சித்திரகுப்தனிடம் ரகசியம் செல்லாது…..

363

செயல் இருந்தால் விளைவு இருக்கும். சுவர் மீது எறிந்த பந்து மீண்டும் நம்மிடத்தேதான் வரும். மாயமாகிப் போகாது. எறியப்பட்ட வேகத்திற்கு தகுந்தாற்போல திரும்ப வந்தே தீரும். இந்தச் செயல் விளைவு எனும் அறிவியல் விஷயத்தைதான் ஆன்மிகம் கர்மா என்கிறது. ஒரு கர்மாவிற்கு எதிர் கர்மா இருக்கத்தான் செய்யும். நல்லது செய்தால் அது நம்மிடத்தே புண்ணியமாக பதிவாகிறது.

தீங்கு செய்தால் அது பாவமாக பதிவாகிறது. புண்ணியமோ பாவமோ வரும் வேகத்தைப் பொறுத்து நாம் பாதிப்பையும் சந்தோஷத்தையும் அனுபவிக்கிறோம். இது இந்தப் பிறவியில் மட்டுமல்லாது முற்பிறவியிலிருந்தும் தொடர்ந்து வருகிறது. இன்னும் சொல்லப் போனால் அது அடுத்த தலைமுறையைக் கூட பாதிக்கிறது. இதைத்தான் ஔவைப் பாட்டி, ‘பண்ணிய பயிரில் புண்ணியம் தெரியும்’ என்றாள்.

இதையெல்லாம் கண்டுபிடித்த நம் ரிஷிகள், நம்முடைய ஒட்டு மொத்த வாழ்க்கையையும் குறித்து வைப்பவராக சித்திரகுப்தனை சொல்லியிருக்கிறார்கள். கடவுளின் கருவியில் அவனின் நாடக லீலையில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வேடம். அதைச் சரியாகச் செய்து விட்டு மீண்டும் அவனிடமே சென்று கலந்து விடவேண்டும். அப்படித்தான் சித்திரகுப்தனுக்கும் நம்முடைய சகல செயல்களையும் பதிவு செய்யும் பணியை இறைவன் அளித்துள்ளார்.

சித்திரங்களாக உள்ள நம் மனதின் பதிவை, குப்தமாக அதாவது, ரகசியமாக பதிவு செய்கிறார். ஒட்டு மொத்தமாக இவையெல்லாவற்றையும் விதை வடிவத்தில் சூட்சுமமாக மாற்றுகிறார். இப்படியாக சகல காரிய காரண ரூபங்களையெல்லாம் தொகுத்து அதற்கான பலன்களை அருளும் தர்மதேவனிடம் ஈசனின் அருளாணைப்படி சமர்ப்பித்து விடுகிறார். ‘நான் இந்த தப்பு பண்ணும்போது யாரும் அங்க இல்லை’ என்று வெளியுலகிற்கு வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளலாம். ஆனால், எல்லாமும் இறைவன் பார்வையால் கணக்கில் ஏறிக் கொண்டேதான் இருக்கிறது.

இந்த விஷயங்களையெல்லாம் நாம் தெரிந்து கொள்ள வேண்டுமென்பதற்காகவே சித்திரகுப்தனுக்கென்று தனித்த வழிபாட்டை உருவாக்கி அவனை நினைவுகூர வைத்திருக்கிறார்கள். சித்திரகுப்தனை சித்திரபுத்திரர் என்றும் அழைப்பர். . இந்த சித்திர புத்திரரைக் குறித்து பல்வேறு புராண தகவல்கள் உள்ளன. சிவபெருமான் ஒரு தங்கப் பலகையில் சித்திரம் ஒன்றை வரைந்தார். இந்த சித்திரத்தைக் கண்ட பார்வதி தேவி, அந்தச் சித்திரத்தை உயிர்ப்பிக்க வேண்டினார். சிவபெருமானும் பார்வதிதேவியின் வேண்டுதலுக்காக அதனை உயிர்ப்பித்தார்.

