தியாகராஜ சுவாமிகள் – பகுதி 2

253

வரலாறு

இந்த வரலாறு முழுவதும் பெரும்பாலும் ஸ்ரீ தியாகராஜரின் சீடர்களில் ஒருவரான வாலாஜாபேட்டை வேங்கடரமண பாகவதர் அவர்களின் பேரனும், கிருஷ்ணசாமி பாகவதரின் மகனுமான ஸ்ரீ இராமசாமி பாகவதர் 1935இல் ஸ்ரீ தியாகராஜர் வாழ்க்கை வரலாற்று நூலான “ஸ்ரீ தியாக ப்ரஹ்மோபநிஷத்” முதல் நூலிலிருந்து கொடுக்கப்படுகிறது. பிற்காலத்தில் ஸ்ரீ தியாகராஜர் பற்றி எழுதியுள்ளவற்றுக்கும் இதற்கும் சற்று மாறுபாடுகள் இருக்கலாம். எனினும் இது தியாகராஜ சுவாமிகளின் சீடரின் பரம்பரையினர் எழுதியதால் இதுவே சரியானது என்று ஏற்றுக்கொள்ளலாம்.

நீர்வளம், நிலவளம் முதலான அனைத்துச் செல்வங்களும் நிரம்பப்பெற்று, சீர்மிகு சோழமன்னர்களால் நீதி தவறாமல் ஆட்சி புரிந்துவரும் சோழநாட்டில் திருவாரூர் எனும் தலம்; ஸ்ரீ தியாகராஜப் பெருமானும், கமலாம்பிகை அம்பாளும் குடியிருக்கும் திவ்ய க்ஷேத்திரம். சுந்தரமூர்த்தி சுவாமிகள் தரிசித்து “திருத்தொண்டத்தொகை” பாடி சிவனடியார்களின் பெருமையை உலகறியச் செய்த புண்ணிய பூமி. இந்த புண்ணிய பூமியில் தற்போதைய ஆந்திரப் பகுதியிலிருந்து குடிபெயர்ந்து வந்த ஸ்ரீ ராமபிரம்மம் என்பவர் வாழ்ந்து வந்தார். தியாகராஜரின் கொள்ளுப் பாட்டனார் பஞ்சநதப் பிரம்மம் என்பவர். இவருடைய பெயரிலிருந்து இவர் திருவையாற்றில் வாழ்ந்தவர் என்பதை அறியமுடிகிறது.

தியாகராஜரின் தாய்வழி பாட்டனார் வீணை காளஹஸ்தய்யா என்பவர் திருவாரூரில் வாழ்ந்தார். ராமபிரம்மத்தின் மனைவிக்கு சீதம்மா என்பது திருநாமம். ஸ்ரீ தியாகராஜர் தனது “சீதம்ம மாயம்ம ஸ்ரீராமுடு நாதன்றி” எனும்பாடலில் ஸ்ரீ இராமபிரானை மட்டுமல்ல, தனது தாய்தந்தையரையும் வணங்கிப் போற்றுகிறார். இவர்கள் அறவழியில் பூஜை, தியானம் என்று வாழ்ந்து வந்தார்கள். இவர்களுக்கு ஸந்தான பாக்கியம் கிடைக்கப்பெற்று மூன்று பிள்ளைகளைப் பெற்றெடுத்தார்கள். அவர்களுக்கு ஜல்பேசன் என்கிற பஞ்சநதம், ராமநாதன், தியாகராஜன் எனப் பெயரிட்டு வளர்த்துவந்தார்கள்.

ராமநாதன் இளம் வயதிலேயே காலமாகிவிட்டார். இவர்களில் மூன்றாவது, இளைய மகவாகப் பிறந்தவர்தான் நாம் இப்போது பார்க்கப் போகும் தியாகராஜன் எனப்படும் ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள். இவர் கலியுகாதி வருஷம் 4868, சாலிவாகன 1689க்குச் சரியான ஸர்வஜித் வருஷம், சித்திரை மாதம் 25ஆம் தேதி திங்கட்கிழமை, வைசாக சுக்ல ஸப்தமி பூச நக்ஷத்திரம், கடக லக்கினம், சூரிய உதயாதி 15-1/2 நாழிகையில் கடக லக்னத்தில் (அதாவது 4–5–1767) பிறந்தார். சில ஆண்டுகள் கழிந்தபின்னர் ஸ்ரீ ராமபிரம்மம் திருவாரூரை விட்டு நீங்கி காவிரிக்கரையில் அமைந்துள்ள திருவையாறு க்ஷேத்திரத்திற்கு வந்து சேர்ந்தார். தந்தைவழி ஊர் என்பதால் அவர் திருவையாற்றில் வாழ்ந்து வரலானார்.

