Friday, October 27, 2023
HomeUncategorizedஇது பரதனின் விரதம்.

இது பரதனின் விரதம்.

அமர்க்களமாய் மங்களகரமாய் திகழ்ந்த அயோத்திக்கு அசாதாரண நிலைமையேற்பட்டது.
தந்தையின் வாக்கைக் காப்பாற்ற வேண்டும். அசுரர்களை அழிக்க வேண்டும். கானகம் ஏகினான் இராமன் –
இது அவனது விரதம்.

இராஜ்ய பரிபாலனம் செய்யலாம். அனைத்து இன்பங்களையும் அனுபவிக்கலாம். எதுவும் அனுபவிக்கவில்லை – அனுபவிக்கப் போவதில்லை –
இது பரதனின் விரதம்.

சதா சர்வகாலமும் தம் சிரஸ்ஸில் ஏந்தி காப்பாற்றிய பாதுகையினை விட்டு பிரிந்த இராமனை, எப்போதும்
விழித்திருந்து காக்க வேண்டும் – இது இலக்குவனின் விரதம்.

இராமனின் திருவடிகளை விட்டு என்றுமே அகலாத பாதுகை இராமனை பிரிந்துள்ள பரதனையும், நாட்டையும்
காக்க வேண்டும் – இது பாதுகையின் விரதம்.

இதில் எது மேம்பட்டது? பாதுகையின் விரதம்தான் என்கிறார் ஸ்வாமி தேசிகர்!

தசரதன் மறைவிற்கு தாம்தானே காரணம் என்றெண்ணி வெட்கினான் பரதன். பட்டமேற்காததற்கு இதுவும் ஒரு
காரணம். இராமனை மட்டுமே இலக்குவன் காத்தான். பாதுகாதேவியோ இராமனைப் பிரிந்த பரதனையும் தேற்றி, இந்த பாரதத்தையும் காப்பாற்றினாள். அதுவும் இராமனை விட்டுப் பிரிந்த துக்கம் ஒரு புறம் தீராத வேதனையாய்
வாட்டினாலும், தாம் பூண்ட விரதத்தில் வைராக்யமாய் தனி ஒருவளாய் இருந்து அனைத்தையும் காப்பாற்றினாள்.

முழுமையான காத்தல் இதுவே! (அம்ப ஜகத் சமஸ்தம் ஜாகர்த்தி..) என்கிறார்.
பாதுகை ஆண்ட காலம் முழுதும் போர் இல்லை. பகைமை மறைந்து தோழமையுணர்வு எல்லா ராஜ்யத்திலும் இருந்ததால் அயோத்தியின் கோட்டைக் கதவுகள் திறந்தே கிடந்தனவாம். யானைப்படை குதிரைப்படை ஆகியவற்றில் உள்ள யானைகள் குதிரைகள் எவையும் கட்டப்படாமல் வீதியில் சுதந்திரமாக திரிந்தனவாம்!

இராமனால் ஆராதிக்கப்பட்டதால் அரங்கனுக்குப் பெருமை! பாதுகை, ஸிம்ஹாஸனத்தில் இருந்து ஆராதிக்கப் பெற்றமையினால், இந்த பாரதத்திற்குப் பெருமை! பாதுகா ராஜ்யத்திற்கு பின் பட்டமேற்று அரசாண்ட மனு குலத்து மன்னர்களுக்குப் பெருமை – பாதுகை அரசாண்ட ஆசனத்தில் அவர்களும் அமர்ந்து ஆண்டமையினால்!

பிரதிபலன் ஏதும் எதிர்பாராது பாதுகாதேவியினை தியானிப்பவர்களுக்கு, அவர்கள் எதிர்பாராத மிகவும் உயர்ந்த பலன்களை இவள் அருளுவாள்!
இவளை முதலில் ஆராதித்தவன் பரதன்! பரதனின் மனோவருத்தத்தினை நீக்கினாள்! அவன் ஏற்க மறுத்தும் தாம் முன்னின்று பரதனை பின்நிறுத்தி இந்த ராஜ்யபரிபாலனம் நடத்தினாள்.

144 போகாந் அநந்ய மநஸாம் மணிபாதுகே த்வம்
புஷ்ணாஸி ஹந்த பஜதாம் அநுஷங்கஸித்தாந்
தேநைவ நூநம் அபவத் பரதஸ்ய ஸாதோ:
அப்ரார்த்திதம் தத் இஹ ராஜ்யம் அவர்ஜநீயம்

ஸ்ரீ ராம ஜெய ராம ஜெய ஜெய ராமா !

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 × two =

Most Popular