ஸ்ரீபாகவத புராணம் – பகுதி 1

119

1. தோற்றுவாய்

ஸ்ரீ சுக முனிவரால் பரீக்ஷித்து மகாராஜனுக்குச் சொல்லப்பட்ட பகவானுடைய சரித்திரம் ஸ்ரீமத் பாகவத புராணம். இது 18,000 ஸ்லோகங்கள் கொண்டது. மக்களின் மனத்திலே பக்தியை வளர்த்து, மன அமைதியையும், சித்த சுத்தியையும் தரவல்லது. பகவானுடைய சொரூபமே பாகவதம். அதைக் கேட்பதினாலும், படிப்பதினாலும் மோக்ஷ சுகத்தை அடையலாம். ஸ்ரீமத் பாகவதத்தை ஸப்தாகமாக ஏழு நாட்களில் சிரத்தையுடன் முறைப்படி கேட்டால் சகல மங்களங்களும் சித்திக்கும். ஒரு சமயம் நான்கு மகரிஷிகள் சத்சங்கம் செய்ய ஒன்று கூடினர். அப்போது தற்செயலாக அங்கு நாரத முனிவர் வந்தார். அவர் உற்சாகமின்றி இருப்பதற்கான காரணத்தை அந்த முனிவர்கள் கேட்டனர். நாரதர் சொன்னார், பூலோகத்தில் எங்கு சென்றாலும் கலிமகா புருஷனுடைய ஆதிக்கமே பரவியிருப்பதைக் கண்டேன். கடைசியாக யமுனை ஆற்றங்கரையில் ஓர் இளமங்கை இரண்டு வயோதிகர்களுடன் சோர்வாக அமர்ந்திருந்தாள்.

அவள் பக்தி தேவி என்றும், அந்த இரண்டு கிழவர்களும் ஞானம், வைராக்கியம் என்ற பெயரை உடையவர்கள் என்றும் அருகிலிருந்த மூன்று பெண்கள் கங்கை, யமுனை முதலிய நதிகளின் தேவதைகள் என்றும் அறிந்தேன். அவள் மேலும் அந்தப் புண்ணிய பூமியான பிருந்தாவனத்தை அடைந்த உடனே புத்துயிர் பெற்று, யுவதியாக மாறியதாகவும், ஆனால் அவளுடைய புத்திரர்களான ஞானமும், வைராக்கியமும் பலஹீனர்களாகவே உள்ளனர் என்றும், அதன் காரணம் அறியாமல் அவள் தவிப்பதாகவும் கூறினாள். அப்போது நான் (நாரதர்) அவளிடம் ஸ்ரீ கிருஷ்ண சரணார விந்தங்களைத் தியானம் செய்தால் துக்கம் நீங்கி ÷க்ஷமத்தை அடைவாய் என்று கூறினார்.

இந்தக் கலியுகத்தில் பக்தியே மோக்ஷசாதனம் என்று அறிவுரை கூறினேன். அடுத்து பக்தி தேவியின் வேண்டுகோளின்படி, ஞானம், வைராக்கியம் இருவரையும் தட்டி எழுப்பி அவர்களுடைய செவிகளில் கீதா வாக்கியங்களையும், உபநிஷத் மந்திரங்களையும் உபதேசித்தேன். அப்போது ஓர் அசரீரி என்னிடம் ஒரு சத்கர்மா எப்படி புரிய வேண்டும் என்பதைச் சில சாதுக்கள் கூறுவர் என்று சொல்லியது. நான் பதரீவனத்துக்குச் சென்று தவம் ஆற்றி வருகையில் தாங்கள் என்னைக் கண்டீர்கள் அவர்கள் நாரதரிடம் யோகம், தவம், யக்ஞம் ஆகியவற்றை விடச் சிறந்தது ஞான யக்ஞம். இதுவே சத்கர்மம் ஆகும். பாகவத ஞான யக்ஞ விசேஷத்தால் ஒவ்வொரு வீட்டிலும் பக்தியானவள், ஞான வைராக்கியங்களுடன் பிரேமரசத்தை நிரப்பிக் கொண்டு விளையாடிக் கொண்டு இருப்பாள் என்று கூறினர். அப்போது நாரதர் பக்தி, ஞானம், வைராக்கியம் ஆகியோர்க்கு நன்மை செய்ய ஞான யக்ஞம் செய்கிறேன். அதற்குத் தகுதியான இடம் கங்கா நதிக்கரையில் உள்ள ஆனந்த வனம் என்று அறிந்து, அங்கு சேர்ந்து ஞான யக்ஞத்தைச் செய்தார். எல்லோரும் அங்கு வந்து சேர்ந்தனர். அப்போது சனத்குமாரர்கள் நாரதரைப் பார்த்து பாகவதத்தின் பெருமையை எடுத்துக் கூறினர். பாகவதச் சிரவணத்தாலே ஸ்ரீவிஷ்ணு நம் உள்ளத்தில் ஆவிர் பாகம் ஆகிறார்.

புண்ணிய கிரந்தமான பாகவதம் பன்னிரண்டு ஸ்கந்தங்களும், பதினென்ணாயிரம் சுலோகங்களும் கொண்ட உன்னத புராணம். துளசி, துவாதசி, திதி, காமதேனு ஆகியவற்றிற்கும், ஸ்ரீமகா விஷ்ணுவுக்கும், பாகவத புராணத்திற்கும், வாசுதேவரின் மந்திரத்துக்கும் எவ்வித பேதமும் கிடையாது. இதை எவனொருவன் ஆயுளின் கடைசி தறுவாயில் கேட்கின்றானோ, அவனுக்கு கோவிந்தன் பிரீதியோடு வைகுண்ட வாசத்தை அளிக்கின்றான். பாபாத்மாக்களும் இந்தக் கலியுகத்தில் ஸப்தாஹ யக்ஞத்தினாலேயே பரிசுத்தம் அடைந்து விடுகின்றனர். எல்லோரும் ஸ்ரீ ஹரியை ஸ்தோத்திரம் செய்தனர். அவ்வமயம் பக்திதேவி, இளமையும், புஷ்டியும் நிறைந்த தன் குமாரர்களுடன் அங்கு தோன்றி ஹரிநாம சங்கீர்த்தனம் செய்ய ஆரம்பித்தாள்.