தஞ்சாவூர் அப்போதைய மராட்டிய மன்னர்களின் தலைநகர் என்பதால் பண்டிதர்களும் பல்வேறு கலைஞர்களும் தலைநகருக்கு அருகில் வாழ்வதையே விரும்பினர். தியாகராஜனுக்கு அவரது தந்தையார் சமஸ்கிருதம், தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளைக் கற்பித்தார். தாயாரிடம் ஜெயதேவரது அஷ்டபதி, ராமதாஸர் கீர்த்தனைகள் மற்றும் பல பக்திப் பாடல்களைக் கற்றுக் கொண்டார். ஸ்ரீ தியாகராஜரின் எட்டாவது வயதில் அவருக்கு பிரம்மோபதேசம் செய்விக்கப்பட்டது. அப்படி பிரம்மோபதேசம் செய்விக்கப்பட்ட நேரத்தில் தந்தை குரு உபதேசமாகத் தன் மகனுக்கு “ஸ்ரீ ராம” நாம உபதேசமும் செய்வித்தார். அதுவரை ராமப்பிரம்மம் தான் பூஜை செய்துவந்து ஸ்ரீ ராம, லக்ஷ்மண, சீதா, அனுமன் விக்கிரகங்களை அவரிடம் கொடுத்து அவரே அதற்கு நித்ய பூஜைகளைச் செய்துவருமாறு பணித்தார். அதுமுதல் ஸ்ரீ தியாகராஜர் தினசரி கர்மானுஷ்டானங்களை கடமை தவறாமல் செய்துவந்ததோடு ஸ்ரீ ராமருடைய விக்கிரகங்களுக்கும் நித்ய பூஜைகளைச் செய்து வந்தார். இப்படிச் சில காலம் கழிந்த பின்னர் அப்போது திருவையாறு க்ஷேத்திரத்தில் வசித்து வந்த ஸ்ரீ ராமகிருஷ்ணானந்தா சுவாமிகள் என்பவர் ஸ்ரீ தியாகராஜருக்கு “ஸ்ரீ ராம ஷடாக்ஷரி” எனும் மந்திரோபதேசம் செய்வித்தார். சிறு பிள்ளையாயிருந்த காலந்தொட்டே ஸ்ரீ தியாகராஜருக்கு இராமபிரான் மீது அபாரமான பக்தி.

அதிலும் தன் எட்டாவது வயதில் பிரம்மோபதேசம் செய்விக்கப்பட்ட நாளிலிருந்து ஸ்ரீ ராம விக்கிரகத்துக்கு பூஜைகள் செய்வித்து வந்ததாலும், பக்தி, அன்பு, பாசம், ஈடுபாடு ஏற்பட்டு, தானும் இராமனும் இணைபிரியாதவர்கள் என்ற உணர்வுபூர்வமான எண்ணத்தில் வாழ்ந்து வந்தார். ஸ்ரீ இராமனுக்கு அபிஷேகம், பூஜைகள், அர்ச்சனைகள் செய்யும் காலத்தில் உளப்பூர்வமாக, உணர்ச்சி பூர்வமாக மெய்மறந்து பூஜா கர்மாக்களில் தன் மனத்தை ஈடுபடுத்திச் செய்து வந்தார். அப்படி பூஜை செய்யும்போது, ஸங்கீத ஞானமுடையோர் நல்ல பாடல்களைப் பாடி வழிபடுவது முறை. அப்படியே ஸ்ரீ தியாகராஜரும் தான் பூஜை செய்யும்போது, ஸ்ரீ ராமபிரான்மீது புதிய புதிய கீர்த்தனைகளை இயற்றிப் பாடிவரலானார். அப்படி இவர் முதன்முதலில் செய்த கீர்த்தனையாக “நமோ நமோ ராகவாய” எனும் கீர்த்தனை சொல்லப்படுகிறது.

இராமபிரானிடம் அபாரமான பக்தி கொண்டு அந்தப் பெயரைத் தொண்ணூற்றாறு கோடி முறை ஜெபித்து முடித்தவுடன் ஸ்ரீ ராமபிரான் காட்சி கொடுத்ததாகக் கூறுகிறார்கள். ஸ்ரீ ராமபிரான் மீது அபரிமிதமான பக்தி ஏற்பட்டு அவருடைய கவிதா ஊற்றுக்கண் திறந்து ஏராளமான பாடல்களைப் பாடத் தொடங்கினார். இப்படி ஸ்ரீ தியாகராஜர் தினப்படி கீர்த்தனைகளை இயற்றிப் பாடிவருவதை கவனித்து அதனை எழுதி, திருவையாற்றிலிருந்த பல பெரியவர்களிடம் ஸ்ரீ ராமபிரம்மம் காட்டி மகிழத் தொடங்கினார். அந்த கீர்த்தனைகளில் பொதிந்து கிடக்கும் பக்தி ரஸம், பாடல் யுக்தி, கவிதைச் சிறப்பு இவைகளைக் கண்டு மகிழ்ந்து அவர்கள் தியாகராஜரைப் புகழ்ந்து பாராட்டத் தொடங்கினார்கள்.

அந்தக் காலத்தில் தஞ்சாவூர் ராஜ்யத்தை மராட்டிய மன்னர்கள் ஆண்டு வந்தார்கள். கலைகளையும், கல்வியையும் போற்றி வாழ்ந்து வந்த அந்த மன்னர்களுடைய சபையில் சுமார் 360க்கும் மேற்பட்ட ஸங்கீத வித்வான்கள் இருந்தார்கள். அவர்கள் அத்துணை பேருக்கும் தலைவராக இருந்தவர் ஸ்ரீ ஸொண்டி வேங்கடரமணய்யா என்பவர். இவரது தகுதி கருதி இவருக்கு மன்னருக்கு இணையான ஆசனமிட்டு அதில் உட்கார வைக்கப்படுவார். தலைமை வித்வானாகிய இவர்தான் ஒவ்வோர் வருஷத்தின் முதல்நாள் மன்னன் சபையில் பாடி கெளரவிக்கும் வித்வான் எனத் தகுதி பெற்றவர். அத்தகைய சிறப்புப் பெற்ற தலைமை வித்வானிடம் நமது தியாகராஜர் முறைப்படி ஸங்கீத சிக்ஷை பெறலானார்.

…….தொடரும்

…….தொடரும்