செல்வத்தை அள்ளித் தரும் சொர்ண பைரவர் அஷ்டகம்!
தனம் தரும் வயிரவன் தளரடி பணிந்திடின் தளர்வுகள் தீர்ந்து விடும்
மனம் திறந்து அவன் பதம் மலரிட்டு வாழ்த்திடின் மகிழ்வுகள் வந்து விடும்
சினம் தவிர்த்து அன்னையின் சின்மயப்புன்னகை சிந்தையில் ஏற்றவனே
தனக்கில்லையீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்
வாழ்வினில் வளந்தர வையகம் நடந்தான் வாரியே வழங்கிடுவான்
தாழ்வுகள் தீர்ந்திட தளர்வுகள் மறைந்திட தானென வந்திடுவான்
காழ்ப்புகள் தீர்த்தான் கானகம் நின்றான் காவலாய் வந்திடுவான்
தனக்கில்லையீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்
முழுநிலவதனில் முறையோடு பூசைகள் முடித்திட அருளிடுவான்
உழுதவன் விதைப்பான் உடமைகள் காப்பான் உயர்வுறச் செய்திடுவான்
முழுமலர்த் தாமரை மாலையை செபித்து முடியினில் சூடிடுவான்
தனக்கிலை யீடு யாருமே என்பான் தன மழை பெய்திடுவான்
நான்மறை ஓதுவார் நடுவினில் இருப்பான் நான்முகன் நானென்பான்
தேனினில் பழத்தைச் சேர்த்தவன் ருசிப்பான் தேவைகள் நிறைத்திடுவான்
வான்மழை எனவே வளங்களைப் பொழிவான் வாழ்ந்திட வாழ்த்திடுவான்
தனக்கில்லையீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்
பூதங்கள் யாவும் தனக்குள்ளே வைப்பான் பூரணன் நானென்பான்
நாதங்கள் ஒலிக்கும் நால்வகை மணிகளை நாணினில் பூட்டிடுவான்
காதங்கள் கடந்து கட்டிடும் மாயம் யாவையும் போக்கிடுவான்
தனக்கில்லையீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்
பொழில்களில் மணப்பான் பூசைகள் ஏற்பான் பொற்குடம் ஏந்திடுவான்
கழல்களில் தண்டை கைகளில் மணியணிகலனாய் இருந்திடுவான்
நிழல்தரும் கற்பகம் நினைத்திடப் பொழுந்திடும் நின்மலன் நானென்பான்
தனக்கில்லை யீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்
சதுர்முகன் ஆணவத்தலையினைக் கொய்தான் சத்தோடு சித்தானான்
புதரினில் பாம்பைத் தலையினில் வைத்தான் புண்ணியம் செய்யென்றான்
பதரினைக் குவித்து செம்பினை எரித்தான் பசும்பொன் இதுவென்றான்
தனக்கில்லை யீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்
ஜெய ஜெய வடுகநாதனே சரணம் வந்தருள் செய்திடுவாய்
ஜெய ஜெய சேத்திர பாலனே சரணம் ஜெயங்களைத் தந்திடுவாய்
ஜெய ஜெய வயிரவா செகம் புகழ் தேவா செல்வங்களைத் தந்திடுவாய்
தனக்கில்லை யீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்.
அசைவ உணவுகளை தவிர்த்து நாள்தோறும் இந்த சொர்ண பைரவர் அஷ்டகத்தை சொர்ண பைரவரது சன்னதியில் வைத்து தினந்தோறும் 1 முறை பாராயணம் செய்து வந்தால், வாழ்விற்கு குறை இருக்காது. செலவத்திற்கு பஞ்சம் வராது. அப்படி நாள்தோறும் கோயிலுக்கு செல்ல முடியாதவர்கள் ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை அன்று சொர்ண பைரவர் சன்னதியில் வைத்து 1 முறை சொல்லி விட்டு வீட்டிற்கு வந்து 8 முறை சொல்ல வேண்டும்.
அப்படியும் இல்லை என்றால் வாரத்திற்கு ஒரு முரை ஞாயிறு தோறும் ராகுகால வேளையில் சொர்ண பைரவர் சன்னதி முன்பாக 1 முறை சொல்லி விட்டு பின்பு வீட்டிற்கு வந்து சொர்ண பைரவர் படத்தின் முன்பாக 8 முறை பாராயணம் செய்ய வேண்டும்.
இதில் ஏதேனும் ஒரு முறையில் சொல்ல முடியாதவர்கள் பின்வருவனவற்றை பின்பற்றலாம்:
கோயிலில் ஒரு முறை வீட்டில் வைத்து 8 முறை சொல்ல வேண்டும்:
தேய்பிறை அஷ்டமி நாளில் சொர்ண பைரவர் அஷ்டகம் சொல்லலாம்.
தேய்பிறை சஷ்டி நாளன்று சொர்ண பைரவர் அஷ்டகம் சொல்லலாம்.
ஒவ்வொரு பௌர்ணமி நாளன்றும் சொர்ண பைரவர் அஷ்டகம் சொல்லலாம்.
இப்படி ஏதேனும் ஒரு முறையில் சொல்லலாம். அஷ்டகம் சொல்ல முடியாதவர்கள், மேற்கண்ட நாட்களில் அல்லது தினந்தோறும் 108 முறை ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ என்ற பைரவருக்குரிய மந்திரத்தை சொல்ல வேண்டும்.
