ஒரு வயசுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு ஜாதகம் எழுதலாமா?
பொதுவான அடிப்படையில், பிறக்கும் ஒரு குழந்தைக்கு, ஒரு வருடம் கழித்தே ஜாதகம் எழுத வேண்டும் என்ற நடைமுறை உள்ளது. ஒரு வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள், கடவுளின் குழந்தை என்றும், அதன் நல்ல, தீய பலன்களை இறைவனே நிர்ணயிப்பார் என்றும் பொதுவாக சொல்லப்படுகிறது.
1. குழந்தை பாலாரிஷ்ட தோஷத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதா? என்பதை அறிந்து, அதன் பிறகு ஜாதகம் எழுதப்பட வேண்டும் என்பதற்காக, இந்த விதி சொல்லப்பட்டிருக்கலாம்.
2. லக்ன சந்தியில் ஒரு குழந்தை பிறந்தால், எந்த இலக்கணம் என்பதை கணிப்பது, மிக, மிக, மிக சவாலான ஒன்று என்பதற்காகவும் சொல்லப்பட்டிருக்கலாம். பிறந்த நேரம் முன், பின் என்று மாறிவிட்டாலே லக்னம் மாறிவிடும். அதன் பிறகு ஜாதகருக்குரிய பலன் முற்றிலும் சொல்ல முடியாமல் போய்விடும்.
சில குழந்தைகள், பிறக்கும்போதே கடினமான சூழ்நிலையை கடந்து வரக்கூடிய கட்டாயம் இருக்கும். உதாரணமாக 2ஆவது மகன் பிறந்த போது, அவனுக்கு அட்டமாதிபதி திசை நடப்பில் இருந்தது. குழந்தை பிறந்தவுடன் அவனுடைய உள் பாதம் நீல நிறமாக இருந்தது. பிறந்து ஒரு மணி நேரத்திற்குள், மலம் கழித்தவுடன் கால்களின் நீல நிறம் மாறத் தொடங்கியது.
மருத்துவரிடம் கேட்டபொழுது ஆக்சிஜன் பற்றாக்குறையால், இந்த மாதிரியான பிரச்சனைகள் வந்திருக்கலாம் என கூறினார். இருந்தாலும், மருத்துவ கண்காணிப்பில் இருக்கவேண்டும் என்று சொல்லி, கொஞ்சம் பயமுறுத்தி, அரசு மருத்துவமனைக்கு எழுதிக் கொடுத்துவிட்டார்.
வீட்டில் எல்லோருக்கும் மன கலக்கம். அவனுடைய ஜாதகத்தில் லக்னாதிபதி ஆட்சி என்பதாலும், மற்ற அமைப்புகள் நன்றாக இருப்பதாலும், அன்றைய கோட்சார அமைப்புகள் சரியில்லை என்பதால், இது தற்காலிக பிரச்சனை தான் என்பது தெளிவாக தெரிந்தது. இருந்தாலும் இரண்டு நாள் மருத்துவ கண்காணிப்பில் படாதபாடு படுத்தி எடுத்து விட்டனர். கடைசியில் ஒன்றுமே இல்லை அனுப்பிவிட்டனர்.
இது நான் எதிர்பார்த்த ஒன்றுதான். அவனுடைய ஜாதகத்தில் பிறந்து ஒரு வருடம் வரை அட்டமாதிபதி திசை நடப்பில் இருந்தது. பெரிய அளவு பாதிப்பு எதுவும் இல்லை. அந்த இரண்டு நாளை தவிர. அவன் பிறந்த பொழுது நான் மருத்துவமனையில் தான் இருந்தேன் என்பதால், அவனுடைய பிறந்த நேரம் துல்லியமாக எனக்கு தெரியும்.
அவன் பிறந்த பொழுது, இந்த லக்னமாக இருந்தால், இந்த பிரச்சனை இருக்கும் என்பதையும் தெளிவாக உணர முடிந்தது.
மேற்கண்ட நிகழ்ச்சிகள் அதை உறுதிப்படுத்தவும் செய்தன. குழந்தை பிறந்து ஒரு வருடம் கழித்தே அதன் கடந்த கால, நல்ல அல்லது தீய பலன்களை வைத்து அதன் லக்னத்தை முழுமையாக கணிக்க முடியும் என்பதால், இந்த விதி சொல்லப் பட்டிருக்கலாம். ஆதலால் குழந்தை பிறந்து, ஒரு வருடம் கழித்தே ஜாதகம் எழுத வேண்டும் என்ற விதிமுறை வகுக்கப்பட்டிருக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.