அதுவே சித்திரபுத்திரர் என்றாயிற்று. மேலும், இந்திரன் தனக்கு குழந்தைப் பேறு அளிக்க வேண்டுமென்று இந்திராணியுடன் சேர்ந்து, பல தான தர்மங்கள் செய்து சிவபெருமானை நோக்கித் தவமிருந்தான். சிவபெருமான் காமதேனுவை அழைத்து, இந்திரன் மற்றும் இந்திராணி ஆகியோரின் தவத்தை எடுத்துச் சொல்லி, சித்திர புத்திரனை இந்திரனுக்கு மகனாக்கி அவனுடைய கவலையைத் தீர்க்கும்படி கூறினார்.

அதன்படி சித்திரை மாதம், பௌர்ணமி நாளன்று காமதேனுவின் வயிற்றில் ஏடும், எழுத்தாணியும் கொண்டு சித்திர புத்திரர் பிறந்தார். இந்தக் குழந்தையை இந்திரனும் இந்திராணியும் வளர்த்து வந்தனர். இந்திரனின் மகனாக வளர்ந்த சித்திர புத்திரன், சிவபெருமானைத் தொடர்ந்து வழிபட்டு வந்தான். சித்திர புத்திரனின் வழிபாட்டில் மகிழ்ந்த சிவபெருமான் அவருக்கு அனைத்து உயிரினங்களின் செயல்பாடுகள் குறித்த கணக்குகளையும் எழுதிப் பராமரிக்கும் பணியை வழங்கினார் என்றும் புராணம் கூறுகிறது. .

சித்திர புத்திரரைத்தான் பலரும் சித்திர குப்தன் என்றே குறிப்பிடுகின்றனர். சித்திரம் என்றால் வியப்புக்குரியது என்றும் குப்தம் என்றால் மறைபொருள் (ரகசியம்) என்றும் பொருளுண்டு. எப்படிப்பட்ட மறைபொருளையும் கண்டறிந்து குறித்து வைத்து விடுவார் என்பதால் தான் இவருக்கு சித்திர குப்தன் என்கிற திருநாமம். ஒவ்வொரு ஆண்டும் சித்திர புத்திரர் அவதரித்த சித்திரை முழுநிலவு நாளன்று சித்திரை நோன்பு கொண்டாடப்படுகிறது. சித்திரை நோன்பு எனும் விரதத்தைப் பெண்கள்தான் அதிகமாகக் கடைப்பிடிக்கின்றனர்.

இந்நாளில் பெண்கள் மற்றும் குழந்தைகள் தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளித்து விரதம் இருக்கின்றனர். சித்திர புத்திரர் காமதேனுவின் கர்ப்பத்தில் இருந்து பிறந்ததால், பசுவின் பால் மற்றும் பாலிலிருந்து பெறப்படும் எந்தப் பொருட்களையும் இந்த விரத நாளில் பயன்படுத்தக் கூடாது என்பது ஒரு கட்டுப்பாடாகவே உள்ளது. இந்நாளில் சித்திரை நோன்பு மேற்கொள்பவர்கள் அன்று மட்டும் தங்கள் உணவில் உப்பையும் சேர்த்துக் கொள்வதில்லை. வீடுகளில் மாக்கோலம் எழுதி, ஏடு, எழுத்தாணி வைத்து விளக்கேற்றி, வாசனைப் பொருட்கள் கலந்த பொங்கலை வைத்து வழிபடுகின்றனர்.

இந்தப் பூஜையை செய்பவர்கள் சித்திர புத்திரர் கோயிலுக்குச் சென்று ஏழை மாணவர் ஒருவருக்கு ஏடு, எழுதுகோல் போன்ற பொருட்களைத் தானமாக வழங்கலாம். அல்லது ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் செய்யலாம்.

ஸ்ரீ சித்ர குப்தாய நமஹ !!!