ரசவாங்கி ஒரு பாரம்பரிய பிராமண சமையல். சாம்பார் குழம்பிற்கு மாற்றாக இதை செய்வார்கள். இது கூட்டு என்றும் சொல்ல முடியாது குழம்பு என்றும் சொல்ல முடியாத ஒரு கலவை. மிகவும் ருசியானது. ரசவாங்கி செய்யும் போது கறி(பொறியல்) எதுவும் செய்யத் தேவையில்லை. இதை தஞ்சாவூர் காரர்கள் #ரசவாங்கி என்றும் திருநெல்வேலிகாரர்கள் #பிட்லை என்றும் சொல்வார்கள். ஆனாலும் பாவக்காய் செய்யும் போது மட்டும் எல்லோரும் பொதுவாக பிட்லை என்றுதான் சொல்கிறார்கள்.
#தேவையானபொருட்கள்…
– 3 பிடி க்யூபாக நறுக்கிய பூசணிக்காய்
– 1 1/2 கைப்பிடி பரங்கிக்காய்
– 1 கப் வெந்த துவரம்பருப்பு
– 1 நெல்லிக்காய் அளவு புளி
– 1 டேபிள்ஸ்பூன் சாம்பார் பொடி
– உப்பு தேவைக்கேற்ப்ப
#வறுத்து அரைக்க…
– 3 குண்டு சிகப்பு மிளகாய்
– 1 டேபிள்ஸ்பூன் கடலைபருப்பு
– 1 டேபிள்ஸ்பூன் தனியா
– 3 கொண்கடலை சைஸ் பெருங்காயம்
#தாளிக்க…
– கறிவேப்பிலை, மஞ்சப்பொடி, தேங்காய் எண்ணெய், கடுகு, காய்ந்த மிளகாய்
– 3 டேபிள்ஸ்பூன் தேங்காய் திருவல்
#செய்முறை…
வறுக்கும் சாமான்களை எண்ணெய் விட்டு வீடியோவில் காண்பித்தபடி பருப்பு பொன்னிறமாகும் வரை வறுத்தெடுத்து ஆறவிட்டு சற்று கோர்ஸாகப் பொடி பண்ணிக் கொள்ளவும்.
புளியை நன்கு கரைத்து வைத்துக் கொள்ளவும்.
துவரம்பருப்பை வேகவைத்து மசித்து வைத்துக் கொள்ளவும்.
ரசவாங்கி செய்யும் பாத்திரத்தில் நறுக்கிய பூசணிக்காய் பரங்கிக்காய் சேர்த்து தண்ணீர் சேர்த்து கொஞ்சம் மஞ்சள் பொடி உப்பு போட்டு வேகவிடவும். பாதி வேகும் போது புளியை கரைத்து விட்டு சாம்பார் பொடியை சேர்க்கவும்.
பூசணிக்காய் வெந்து சாம்பார் பொடி வாசனை போனப்பின், பருப்பை மசித்து சேர்க்கவும். பின்னர் அரைத்த பொடியில் முக்கால் பாகம் போட்டு உப்பு உறைப்பு, கன்சிஸ்டன்சி அட்ஜஸ்ட் செய்து ஒரு கொதி வந்தவுடன் அடுப்பை அணைக்கவும்.
தாளிக்கும் கரண்டியில் தேங்காய் எண்ணெய் சேர்த்து, கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை தாளித்து தேங்காய் துருவலை (மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றிக் கொள்ளவும்) சேர்த்து பிரட்டி ரசவாங்கியில் கொட்டிக் கிளரவும்.
சுவையான பூசணிக்காய் ரசவாங்கி தயார்.
இதற்கு பொரித்த உளுந்தப்பளம் நல்ல காம்பினேஷன்.
தக்காளி, கேரட் தயிர் பச்சடி கூட நன்கு ஒத்துப்போகும்.
நீங்களும் செய்து பார்த்துவிட்டு உங்கள் கருத்தினை கூறவும்.
#குறிப்பு…
பூசணிக்காய்க்கு பதில் கத்தரிக்காய் போட்டும் செய்யலாம். கத்தரிக்காயுடன் ஒரு பிடி வேகவைத்த வெள்ளைக் கொத்துக்கடலை/ மொச்சக்கொட்டையும் சேர்த்துக்கலாம். தக்காளிக்காய் போட்டும் எங்கள் வீட்டில் செய்வார்கள்.
பாவக்காயை நறுக்கி உப்பு மஞ்சள் பொடி தூவி ஐந்து நிமிடம் கழித்து பிழிந்து பாவக்காயை மட்டும் எடுத்து வேகவைத்து இதே செய்முறை படி செய்தால் பாவற்க்காய் பிட்லை தயார்.
வெறும் பூசனிக்காய் மட்டும் போட்டு செய்யலாம். பரங்கிக்காய் சேர்த்தால் அந்த ஸ்வீட்னஸுடன் செம்ம டேஸ்ட்டாக இருக்கும்.
காயை குழைத்து விடாமல் சரியான பதத்திற்கு வேக வைப்பது சவால்.
வெந்தயத் தோசை, அரிசி உப்புமா, உப்மா கொழுக்கட்டைக்கும் ரஸவாங்கி செம்ம காம்பினேஷன்.
