மங்களாசாசனம் என்றால் என்ன ?

269

நித்ய விபூதி லீலா விபூதி மங்களாசாசனங்கள்

மங்களாசாசனம் என்றால் நன்றாக இரு என்று ஆசிர்வதித்தல் ஆகும். இதனை மங்களத்து ஆசாசனம் என்றும் கூறுவர். அனைத்தும் நல்லபடி ஆகட்டும் என்று ஆசிர்வதித்தல்.

வயதில் பெரியவர்கள் வயது குறைந்தவர்களை ஆசிர்வதிப்பர். வயதில் சிறியவர்கள் பெரியவர்களைப் பார்த்து மங்களம் உண்டாகட்டும் என்று மங்களாசாசனம் செய்வர்.

பெரியாழ்வார் அவ்வாறு தான் மங்களாசாசனம் செய்தார். பல்லாண்டு, பல்லாண்டு, பல்லாயிரத் தாண்டு என்று அவர் பகவானையே வாழ்த்தியவர். நித்திய விபூதி மற்றும் லீலா விபூதி ஆகிய இரண்டுக்கும் மங்களாசாசனம் செய்கின்றார் ராமானுஜர்.

இதில் நித்ய விபூதி என்றால் பூலோக வைகுண்டம் எனப்படும் திருவரங்கமாகும். பிரளய காலத்தில் படைக்கப்படாதது அழிக்க முடியாதது நித்ய விபூதியாகும்.

படைப்புக்கும் அழிப்புக்கும் உட்பட்டது லீலா விபூதியாகும். வைகுண்டத்தில் படைப்பும் அழிப்பும் செய்ய இயலாது. அது நித்யமாக இருப்பது. எனவே அதற்கு நித்ய விபூதி என்று பெயர்.

இந்த இரண்டு விபூதிக்கும் உடையவர் மகான் ராமானுஜர். நாம் கேட்பதை தரக்கூடியவர் பெருமாள்.
பக்தர்கள் கேட்டு கேட்டு பெருமாளும் கொடுத்து கொடுத்து சோர்வு அடைந்ததால் இவர்களுள் ஒருவரை படைத்து அவரிடமே அனைத்து பொறுப்பையும் ஒப்படைத்து விடலாம் என்று பெருமாள் முடிவெடுத்தார்.

அந்த முடிவை எடுத்து விட்டு நின்று கொண்டிருப்பவர் வேங்கடமுடையான். முடிவு எடுத்து விட்டு நின்று கொண்டிருக்கிறார் தேவர் பெருமான். முடிவு எடுத்து விட்டு நின்று கொண்டிருக்கிறார் திருநாராயணப் பெருமாள்.

திருவரங்கன் பார்த்தால் எப்போது பொறுப்பை கொடுத்து விட்டோமோ அப்போது படுத்துக் கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்து நித்ய சயனத்தில் படுத்து விட்டார்.

இரண்டு விபூதிக்கும் நாயகன் பகவான். உபய விபூதி நாயகன் பகவான். உடையவர் திருநாமம் சூட்டி இரு விபூதிக்கும் உடையவராக ராமானுஜர் பட்டம் சூட்டுகிறார்.

ராமானுஜருக்கு இந்த பலத்தை யார் கொடுத்தார் என்றால் அவரது சகோதரி ஆண்டாள் கொடுத்தாள். ‘‘வையத்துள் வாழ்வீர்காள்’’ என்று பூலோகத்தில் நன்றாக வாழ வழியும் காட்டி விட்டார்.

அதற்கு ஆச்சார்யார்களின் கடாட்சம் இருந்தால் போதும். நம்முடைய கணக்கில் பல்லாண்டு உண்டு. தேவர்களின் கணக்கிலும் பல்லாண்டு உண்டு. பிரம்மனின் கணக்கிலும் பல்லாண்டு உண்டு. அனைத்து பிரம்மாக்கள் கணக்கிலும் பல்லாண்டு உண்டு.

இந்த நான்கு கணக்குகளையும் சேர்த்து நான்கு முறை பல்லாண்டு சொல்லுகிறார். பெருமாள் வரவேண்டும். மங்களாசாசனத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.
அதன் காரணமாக ராமானுஜர் இருந்த இடத்தில் இருந்து கொண்டே மங்களாசாசனம் செய்கிறார்.

கலியுகத்தில் தனி மனிதன் ஒழுக்கமாக இருக்க வேண்டும் என்பதை உணர்ந்த ராமானுஜர் இருந்த இடத்திலேயே மங்களாசாசனம் செய்கின்றார். இரு விபூதி உடையவர்களுக்கு அருள்கின்றார்.

புராண காலத்தில் இருந்தே ஸ்ரீ ராமானுஜரின் உற்சவத்தை சொல்லுகின்றார்கள். முதலாம் யுகத்தில் தேவர்களால் போற்றப்படும் குணங்களுக்கு முடிவு சொல்ல முடியாத அனந்த ஆழ்வானாக (ஆதிசேஷன்) இரண்டாம் யுகத்தில் லட்சுமண னாகவும் மூன்றாம் யுகத்தில் பலராமனாகவும் நான்காம் யுகத்தில் ராமானுஜராகவும் அவதரித்தார் என்று விஷ்ணு புராணம் கூறுகிறது.

ப்ராம புராணத்தில் ஆழ்வார் திருநகரியில் உறங்கா புளியமரமாக இருப்பார் என்று கூறப் பட்டுள்ளது. விருத்த பாத்ம புராணத்தில் விஷ்வஸ்னேகராக அவதரிப்பார் என்று கூறப்பட்டுள்ளது.

நாதமுனிகள் காலத்திற்கு பின்பு திரிதண்டத் துடன் ராமானுஜர் எத்திராஜராக ஸ்ரீபெரும்புதூரில் இரு விபூதியும் கொடுக்கக் கூடியவராக அவதரிப்பார் என்று கூறுவர்.

அவர்தான் வேத வித்து. ஆதிசேஷன் அவதாரம். அவர்தான் கைங்கர்ய சாம்ராஜ்யம் புரிந்தவர். சரணாகதி சாஸ்திரத்தை அனைவருக்கும் தந்தவர்.

ஆசார்யன் திருவடிகளே சரணம்.