்னதி மூலையில். வன்னிமரம், கிணறு, சிவலிங்கம் ஆகியவை இருக்கிறதாம்.
